
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது நாட்டின் பண்பாட்டு வளத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில் அணிந்து வரும் சேலைகள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த ஆண்டு அவர் அணிந்திருந்த பீகாரின் பாரம்பரிய மதுபானி கலையின்படி உருவாக்கப்பட்ட மீன் வடிவங்கள் இடம்பெற்றிருந்த தங்கநிற பார்டர் கொண்ட கிரீம் கலர் கைத்தறிச் சேலையும், சிவப்புநிற ரவிக்கையையும் உருவாக்கி பரிசளித்தவர் பீகாரைச் சேர்ந்த மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 'பத்மஸ்ரீ' விருது பெற்ற துலாரி தேவி.
இந்தச் சேலையின் டிசைனை மறுஉருவாக்கம் செய்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ரம்யா தேவநாதன். தனது 'யூ டியூப்' சேனல் மூலமாக அந்தச் சேலையை அறிமுகம் செய்த உடனேயே, அது ஏராளமான பெண்களைக் கவர்ந்துவிட்டது. இணையத்திலும் ஆர்டர்கள் குவிந்துவருகின்றன.
அவரிடம் பேசியபோது:
'நான் பி.இ. கணினி அறிவியல் முடித்துவிட்டு, டி.சி.எஸ். நிறுவனத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றினேன். எனது உறவினர்களும், அலுவலக நண்பர்களும் எனக்கு சேலைகள் தேர்வு செய்வதில் நல்ல ரசனையும், திறமையும் இருக்கிறது என்று கூறி, துணிகளை வாங்கப் போகும்போது என்னையும் அழைத்துச் செல்வார்கள். 'இந்தத் திறமை இருக்கிறதே! அதைப் பயன்படுத்தி ஒரு வியாபாரம் ஆரம்பித்தால் என்ன?' என்ற எண்ணம் தோன்றியது.
மக்கள் தங்களுக்குப் பிடித்த சேலைகளையும், இதர ஆடைகளை வாங்குவதற்கு பல கி. மீ. பயணம் செய்ய வேண்டியுள்ளது. இன்றைய நெரிசலான உலகத்தில் மக்களுக்கு இது சிரமமாக உள்ளது. இதனால் இணைய வணிகமாகவே இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.
இந்த நேரத்தில் கரோனா காலமும் வந்துவிட்டது. மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும், தங்களுக்குத் தேவையான பொருள்களை இணையத்திலேயே வாங்கினர்.
இதையே நானும் பின்பற்றினேன். காஞ்சிபுரம், ஆரணி, சேலம், தேனி, ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் நெசவாளர்களைச் சந்தித்துப் பேசி, நாங்கள் உருவாக்கித் தரும் டிசைன்களில் சேலைகளை நெசவு செய்து கொடுக்க ஏற்பாடு செய்தேன்.
'யூடியூப்' சேனல் மூலமாக சேலைகளை அறிமுகப்படுத்துவதும், வாட்ஸ் ஆஃப் மூலமாக ஆர்டர் கொடுக்கவும், தகவல் பரிமாற்றம் செய்துகொள்வதும்தான் எனது வியாபார முறையாகும். '1921 செப்டம்பர்' பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் 'மெட்ராஸ் சாரீஸ்' என்ற பெயரில் இணையமுறையில் வணிகத்தை ஆரம்பித்தேன்.
முதல் நாள் தொடங்கி தினமும் ஒரு டிசைனில் சேலை அறிமுகம் செய்தேன். டிசைன் ஒன்று என்றாலும், பல வண்ணங்களில் சேலைகள் கிடைக்கவும் வழி செய்தேன். ஆரம்பித்த சில மாதங்களில் யூடியூப் சேனலுக்கு ஆயிரம் பேர் சேர்ந்தனர். புதுப் புது சேலைகளை உருவாக்கி அறிமுகப்படுத்த, சேனலுக்கு வரவேற்பு அதிகமானது. ஆர்டர்களும் குவியத் துவங்கின. தற்போது சேனலுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருக்கின்றனர்.
