காதல் நினைவுச் சின்னங்களில் புகழ்பெற்ற தாஜ் மஹாலை போலவே, பல மன்னர்களும் நினைவுச் சின்னங்களை எழுப்பியுள்ளனர். இந்த வரிசையில் தஞ்சாவூர் இரண்டாம் சரபோஜி என்கிற மராட்டிய மன்னரும் ஒருவர்.
1777 - 1832- ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த இவர் 1798-இல் அரசப் பதவியை ஏற்றார். கலை, இலக்கியம், மருத்துவம், ஆராய்ச்சி.. என பல்துறை வித்தகரான இவருக்கு இரு மனைவிகள். இவர்களுக்கு முன்பாகவே முத்தாம்பாளை மணம் செய்தார். இளம் வயதிலேயே காலமான முத்தாம்பாள், தான் இறப்பதற்கு முன்பு தனது பெயரில் அன்ன சத்திரம் அமைக்க வேண்டும் என வேண்டினார். இதன்படி, ஒரத்தநாட்டில் அன்னசத்திரத்தை நிறுவினார் மன்னர் இரண்டாம் சரபோஜி.
இதை 'முத்தாம்பாள் சத்திரம்' என்றும், 'முக்தாம்பாள் சத்திரம்' எனவும் அழைக்கின்றனர். ராமேசுவரம் செல்லும் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட இந்தச் சத்திரம் 1802 ஜனவரி 16-இல் திறக்கப்பட்டதாக போன்ஸ்லே வம்ச சரித்திரம் கூறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மராட்டிய மன்னர்களால் எழுப்பப்பட்ட சத்திரங்களில் மிகப் பெரியதும் இதுவே.
அரண்மனை போன்றுள்ள சத்திரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கலைநயமிக்க ஊஞ்சல் மேடை, அடித்தளத்திலும், மேல் தளத்திலும் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் 3 வேளைகளும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் கட்டணம் இல்லாமல் நடத்த அனுமதிக்கப்பட்டது.
இந்தச் சத்திரத்துக்கு உமையாள்புரத்திலிருந்து 1825- இல் 13,007 கலங்கள் நெல் அனுப்பப்பட்டுள்ளதைக் காணும்போது, எந்த அளவுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ரெசிடென்டாக இருந்த ஆங்கிலேயர் அங்கிருந்த 5 கல்வி நிலையங்களைப் பார்த்து, 641 பேர் கல்விப் பயின்று வருவதையும், ஒரு நாளைக்கு மூன்று வேளைகளும் 4,020 பேர் சாப்பிடுவதையும், இதற்காக ஓராண்டுக்கு 45 ஆயிரம் கலம் நெல் வருவதும், பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 9 ஆயிரம் செலவானதையும் ஆவணத்தின் மூலம் தெரிந்து கொண்டார்.
அந்தக் காலத்தில் இந்தச் சத்திரத்துக்கு தென்னமநாடு, புதூர், கண்ணந்தங்குடி கிழக்கு, வன்னிப்பட்டு ஆகிய கிராமங்கள், பிற நில மானியங்கள் மூலம் ஆண்டுதோறும் ஏறத்தாழ ரூ. 50 ஆயிரம் வரையில் வருவாய் கிடைத்தது.
ஆங்கிலேயர் ஆட்சியிலும் பராமரிக்கப்பட்டு வந்த இந்தச் சத்திரம் சுதந்திரத்துக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்கும் சத்திர நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. காலப்போக்கில் பராமரிப்பின்மையால், சிதிலமடைந்தது. சத்திரத்தின் கட்டுமானம் பலவீனமடைந்ததால், இங்கிருந்த மாணவர் விடுதியும் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
பின்னர், முத்தாம்பாள் சத்திரத்தைத் தமிழ்நாடு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் அரண்மனை, மனோரா, பாபநாசம் நெற்களஞ்சியம் உள்ளிட்ட வரிசையில் 6-ஆவது நினைவுச் சின்னமாக அறிவித்தனர். தற்போது இந்தக் கட்டடத்தைப் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு, பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறையின் தஞ்சாவூர் மண்டல உதவி இயக்குநர் த. தங்கதுரை தெரிவித்தது:
'முத்தாம்பாள் சத்திரத்தைப் புதுப்பிப்பதற்காக ரூ.30.79 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்ததைத் தொடர்ந்து, தொல்லியல் துறை மூலம் புதுப்பிக்கும் பணி ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. கட்டடத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளன. மீண்டும் முளைக்காதவாறு ரசாயனக் கலவை மூலம் பூசப்பட்டு அதன் பின்னர் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தச் சத்திரம் பள்ளியாகவும், சத்திரமாகவும் செயல்பட்டபோது, சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பிற்காலத்தில் கட்டப்பட்ட தற்காலிக கட்டடங்களை அகற்றிவிட்டு, மன்னர் இரண்டாம் சரபோஜி காலத்தில் எப்படி இருந்ததோ, அதேபோல பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படவுள்ளது. 2 ஆண்டுகளில் இந்தப் பணி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது'' என்கிறார் தங்கதுரை.