தாகம் தீர்க்கும் மதுமஞ்சரி

மலைக்கிராமங்களும் குடிநீர் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றன.
தாகம் தீர்க்கும் மதுமஞ்சரி
Published on
Updated on
2 min read

மலைக்கிராமங்களும் குடிநீர் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றன. அதற்கு தீர்வு காணும் முயற்சியில் களம் இறங்கியிருக்கிறார் திண்டுக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட சின்னாளப்பட்டியைச் சேர்ந்த செ.மதுமஞ்சரி.

செல்வராஜ்- புனிதவள்ளி தம்பதியரின் மூன்றாவது மகளான செ.மது மஞ்சரி, இருபத்து ஒன்பது வயது நிரம்பியவர். கோவையில் பி.ஆர்க் பட்டம் படித்து, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பழங்காலக் கட்டடங்களை புனரமைப்புப் பணியின் மீது ஆர்வம் திரும்பியது.

இந்தச் சூழலில் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில் செயல்பட்டு வரும் குக்கூ காட்டுப் பள்ளி அமைப்புடன் கிடைத்த தொடர்பு, மதுமஞ்சரியின் பயணத்தை ஊர்க் கிணறுகள் புனரமைப்புப் பணிகளை நோக்கி திசை திருப்பியது.

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற மருத்துவர் ஜீவாவின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்க வந்த மதுமஞ்சரியிடம் பேராசிரியர் க.பழனித்துரை பசுமை விருதுக்காக தனக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

அப்போது மதுமஞ்சரியிடம் ஓர் சந்திப்பு:

கிணறுகளின் மீது கவனம் ஏற்பட்டது எப்படி?

குக்கூ காட்டுப் பள்ளி இயக்கத்தினர் மலையடிவாரத்தில் குழந்தைகளுக்கான திண்ணைப் பள்ளிகளை நடத்துதல், பள்ளிக்கு நூலகம் அமைத்துக் கொடுத்தல் என பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருவதை அறிந்தேன். இந்த நேரத்தில் "நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு' என்ற 12 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

உத்தர பிரதேச மாநிலத்துக்கு உள்பட்ட ஹரித்துவார் அருகிலுள்ள கிராமத்தில், வெவ்வேறு விசித்திரமான பாதிப்புகளால் குழந்தைகள் உயிரிழப்புக்கு அங்குள்ள ரசாயன ஆலையின் கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து குடிநீர் நச்சுத் தன்மையாக மாறியதே காரணம் என கண்டறியப்பட்டது குறித்தும், அதனால் ஏற்பட்ட தன்னிச்சையான போராட்ட முன்னெடுப்புகளால் அரசின் கவனம் பெற்று தீர்வு காணப்பட்டதும் அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த சிறிய புத்தகம் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மலைக் கிராமங்களை நோக்கி பயணித்தது ஏன்?

சிங்காரப்பேட்டையை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரத்திலுள்ள புலியானூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், 2 கி.மீ. தொலைவுக்கு பயணித்து குடிநீர் எடுத்து வர வேண்டும். அதே ஊரில் பாழடைந்து ஒரு கிணறு இருந்தது. அந்த மக்களிடம் பேசி கிண்ற்றைப் புனரமைப்பு நடவடிக்கையில் இறங்கினேன். இந்தக் கிணற்றின் தண்ணீர், தற்போது 200 குடும்பங்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

புலியானூரில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவிலுள்ள நாயக்கனூர் கிராமத்திலுள்ள கிணறு, 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையின்போது, விலங்கு ஒன்றை வெட்டிப் போட்டனர். இதனால் "தீட்டுக் கிணறு' என மக்களும் ஒதுக்கிவிட்டனர். 4 மாதங்களாக மக்களோடு இணைந்து தூர்வாரும் பணி நடைபெற்றது. 6 கி.மீ. தொலைவுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்த நாயக்கனூர் மக்கள் தற்போது இந்தக் கிணற்று நீரை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது உங்கள் பணி என்ன?

ஈரோட்டைச் சேர்ந்த வி.பி.குணசேகரன், இயற்கையோடு இணைந்து வாழும் மக்களுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடும் அவர் அந்தியூர் மலைக் கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னைகளைத் தெரிவித்தார்.

திண்ணைக்காடு, அக்னிபாவி, சோளகனை ஆகிய கிராமங்களில் குடிநீர் பிரச்னைக்காக கிணறுகளை அமைத்தோம். அங்குள்ள மக்கள், தங்களுக்கு மட்டும் தண்ணீர் கிடைத்தால் போதாது, வனத்தில் வசிக்கும் விலங்களும் எளிதாக வந்து தண்ணீர் குடித்துச் செல்லும் வசதிகளையும் கிணற்றில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன்படி, கிணறுகளின் சுற்றுச் சுவர் உயரமில்லாமல், விலங்குகள் பயன்படுத்தும் வகையில் அமைத்துள்ளோம். யானைகளும் குட்டிகளுடன் வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com