திரும்பிப் பார்க்க வைக்கும் மருத்துவர்!

ஒப்பந்தத் தொழிலாளியின் மகளாகப் பிறந்து, திசை எட்டும் கிடைத்த உதவியால் அரசு மருத்துவராகி, தன்னைப் போல உயர்கல்வி கற்க திக்கற்றுத் தவிக்கும் இளம் தலைமுறையினருக்குத் திசைகாட்டும் கருவியாக உயர்ந்து நிற்கிறார் ராகவி ரவிச்சந்திரன்.
திரும்பிப் பார்க்க வைக்கும் மருத்துவர்!
Published on
Updated on
2 min read

ஒப்பந்தத் தொழிலாளியின் மகளாகப் பிறந்து, திசை எட்டும் கிடைத்த உதவியால் அரசு மருத்துவராகி, தன்னைப் போல உயர்கல்வி கற்க திக்கற்றுத் தவிக்கும் இளம் தலைமுறையினருக்குத் திசைகாட்டும் கருவியாக உயர்ந்து நிற்கிறார் ராகவி ரவிச்சந்திரன்.

சிறுவயதிலேயே தனது தாயையும், சகோதரியையும் இழந்து தந்தையின் அன்பால் வளர்க்கப்பட்ட அவர், தற்போது உயர்கல்வி கற்போருக்கு வழிகாட்டியாக இருப்பதுடன், அவ்வப்போது தன் தலைமுடியைத் தானமாக அளித்து புற்றுநோய்க்கு எதிரான பிரசாரத் தூதராகவும் விளங்குகிறார்.

இதன் பின்னணியின் எத்தனை கண்ணீர், எத்தனை துயரம், எத்தனை ஏளனம், எத்தனை விமர்சனங்கள், எத்தனை எள்ளல்களைக் கடந்து அவற்றையெல்லாம் பொருள்படுத்தாது, சிங்கப் பெண்ணாகப் புறப்பட்டு சாதித்து காட்டியுள்ளார்.

அவரிடம் பேசியபோது:

'நடுத்தரக் குடும்பம் என்று சொல்லிவிடாமலும், ஏழைக் குடும்பம் என்ற வரையறுக்கப்படாமலும் இரண்டுக்கும் இடையே உள்ள ஒரு நிலையில் இருந்தது எங்களது குடும்பம். திருச்சி பெல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரியும் எனது தந்தையின் வருவாய்தான் எனது கல்விச் செலவுக்கு என்றானது.

சிறிய அறை அளவுக்குதான் எங்களது வீடு. மூன்று வேளை உணவு என்பது சாத்தியமானது. மற்றவை அனைத்துக்கும் போராட்டமே. சிறுவயதில் எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார் அப்பா. அங்கு, நான் மருத்துவரைக் கண்ட விநாடிதான் எனக்குள்ளும் மருத்துவராகும் ஆசையை விதைத்தது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றதால், நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற தனியார் பள்ளியில் இலவசமாக பிளஸ் 2 படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மருத்துவப் படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 199 பெற்றதால், எந்த மருத்துவக் கல்லூரியை வேண்டுமானாலும் தேர்வு

செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. இருப்பினும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்தேன்.சிறு வயதில் நான் பார்த்து வியந்த பலரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்களாக இருந்ததாலேயே அந்தக் கல்லூரியைத் தேர்வு செய்தேன்.

கல்வி, விடுதிக் கட்டணங்களுக்கு எனது தந்தை என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வி எனது மனதில் எழுந்ததது. உறவினர்களும், நண்பர்களும் மருத்துவப் படிப்பை தொடர முடியுமா? என்ற கேள்வியையும் எழுப்பினர். அதற்கான செலவை எனது தந்தையால் ஈடு செய்ய முடியுமா? எனவும் கூறினர். எப்படியும் மருத்துவராக வேண்டும் என்ற எனது தன்னம்பிக்கை ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு முன்னேறிச் சென்றேன்.

பள்ளிப் படிப்பில் அதிக மதிப்பெண், மருத்துவப் படிப்புக்கான கட்--ஆஃப் மதிப்பெண் போன்றவையே சாதனை என்ற எனது வெற்றிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பல்வேறு திசைகளில் இருந்து உதவிக்கரம் நீண்டன. சுற்றம், அறிந்தோர், அறியாதோர், தொண்டுள்ளம் கொண்டோர் என பலரும் எனக்கான கல்விக் கட்டணத்தையும், விடுதிக் கட்டணத்தையும் செலுத்தினர்.

'உதவி கிடைக்கிறதே என்பதற்காக பொறுப்பேற்ற முறையில் இருந்துவிடக் கூடாது' என்பதற்காக, விடுதியில் குறைந்த விலையாக வழங்கப்பட்ட சைவ உணவையே தேர்வு செய்தேன். நான்கரை ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்து, 'ஹவுஸ் சர்ஜன்' என்ற அந்தஸ்தை பெற்றபோது முதல் சம்பளம் கிடைத்தது. அந்த ஊதியத்தைப் பெற்ற பிறகே, விடுதியின் அசைவ உணவுக்கு மாறினேன்.

அன்றுமுதல் என் ஊதியத்தில் இருந்துதான் உணவு. இதரத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறேன்.

2020-இல் அரசு மருத்துவரானேன். சென்னை, திருவாரூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட, கொடும்பாளூர் அரசு மருத்துவமனையின் வட்டார மருத்துவ அலுவலராகப் பணிபுரிந்தேன். அரசுப் பணியைத் தொடர்ந்தபடியே, சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி. ரேடியாலஜி பயின்றுவருகிறேன்.

நான் பட்ட கஷ்டங்கள், துயரங்களைப் போல இன்னும் பலரும் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் உயர்கல்விச் சேவை அளித்து வரும் 'பி.எஸ்.ஆர். அறக்கட்டளை'யில் இணைந்தேன்.

இந்த அறக்கட்டளை மூலம், ஆண்டுதோறும் 50 பேருக்கு உயர்கல்வியை இலவசமாகத் தொடருவதற்காக உதவிகள் வழங்கப்படுகின்றன. பள்ளிக் கல்வி, மருத்துவம், சமூகச் சேவை, முதியோர் நலன், குழந்தைகள் நலன், ஆதரவற்றோர் நலன் என பல நிலைகளில் சமூகப் பணியாற்றுகிறோம்.

கண்ணுக்கு தெரியாத 'ஆயிரம் கரங்கள்' கைகொடுத்து வருகின்றன. அந்தக் கரங்களில் ஒரு கரமாக எனது கரமும் இணைந்திருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது. அதோடு மட்டுமல்லாது, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். வெறும் பிரசாரத் தூதுவராக இல்லாமல், நானே முன்மாதிரியாக ஆண்டுக்கு ஒருமுறை எனது முடியை புற்றுநோயாளிகளுக்காக தானமாக வழங்கி வருகிறேன்.

அதிகம் வழங்க வேண்டாம். 12 இஞ்ச் வழங்கினால் கூட போதுமானது. என்னுடைய முயற்சியைப் பின்பற்றி சமூகத்தில் மேலும் ஒருவரை வழங்கச் செய்தாலே சந்தோஷம். சமூகம் எனக்கு அளித்த உதவிகளை, நான் மீண்டும் இந்த சமூகத்துக்கே திரும்ப வழங்குகிறேன்'' என்கிறார் தன்னடக்கத்துடன் ராகவி ரவிச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com