புதுமையான தலைவர்...

'எங்கள் நாட்டிற்கு தேவைக்கு அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளன. தேவைப்படுவது பள்ளிகள்தான்'' என்கிறார் புர்கினா ஃபாசோ நாட்டின் தலைவர் இப்ராகிம் திரௌரே.
புதுமையான தலைவர்...
Published on
Updated on
2 min read

'எங்கள் நாட்டிற்கு தேவைக்கு அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளன. தேவைப்படுவது பள்ளிகள்தான்'' என்கிறார் புர்கினா ஃபாசோ நாட்டின் தலைவர் இப்ராகிம் திரௌரே.

இருநூறு பள்ளிவாசல்களை இலவசமாகக் கட்டித் தருவதாகக் கூறிய சவூதி அரேபிய அரசிடம் அவர் சொன்ன வார்த்தைகள்தான் இவை.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்க்கினா ஃபாசோவில் சுமார் இரண்டே கால் கோடி மக்கள் வாழ்கின்றனர். இதன் எல்லைகளாக வட மேற்கில் மாலி, வட கிழக்கில் நைஜர், தென் கிழக்கில் பெனின், தெற்கில் டோகோ, கானா, தென் மேற்கில் கோட்டிவார் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் பலவும் பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தவை. 'புர்கினோ ஃபாசோ'வும் காலனி ஆதிக்கத்துக்குள் அடிமையாக இருந்தது.

'மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து ஆப்பிரிக்கா கண்டத்தை மீட்போம்' என்று குரல் கொடுத்து வந்தவர் இப்ராகிம் திரௌரே. இவருக்கு வயது முப்பத்து ஏழு. ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களில் மிகவும் குறைந்த வயதுக்காரர்.

இவர் 2009-இல் புர்கினா ஃபாசோவின் ராணுவத்தில் இணைந்து, படிப்படியாக பதவி உயர்வு பெற்று கடைசியில் ஆட்சியையும் 2022-இல் பிடித்தார். புரட்சியாளரான தாமஸ் சங்காரா எழுச்சியை ஜீரணிக்க முடியாத மேற்கத்திய சக்திகள் அவரைச் சுட்டுக் கொன்றன.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே சிவந்த மண்ணிலிருந்து இப்ராகிம் என்ற புரட்சியாளர் உருவாகியிருக்கிறார். நீண்ட காலமாகவே வறுமை, துக்கம், சோகம், துயரத்தை அனுபவித்துகொண்டிருக்கும் 'புர்கினோ ஃபாசோ' நாட்டின் தலைவிதியை மாற்றும் நோக்கத்துடன் இவர் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு மேற்கத்திய நாடுகள் விடுதலை தந்தாலும், கனிம வளச் சுரண்டலைத் தொடர பொம்மை அரசை நிறுவுகின்றன. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் மேற்கத்திய நாடுகளின் குறிப்பாக பிரான்ஸ் நாட்டின் பொருளாதார அடிமைகளாகத் தொடர்கின்றன. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் நாணயப் புழக்கமும் பிரான்ஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், பிரான்ஸூக்கு நிலையான வருவாய் கிடைத்துவருகிறது.

ஆப்பிரிக்க நாடுகள் சம்பாதிக்கும் அந்நியச் செலவாணியில் பாதி பிரான்ஸ் வங்கிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதோடு, இதற்கான வட்டியை பிரான்ஸூக்கு வழங்க வேண்டும் .

இப்ராகிமும் தனது இரண்டு ஆண்டு ஆட்சியில் வெளிநாட்டு கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த அரசு சுரங்க நிறுவனத்தை நிறுவுதல், பண்ணை இயந்திரங்களை விநியோகித்தல், கிராமப்புறச் சாலைகள், புதிய விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கியுள்ளார்.

உலக வங்கி, சர்வதேச நாணயம் நிதியகம் கடன் வழங்க முன்வந்த போது 'வேண்டாம்' என நிராகரித்தார். உள்நாட்டுக் கடனை அடைத்ததுடன் அரசு ஊழியர்களின் ஊதியத்தை 50 சதவீதம் உயர்த்தினார். 2023-இல் பிரெஞ்சு ராணுவத்தை நாட்டைவிட்டு வெளியேற்றினார்.

இருந்தாலும், நாட்டில் வன்முறை ஆங்காங்கே நடக்கிறது. இரண்டு ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டிருப்பதாக உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியகமும் பாராட்டியுள்ளன. இப்ராகிமும் ரஷியாவுடன் நட்புக் கரம் நீட்டியுள்ளார்.

நவகாலனித்துவ செல்வாக்குக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக இப்ராகிமை சமூக ஊடகங்களும் உயர்த்திப் பிடித்துள்ளன. 'மேற்கத்திய நாடுகள் சொல்வது போல தலை ஆட்டாதீர்கள்' என்று இப்ராகிம் சொன்னது ஆப்பிரிக்க நாடுகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

புர்கினா ஃபாசோவின் நிர்வாகத்தை சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. ஆரம்பம் நன்றாக இருக்கிறது. புர்கினா ஃபாசோ இப்ராகிம் நிர்வாகத்தின் கீழ் மேலும் பயணிக்க மேற்கத்திய வியாபார அரசியல் எவ்வளவு தூரம் அனுமதிக்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால், ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிக ஆட்சிக் கவிழ்ப்புகளைச் சந்தித்த நாடு புர்கினா ஃபெசோ.

-பிஸ்மி பரிணாமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com