இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் - நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சப்தம்'. 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் மார்ச் 1- ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டியிருக்கிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ' ஒலி தொடர்பான பேய் படத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
இது ஒரு புதிய அணுகுமுறை. இயக்குநர் அறிவழகனின் தொழில்நுட்ப அறிவும், கதை நகரும் விதமும் சிறப்பாக உள்ளது. இடைவேளைக்கு முந்தைய காட்சியும், ஒலியும் எதிர்பாராத ஒன்று. படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்' என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
அவ்வப்போது இயக்குநர் செல்வராகவன் தனது விடியோக்களின் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள விடியோவும் இந்த வகையில் கவர்ந்திழுத்திருக்கிறது. அதில்... ' யார்கிட்டையும், எதுக்காகவும் உதவி கேட்டு நிக்காதீங்க. சின்ன உதவி பண்ணாலும், ஆயுசு முழுக்கச் சொல்லிச் சொல்லிக் காண்பிப்பாங்க.
'என்னாலதான் அவன் பெரிய ஆளானான், அவனுக்கு நான் இந்த உதவி பண்ணியிருக்கேன் தெரியுமா' என ஒன்றரையணாவுக்கு உதவி பண்ணிட்டு ஆயிரம் கோடிக்கு உதவி பண்ண மாதிரி பேசுவாங்க' என்று மனம் விட்டு பேசி காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கி வருபவர் நயன்தாரா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்துடன் இயங்கி வருகிறார். இவரை ரசிகர்கள் பலரும் 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைப்பார்கள்.
சீனியர் நடிகையாகவும் இத்தனை ஆண்டுகள் வெற்றிக்கரமாகச் செயல்படுவதாலும், அதிகப்படியான பெண் சார்ந்த திரைப்படங்கள் நடித்து ஹிட் கொடுப்பதனாலும் ரசிகர்கள் இவரை இப்பெயரைக் கொண்டு அழைப்பார்கள். இனி அந்தப் பெயரைக் கொண்டு தன்னை அழைக்க வேண்டாம் என அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறார்.
'ஸ்வீட்ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்கு
கிறார். எதிர்வரும் மார்ச் 14-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.