நடிகர் மாதவனைப் பங்குதாரராகக் கொண்டு வந்துள்ளது 'பேரண்ட் ஆர்மி' என்கிற செயலி.
இந்தச் செயலி பெற்றோருக்கு அடங்காமல் தறி கெட்டு தாராள சுதந்திரங்களுடன் இயங்கும் குழந்தைகளின் சமூக ஊடகம் மற்றும் இணைய உலகின் ஈடுபாட்டையும் செயல்பாட்டையும் கண்காணிக்கிறது. உடனிருந்து பெற்றோர்கள் கவனிக்க முடியாத சூழலில் இந்தச் செயலி கண்காணித்து அவர்களுக்கு உதவுகிறது.
இதன் மூலம் குழந்தைகளைக் கண்காணிக்கவும் நல்வழிப்படுத்தவும் வாய்ப்பாக அமைகிறது. இந்தச் செயலியை அறிமுகப்படுத்தி வைத்து நடிகர் மாதவன் பேசும்போது....''ஒரு பெற்றோராக இன்று ஊடகங்கள் செய்யும் தாக்கத்தை உணர்ந்திருப்பீர்கள். பெற்றோரை விட அவற்றின் மூலம் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள்.
இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது. அது நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. எப்போதும் திரை பார்த்துக் கொண்டிருப்பது, சமூக ஊடகங்களில் உலவுவது என்று இருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிப்பது என்பது பெற்றோர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது. என் மகனைத் தேடி நாலைந்து நண்பர்கள் வருவார்கள்.
நான் கண்ணாடி அறையில் இருக்கிறேன் . அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள் என்று என் மனைவியிடம் கேட்பேன். அவர்கள் எல்லோரும் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள் என்பார். அந்த ஐந்து பேரும் ஒரு தனி அறையில் இருந்தால் கூட அவர்கள் தனித்தனியான உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். ரீல்ஸ் பார்ப்பது, கேம் விளையாடுவது என்று இருக்கிறார்கள். என் குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள் என்று பயமாக இருக்கிறது. எங்கள் குழந்தைகள் இது போன்றதைப் பார்த்து வளராமல் இருக்க ஆசைப்படுகிறேன்.
இந்தச் செயலியில் குழந்தைகள் சமூக ஊடகங்களை எந்தளவுக்குப் பயன்படுத்தலாம் அல்லது எந்தளவு திரை பார்க்கலாம் என்பதைக் கட்டுப்
படுத்த முடிகிறது. நான் அனுப்பும் செய்திகளைப் பற்றி கவனம் வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகள் குழந்தைகளாக இருக்க கவனமாக இருங்கள்'' என்றார்.