
விரைவாகச் செல்வதற்காகவே பெரும்பாலானோர் அதிகக் கட்டணம் அளித்து விமானத்தில் பயணிக்கின்றனர். அனைத்து விமான நிலையங்களிலும் காபி, தேநீர், குடிநீர் பாட்டில் விலை பல மடங்கு அதிகமாகவே இருக்கிறது.
இருப்பினும், கொல்கத்தா சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தில் புதிதாகச் செயல்படும் 'உடான் யாத்ரி கஃபே' யில் ரூ.20-க்கு காபி , ரூ.10-க்கு தேநீர், ரூ.20-இல் சமோசா, ரூ.10-க்கு குடிநீர் பாட்டில் என பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
அதனால் கூட்டம் அலைமோதுகிறது. வெளியில் கிடைக்கும் விலைக்கு விமான நிலையத்தில் கிடைப்பதால், 'உடான் யாத்ரி கஃபே' க்கு விமானப் பயணிகளிடேயே நல்லதொரு வரவேற்பு.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து சிக்கன விலையில் உணவு விற்பனை செய்யும் 'உடான் யாத்ரி கஃபே' யை விமானம் புறப்படும் பகுதியில் தொடங்கியுள்ளது.
2024 டிசம்பர் 21-இல் கொல்கத்தா விமான நிலையத்தின் நூற்றாண்டு விழாவின்போது திறக்கப்பட்ட கஃபே இப்போது அகில இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது. நாள்தோறும் சுமார் 1,000 பயணிகள் இந்த கஃபேவை பயன்படுத்துகின்றனர்.