திரையுலகத்தினரும், பிரபலங்களும் மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களைக் கொண்டு சேலைகள், நவீன உடைகளை வடிவமைத்து அணிகின்றனர். அந்த விலை உயர்ந்த சேலைகளின் டிசைன் சாமானியப் பெண்களுக்குப் பிடிக்கின்றன. சாமானியர்களும் வாங்கக் கூடிய விலையில் அந்த சேலைகளை சில்க் காட்டன் அல்லது பருத்தி சேலைகளாக அந்த டிசைன் மற்றும் வண்ணக் கலவையை மறு உருவாக்கம் செய்து கொடுத்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது.
அந்த சமயம் பார்த்து, அம்பானி குடும்பத் திருமணத்துக்கு நீடா அம்பானி, நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்ட பிரபலங்கள் அணிந்துகொண்டு வந்த சேலைகள் மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன. இந்தச் சேலைகளை மறுஉருவாக்கம் செய்தோம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் சந்தித்தபோது நீடா அம்பானி அணிந்திருந்த சேலை வைரலானது. அதையும் மறு உருவாக்கம் செய்தோம். சமந்தா, சுஹாசினி, பிக் பாஸ் சவுந்தர்யா, பாடகி சித்ரா, ஹிந்தி நடிகை ரேகா உள்ளிட்டோர் அணிந்த சேலைகளை அடுத்தடுத்து சில்க் காட்டன் சேலைகளாக மறு உருவாக்கம் செய்திருக்கிறோம்.
திரைப்படங்களில் குறிப்பிட்ட காட்சிகளில் கதாநாயகிகள் உடுத்தும் சேலைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஆகிவிடும். உதாரணம், 'மெளனராகம்' படத்தில் ரேவதி அணிந்த ஒரு சேலையைக் சொல்லலாம். அவைகளையும் நாங்கள் மறு உருவாக்கம் செய்திருக்கிறோம்.
பிரபலம் அணிந்துகொண்டு மக்கள் கவனம் ஈர்த்த சேலையின் புகைப்படம், விடியோவில் இருந்து அந்த டிசைனை பார்த்து அப்படியே அதை வரைந்து கொள்வோம். அதன் பிறகு அந்த டிசைன் ஓவியத்துக்கு ஒரிஜினல் சேலை டிசைனில் என்னென்ன வண்ணம் உள்ளதோ அதை அப்படியே உருவாக்குவோம்.
அப்படி உருவாக்கப்பட்ட டிசைனை சேலையில் நெய்ய வேண்டும். ஒரே டிசைன் என்றாலும், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வண்ணம் பிடிக்கும் என்பதால், அதே டிசைனில் நாலைந்து வண்ணங்களில் சேலைகள் நெய்யப்படும்.
இந்த வியாபாரத்துக்கு எனது தம்பி மனைவியும், புகைப்படக் கலைஞருமான விபிஷா உறுதுணையாக இருக்கிறார். செலிப்ரிட்டிகள் அணியும் விலை உயர்ந்த விலையிலான டிசைன் சேலைகளை 1,500 ரூபாய் ரேஞ்சில் சாமானியர்கள் அணிந்து மகிழும்போது, எங்களுக்கு வியாபார வெற்றியையும் கிடைக்கும் மனத் திருப்தியே அலாதிதான்!
அதே சமயம், ஒரு சேலையை மறு உருவாக்கம் செய்யும்போது, ஒரிஜினல் சேலை டிசைனில் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவில் தத்ரூபமாக உருவாக்க முடியும்.
எங்களுக்கு விற்பனை ஷோரூம் கிடையாது. இணையத்தில் வரும் ஆர்டர்களை பேக் செய்து, கூரியர் கட்டணம் வாங்காமல், வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்கிறோம்'' என்கிறார் ரம்யா தேவநாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.