என் சுவாசக் காற்றே..!

விண்வெளிப் பயணம் என்றாலே பெரிய சாகசத்தையும் வியப்பையும் ஏற்படுத்தும்.
என் சுவாசக் காற்றே..!
Published on
Updated on
3 min read

விண்வெளிப் பயணம் என்றாலே பெரிய சாகசத்தையும் வியப்பையும் ஏற்படுத்தும். விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு உடைகளுடன் ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். முதன்முதலாக, அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகிய இருவர் நிலவில் இறங்கி முத்திரையைப் பதித்தனர்.

அதன்பின்னர் ஏராளமானோர் விண்வெளிப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் ராகேஷ் சர்மா முதன்முதலாக விண்வெளிக்குச் சென்றார். அமெரிக்காவின் நாஸô நிறுவனம் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா பூமி திரும்புகையில் விண்கலம் விபத்தில் சிக்கியதால் அவர் உயிரிழந்தார்.

கடந்த சில மாதங்களாக அனைவரும் உச்சரிக்கும் பெயராக, மற்றொரு இந்திய வம்சாவளி வீராங்கனையான ஐம்பத்து ஒன்பது வயதான சுனிதா வில்லியம்ஸின் பெயர் உள்ளது. அவர் ஏற்கெனவே விண்வெளி ஆய்வு நிலையத்துக்குச் சென்று திரும்பியுள்ளார். அவர் 1998-இல் தேர்வு செய்யப்பட்டு, டிஸ்கவரி விண்கலத்தில் 2006-இல் விண்வெளிக்குச் சென்றார். அப்போது விண்வெளியில் 195 நாள்கள் தங்கிய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினார்.

இரண்டாம் முறையாக 2012 ஜூலையில் சோயுஸ் விண்கலத்திலும் பயணித்த அவர், 'சர்வதேச விண்வெளி நிலையத்தின் இரண்டாம் பெண் கமாண்டர்' என்ற சிறப்பைப் பெற்றார். 50 மணி நேரம், 40 நிமிஷங்கள் என 7 முறை நடை மேற்கொண்டு அதிக நேரம் நடந்த பெண் வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

2007-இல் பூமியில் பாஸ்டன் மாரத்தான் நடைபெற்றபோது, அவர் டிரெட்மில் மூலம் விண்வெளியில் மாரத்தான் ஓட்டத்தை நிகழ்த்தினார். தற்போது வரை சேர்ந்து மொத்தம் 323 நாள்கள் விண்வெளியில் தங்கிய வீராங்கனை என்ற சிறப்பும் அவருக்கு உள்ளது.

சிக்கலில் சுனிதா வில்லியம்ஸ்: 2024 ஜூன் 5-ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐ.எஸ்.எஸ்.) போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் பேரி மோர் என்ற சக வீரருடன் சென்றார். வழக்கமான பயணமாக இது கருதப்பட்டது. தொடர்ச்சியாக ஏற்பட்ட பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளால் சுனிதா வில்லியம்ஸ் தொடர்ந்து விண்வெளி மையத்திலேயே தங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். 8 நாள்கள் மட்டுமே விண்ணில் தங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், 280 நாள்களுக்கு மேலாக அங்கேயே அவர் தங்கி உள்ளார்.

அதிநவீனக் கருவிகள் இடம்பெற்றிருந்தாலும், சில நேரங்களில் அவையும் செயல்படாத நிலை ஏற்பட்டால், இதுபோன்ற நெருக்கடிகள் நேரிடலாம். இதனால் சுனிதா வில்லியம்ஸ், பேரி மோர் ஆகியோர் எப்போது பூமிக்கு பாதுகாப்பாகத் திரும்புவர் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அவர்கள் ஏற்கெனவே சென்ற விண்கலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நாஸô மற்றும் ஸ்பேஸ் ஏக்ஸ் நிறுவனம் இணைந்து புதிய விண்கலத்துக்கு ஏற்பாடு செய்தன.

எந்த ஒரு விண்வெளி வீரருக்கும் நீண்ட நாள்கள் தங்கியிராத நிலையில், சுனிதா வில்லியம்ஸூக்கு இந்த நிலை ஏற்பட்டது. விண்வெளியிலேயே நீண்ட நாள்கள் தங்கியிருந்ததால், அவர்களது உடலில் எலும்பு அடர்த்தி கணிசமாக குறைந்து, தசைகளின் மைக்ரோ கிராவிட்டியும் குறைந்து விடும்.

