
'17 ஆண்டுகளுக்கு முன் நாகப்பட்டினம்- காங்கேசன்துறை கப்பல் பயணச் சேவை ஏற்பட வேண்டும் என்று முயன்றேன். இரு ஆண்டுகளுக்கு முன் அந்தக் கப்பல் சேவை தொடங்கியபோது, விழாவில் கலந்துகொண்டேன். ஆனால், முதல் முதலாக இந்த வழித்தடத்தில் இப்போதுதான் பயணித்தேன். மகிழ்ந்தேன்'' என்று சொல்கிறார் மறவன்புலவு க.சச்சிதானந்தம்.
பயணம் எப்படி? அவர் தொடர்ந்து கூறுகிறார்.
இந்தமுறை இலங்கைக்கு கப்பலில் போவதாக இருந்தேன். சென்னையில் இருந்து நாகப்பட்டினத்துக்கு ரயிலில் கிளம்பி, 20.6.2025 அன்று அதிகாலை 4.30 மணிக்கு வந்து சேர்ந்தேன். நடைமேடையில் இறங்கியதும் கைப்பேசி அழைப்பு.
'நான் கௌதமன் பேசுகிறேன். கார் பார்க்கிங்கில் காத்திருக்கிறேன்'' என்றார். வெளியே வந்து அவரது காரில் ஏறியதும், 'உங்களுக்காக ஓட்டலில் அறை போடப்பட்டிருக்கிறது''
என்றார்.
'சிலமணி நேரங்களில் கப்பலில் ஏற வேண்டும். ஓட்டலுக்கு வேண்டாம். உங்களது அலுவலக அறையில் தங்கிக் கொள்கிறேன்'' என்றேன். அவரது அறைக்கு அடுத்துள்ள அறையில் தங்கச் சொன்னார். உடனே என்னைத் தயார்படுத்திக் கொள்ள முனைந்தேன். காபி வந்தது. நல்ல அருமையான காபி. காலை ஆறு மணியளவில் என்னை அழைத்துச் செல்ல கார் வந்தது.
துறைமுகம் செல்லும் சாலை. கரடுமுரடாக இருந்தது. நடுவில் ரயில் பாதை. அதைக் கடந்துதான் துறைமுகம் செல்ல வேண்டும். ரயில் வருகிற நேரங்களில் காத்திருக்க வேண்டும். எனது எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்டவராகச் சொன்னார், 'பக்கத்தில் மேம்பால வேலை நடைபெறுகிறது. அந்த வேலை முடிந்துவிட்டால் வழி சுலபமாகிவிடும்'' என்றார்.
துறைமுகத்துக்குள் நுழைந்ததும் அழகான, வசதியான அமைவிடங்கள். நாகை- காங்கேசன்துறை கப்பல் வழி போக்குவரத்து தொடக்க நாள் விழா 14.10.2023-அன்று விழாவுக்காக வந்திருந்தேன்.
கடல்சார் வாரியத்தின் அன்பழகன், தமிழ்நாடு அரசின் பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஒவ்வொன்றாக அப்போதே காட்டியிருந்தார்.
துறைமுகத்துக்குள் நுழைந்ததும் காவலர் பயணச்சீட்டு, பாஸ்போர்ட் கேட்டார். கொடுத்தேன். கௌதமன் (சுபம் கப்பல்) இடைமறித்து, 'பட்டியலில் பெயர் உள்ளது. உள்ளே சென்றதும் பயணச்சீட்டு கொடுப்போம்' என்றார்.
சுபம் கப்பலாரின் நாகை மேலாளர் இராசராசன் என்னை வரவேற்று, சால்வை அணிவித்தார். கூடியிருந்தவர்கள் கைதட்டினர். வரிசையில் செல்லாமல் என்னைத் தனியே அழைத்துச் சென்றனர். நுழைவுச்சீட்டையும் தந்தனர்.
வழக்கமான சோதனைகள் முடிந்து உள்ளே சென்றேன். பயணச்சீட்டுக்கான தொகையை மேசையில் வைத்தேன். சுபம் கப்பல் மேலாண் இயக்குநர் சுந்தரராசனிடம் பேசுமாறு கூறி போனை இராசராசன் தந்தார். 'உங்கள் முயற்சியாலேயே நாகப்பட்டினம்- காங்கேசன் பயணிகள் கப்பல் சேவை வந்ததை அறிவோம்.
