கோயில் காடுகளைப் பாதுகாப்போம்..

'கோயில் காடுகளைப் பாதுகாப்பது நமது கடமை' என்கிறார் கேரள மாநிலத்துக்கு உள்பட்ட திருச்சூரில் உள்ள வன ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் கண்ணன் வாரியர்.
கோயில் காடுகளைப் பாதுகாப்போம்..
Published on
Updated on
2 min read

'கோயில் காடுகளைப் பாதுகாப்பது நமது கடமை' என்கிறார் கேரள மாநிலத்துக்கு உள்பட்ட திருச்சூரில் உள்ள வன ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் கண்ணன் வாரியர்.

கோவையில் உள்ள இந்திய வன மரபியல், மரப்பெருக்கு நிறுவனத்தின் முதுநிலை முதன்மை விஞ்ஞானியாகவும், சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த இவர், காடுகள் குறித்த தனது ஆராய்ச்சிக்காகப் பிரதித்தி பெற்ற ரோவ்லா எஸ். ராவ் விருது பெற்றவர்.

அவரிடம் பேசியபோது:

'மத நம்பிக்கையின் அடிப்படையில், பாரம்பரியத் தாவரங்கள் உள்ள பகுதிகளே கோயில் காடுகளாகும். 'கோயில் காடுகள்' என தமிழகத்தில் அழைக்கப்பட்டாலும், கேரளத்தில் 'காவு' எனவும், கர்நாடகத்தில் 'தேவாரக் காடு' எனவும், அஸ்ஸôமில் 'தாவு' எனவும் அழைக்கப்படுகின்றன.

இந்தியாவில் சுமார் ஒன்றரை லட்சம் இடங்களில் கோயில் காடுகள் இருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் 1,275 இடங்களில் கோயில் காடுகள் இருப்பதாகக் கூறப்படுகின்றன. இருந்தாலும், 448 கோயில் காடுகளும், கேரளத்தில் 761 கோயில் காடுகளும் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு அரிய வகையைச் சேர்ந்த தாவரங்களும், அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்களும் அதிக அளவில் உள்ளன. இவை மருத்துவக் குணம் வாய்ந்தவை. தற்போதுள்ள தாவரங்களுக்கு இவையே மூதாதையர்கள் என்பதால், எதிர்காலத் தாவர மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கோயில் காடுகள் பெரும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

சமூகப் பொருளாதார மாற்றங்கள், பெருகி வரும் மக்கள் தொகை, நகரமயமாதல், கிராமங்களில் ஏற்படும் திடீர் வளர்ச்சி போன்றவை காடுகளின் அழிவுக்கு காரணமாக உள்ளன. அத்துடன் கோயில்களின் விரிவாக்கத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் அவை அழிக்கப்பட்டு வருகின்றன.

தேசிய சுற்றுச்சூழல் கொள்கையின்படி, ஒப்பிட முடியாத மதிப்பு கொண்டவையாகக் கருதப்பட்டால்தான் அவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். முக்கிய நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதைப்போல, கடுமையான சட்ட விதிமுறைகளை ஏற்படுத்தி இவற்றை பாதுகாப்பது நமது கடமை.

எங்களது குடும்பத்தில் 3 கோயில் காடுகள் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. காடுகளே இல்லாத கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் எனக்கு குடும்பச் சொத்தாகக் கிடைத்த நிலத்தையும் காடாக மாற்றி விட்டேன்.

மரம் நட்டால் மட்டும் போதாது, நட்ட மரத்தை பாதுகாத்து வளர்த்தால்தான் அதன் முழுப் பயனும் கிடைக்கும். காடுகள் இருந்தால்தான் எதிர்கால சந்ததியே வாழ முடியும்.

இசை மீது ஆர்வம்.

'கோயில் காடுகளுடன் கூடிய வனமும், இசையும்தான்' எனது இரு கண்கள். தமிழ், மலையாளம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இயற்கை, காதல், கடவுள், தத்துவம் என இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை நானே எழுதி, இசையமைத்து, அவற்றை யூடியூபில் வெளியிட்டுள்ளேன். கேரள அரசின் வனத் துறையின் தீம் பாடலாக நான் இயற்றிய பாடலே இன்றும் ஒலிக்கிறது.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சகத்துக்காக, யஜூர் வேதத்தின் அடிப்படையில் 'பிரக்ருதி வந்தனம்' என்ற பாடலையும் இயற்றி பாடினேன். எனது இசையில் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரனும் பாடியுள்ளார். அத்துடன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.

ரகுமான் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளேன்.

சர்வதேச வன நாளையொட்டி, ஐ. நா. சபையின் உணவு, விவசாயச் சங்கத்தின் சார்பில் 'மரத்திலிருந்து இசை' எனும் நிகழ்ச்சி பாங்காக்கில் அண்மையில் நடத்தப்பட்டது. இதில் இணைய வழியில் நான் பங்கேற்று, மிருதங்கம், தபேலா இசைக்கருவிகள் குறித்த லய வித்தியாசங்களை தொகுத்து வழங்கினேன்' என்கிறார் கண்ணன் வாரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com