ஆழ்ந்த உறக்கமல்ல... அபாய ஒலி!

'குறட்டை விட்டு தூங்குவது ஆழ்ந்து உறக்கம் அல்ல; தூக்கத்தின்போது ஏற்படும் சுவாசத் தடைகள்தான் குறட்டை ஒலி.
ஆழ்ந்த உறக்கமல்ல... அபாய ஒலி!
Published on
Updated on
2 min read

'குறட்டை விட்டு தூங்குவது ஆழ்ந்து உறக்கம் அல்ல; தூக்கத்தின்போது ஏற்படும் சுவாசத் தடைகள்தான் குறட்டை ஒலி. இதனை முறையாகக் கவனித்து சிகிச்சை பெறாவிட்டால், அது மூச்சுத் திணறலாக மாறி, உயிருக்கு அச்சுறுத்தலாகலாம். இல்லையெனில், மாரடைப்பு அல்லது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கலாம்.

இந்தியாவில் மட்டும் 5 கோடி பேருக்கு அத்தகைய பாதிப்புகள் உள்ளன. இதைத் தவிர, தூக்கமின்மை போன்ற உறக்கம் சார்ந்த பிரச்னைகளை 93 % இந்தியர்கள் எதிர்கொள்கின்றனர். இதுதொடர்பான விழிப்புணர்வு இருந்தால் பெரும்பாலான நோய்களில் இருந்து எளிதில் தற்காத்துக் கொள்ள முடியும்'' என்கிறார் நுரையீரல் மருத்துவத் துறை பேராசிரியர் எம். கெளசிக் முத்துராஜா.

குறட்டைக்கான காரணிகள், அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை குறித்து அவரது விளக்கங்கள்:

'குறட்டை என்பது தூக்கத்தின்போது மூச்சுக் குழாயில் ஏற்படும் அடைப்பு காரணமாக உருவாகிறது. மூக்கு அல்லது தொண்டை பகுதிகளில் உருவாகும் அடைப்புகளால் நுரையீரலுக்குச் செல்லும் காற்று தடைபடுவதால் குறட்டை சத்தம் எழுகிறது. இதைத் தவிர, அதிக உடல் எடை, மூச்சுப் பாதையில் உள்ள சதைகளில் தளர்வு, டான்சில் அல்லது அடினாய்டு வீக்கம், வயோதிகம், படுக்கும் முறை, உடல் கூறு குறைபாடுகள் என பல்வேறு காரணங்களால் கூட இந்தப் பிரச்னை ஏற்படும்.

இரு வகைகள்: குறட்டை பாதிப்பை இருவேறு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சாதாரண குறட்டை. மற்றொன்று அப்ஸ்ட்ரக்டிவ் 'ஸ்லீப் ஆப்னியா' எனப்படும் ஒ.எஸ்.ஏ. பாதிப்பு.

சாதாரண குறட்டையின்போது மூச்சு விடும் சத்தம் அதிகமாகக்û காணப்படும். இதனால் சுவாசத் தடையோ உடலில் ஆக்சிஜன் குறை நிலையோ ஏற்படாது. அதேவேளையில், 'ஸ்லீப் ஆப்னியா' ஏற்பட்டால் நுரையீரலுக்கு செல்லும் சுவாசம் தடைபடும். இதனால், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும்.

அதுமட்டுமல்லாமல் மூளை, இதயம் ஆகிய உறுப்புகளுக்கு அதிக சிரமம் உண்டாக்கும். உடலில் ஆக்சிஜன் அளவு குறையும் நேரத்தில் போதுமான ஆக்சிஜன் பெற மூளை அதிக அழுத்தம் அடையும். இதனால்தான் இரவு முழுவதும் தூங்கினாலும் காலை எழும்போது உடல் மிகவும் சோர்வாகக் காணப்படுகிறது. மேலும், தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், கவனச்சிதறல் ஆகியவையும் ஏற்படுகிறது.

அதேபோன்று, குறட்டை விடுவதால் இதயத்துக்குச் செல்லும் ஆக்சிஜன் குறைவதால்தான் பெரும்பாலோனருக்கு தூக்கத்தின்போது மாரடைப்பு ஏற்படுகிறது.

மற்றொருபுறம் சர்க்கரை நோய்க்கும் குறட்டை பிரச்னையும் முக்கியக் காரணமாக விளங்குகிறது. குறட்டை விடும் 100 நபர்களில் குறைந்தது 50 பேருக்கு சர்க்கரை நோயின் பாதிப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆக்சிஜன் தடைபட்டால் இன்சுலின் சுரப்பது உடலில் குறையும். அதனால், அத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

பரிசோதனை: பொதுவாக ஒருவருக்கு 'ஸ்லீப் ஆப்னியா' பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய சில பரிசோதனைகள் செய்யப்படும். அவற்றில் முக்கியமானது 'பாலிசோம்னோகிராம்' என்ற பரிசோதனை. ஒருவரின் தூக்கத்தின்போது அதனை ஆய்வு செய்வதே இந்தப் பரிசோதனையின் முறை. அதன்படி, தூங்கும் முறை, குறட்டை ஒலி அளவு, சுவாசக் குழாயில் ஏற்படும் அசௌகரியங்கள், ஆழ்ந்த உறக்க நிலை உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். அதன் அடிப்படையில் பாதிப்பின் தீவிரம் அளவீடு செய்யப்படும்.

அறுவைச் சிகிச்சை மூலமாகவும், சி-பேப், பை பேப் சாதனங்கள் மூலமாக சுவாச உதவி வழங்கியும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். நோயின் தன்மையைப் பொருத்து ரேடியோ அதிர்வெண் தணிப்பு சிகிச்சையும் மேற்கொள்ளலாம்.

தடுப்பு முறைகள்: உடல் எடையை சரியாக வைத்திருத்தல், இரவு நேரங்களில் சரியான நேரத்தில் தூங்குதல், மது, புகைப்பழக்கங்களைத் தவிர்த்தல், உடற்பயிற்சி, துரித உணவுகளைத் தவிர்த்தல், அதிக அளவு மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல், ஆரம்ப நிலை பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவற்றின் வாயிலாக ஸ்லீப் ஆப்னியா பாதிப்பை வருமுன் தடுக்க முடியும்.

குழந்தைகளும் பாதிப்பு ஏன்? குழந்தைகளுக்கும் குறட்டை வருவது தற்போது அதிகரித்துள்ளது. சளித் தொந்தரவு மட்டுமன்றி, தொண்டையில் உள்ள டான்ஸில், அடினாய்டு பகுதிகளில் வீக்கம் உண்டாகி குழந்தைகளுக்கு குறட்டை ஏற்படும்.

குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக குறட்டை பாதிப்பு இருக்கும்பட்சத்தில், படுக்கையில் சிறுநீர் கழிப்பது, தூக்கத்தில் வாய்வழியாகச் சுவாசிப்பது, அதிக எரிச்சல் உணர்வு, ஞாபகச் சக்தி, கவனக்குறைவு போன்றவை அறிகுறிகளாக இருக்கும். எனவே அறிகுறிகளை அலட்சியப்படுத்தாது மருத்துவரை ஆலோசனை பெறுவது நல்லது'' என்கிறார் கௌசிக் முத்துராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com