நீங்கள் இன்று வந்திருக்கும் இந்த வேளையில் 110 பயணிகள் கப்பலில் பயணம் செய்கிறார்கள். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார். தொடர்ந்து 'உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. விரைவில் சந்திப்பேன்'' என்றார்.
நான் உடனே, 'பயணச்சீட்டு தொகையை இராசராசன் வாங்க மறுக்கிறார்'' என்றேன்.
'ஐயா.. இந்தக் கப்பல் ஓடும் காலம் வரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பயணம் செய்யலாம். பயணச்சீட்டு கட்டணம் இல்லை'' என்றார். ரயிலடியில் இருந்து இந்தப் பயணத்துக்கான இந்த நேரம் வரை உடன் வந்து ஒத்துழைத்த இராசராசனுக்கு நன்றி சொன்னேன். 'பயணச்சீட்டுக்குத் தொகை கொடுக்காமல் பயணம் செய்வது முறையல்லவே'' என்றேன். அவர், 'ஐயா.. இதோ வருகிறேன்'' என்று சென்றார்.
கப்பல் புறப்படும் நேரம் வந்தது. இராசராசன் வந்தார். பயணிகள் கப்பலுக்குள் வரிசையாகச் சென்றனர். என்னை ஒரு காரில் ஏற்றி இராசராசன் கப்பலின் வாயிலுக்கு அழைத்துச் சென்றார். என்னை நல்ல இருக்கையில் அமர்த்தினார் விடைபெற்று சென்றார்.
கப்பலின் மாலுமி என்னிடம் வந்து வணக்கம் சொன்னார். 'வசதியாகப் பயணம் செய்யுங்கள். ஏதேனும் தேவை என்றால் என்னிடம் கேளுங்கள்'' என்றார்.
காலை 8.15 மணிக்கு வங்கக் கடலில் இடசை நீரோட்டம். வடக்கு நோக்கிய நீரோட்டம். தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலம். கடலில் அலைகள் இல்லை. குளத்தில், ஏரியில் பயணிப்பது போன்ற ஒரு மாயை.
எனக்கு மேற்குப் புறமாக தமிழ்நாட்டின் வேதாரண்யம், கோடியக்கரை,.. பகுதிகள் ஒவ்வொன்றாகப் பின்னோக்கி கடந்தது. பின்னர், அதிராம்பட்டினம் தெரிந்தது.
சற்று நேரத்தில் இலங்கை தேசியக் கொடியை கப்பலில் ஏற்றினர். 'இலங்கை எல்லைக்குள் கப்பல் வந்துவிட்டது' எனக் கருதினேன்.
பயணிகள் 110 பேர். பொருள்களை வாங்கி விற்கும் 'குருவிகள்' என்று அழைக்கப்படுவோர் 60 பேர். அவர்கள் ஒவ்வொருவரும் கொண்டு வந்திருக்கும் 80 கிலோ பொருள் என மொத்த எடை காரணமாக, கப்பல் மணிக்கு 18 கடல் மைல் வேகத்தை 15-ஆகக் குறைந்துவிட்டது. வழக்கமாக, 4 மணி நேரப் பயணம், அன்று 5 மணி நேரமாகப் பயணம் நீண்டது.
காங்கேசன்துறையை கப்பல் 13.15 மணிக்கு அடைந்தது. சுபம் கப்பலாரின் காங்கேசன் துறை முகவர் செய
சீலன் என்னைத் தேடினார். முன்னுரிமை கொடுத்து அழைத்துச் செல்ல.. கப்பலில் வந்த பயணிகளில் திருநெல்வேலியைச் சேர்ந்த 40 பேர் வண்ணப்பூச்சு நிறுவனத்தினர். சுற்றுலாவாக வந்திருந்தனர்.
பயணத்தில் நட்பானார்கள். அவர்களிடம் விடை பெற்று, இலங்கை மண்ணில், தாய் மண்ணில் கால் வைத்தேன். மனம் துள்ளியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.