விண்வெளியில் ஆய்வு: இது சுனிதா வில்லியம்ஸ் உடலில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தியது. தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அவருக்கு இது பெரிய உளவியல் சவாலாக மாறியது. இணையம் மூலம் தொடர்பு கொண்டு பேசியது, விண்வெளியிலேயே தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு தனது அழுத்தத்தைப் போக்கிக் கொண்டார்.

அட்வான்ட்ஸ் ரோபோடிக்ஸ், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, மைக்ரோ கிராவிட்டி குறைவால் மனித உடலில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், விண்வெளியில் பயிர்களை வளர்த்தல் குறித்தும் ஆய்வு செய்தார். மொத்தம் 900 மணி நேரம் ஆராய்ச்சி, 150 ஆய்வுகளை மேற்கொண்டார் சுனிதா.

பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார்: தற்போது சுனிதா வில்லியம்ஸ், பேரி மோர் உள்பட 4 பேர் மார்ச் 19-இல் அமெரிக்காவின் புளோரிடாவில் பாதுகாப்பாகப் பூமிக்கு வந்து சேர்ந்தார்.

Keegan Barber

உடல் பாதிப்புகள்:

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியதும் முதலில் ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. அருகேயே மற்றொரு கலத்தில் இருவரும் தங்க வைக்கப்பட்டு, ஹூஸ்டனில் உள்ள நாஸô மையத்தில் மருத்துவர்கள் அவர்களின் உடல்நிலையை பல நாள்கள் கண்காணித்து வருவர்.

மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, பூமியின் புவிஈர்ப்பு விசைக்கு ஏற்றவாறு உடல் ஒத்துழைக்கிறதா? என கண்டறியப்படும். விண்வெளியில் இருந்து திரும்பும் வீரர்களுக்கு நடப்பது கடும் சவாலாக அமையும், நேராக நிற்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவர். உடலில் ரத்த அழுத்தம் திடீரென மாறுதவால், மயக்கம் ஏற்படலாம். வாரங்கள், மாதக் கணக்கில் குணமடைய ஆகலாம்.

தீர்வுகள்:

சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு தீவிர கவனம் செலுத்தி சிகிச்சை தரப்பட்டது. கால்கள், தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி, எலும்பு அடர்த்தியை சீரமைத்தல், இதன் மூலம் எலும்பு உடைதலை தடுத்தல், பூமியில் சமநிலையில் நிற்றல், சைக்கிளிங், ட்ரெட்மில் ஓட்டம், மூலம் இதயத்தை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.

'எனது இரண்டு நாய்கள், குடும்ப உறுப்பினர்களைக் காண ஆவலாக உள்ளேன்' என்பதை சுனிதா விண்வெளியிலேயே தெரிவித்திருந்தார்.

அன்றாட வாழ்க்கை மாற்றங்கள்

விண்வெளியில் நீண்ட நாள்கள் தங்கிய பிறகு, பூமியில் அவரது அன்றாட வாழ்க்கையில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்.

தசை, எலும்பு பலவீனம்: புவியீர்ப்பு இல்லாத சூழலில், தசைகள் 20%-30% பலவீனமாகி, எலும்பு அடர்த்தி 1%-2% குறையும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும், முதல் சில வாரங்கள் நடப்பது, படிக்கட்டு ஏறுவது சிரமமாக இருக்கும். 2007-இல் திரும்பியபோது, 'நடப்பது மறந்துவிட்டது போல உணர்ந்தேன்' என்று கூறினார்.

ரத்தம் மேல்நோக்கி செல்வதால், இதயம் சிறிது சுருங்கி, தலைச்சுற்றல் ஏற்படலாம். திடீரென எழும்போது மயக்கம் வரலாம்.

 கண்களுக்கு பின்னால் அழுத்தம் ஏற்பட்டு, பார்வை மங்கலாகலாம்.

9 மாதங்களுக்கு மேல் குடும்பத்தைப் பிரிந்து, சிறிய இடத்தில் வாழ்ந்தது மன அழுத்தத்தை தரலாம். 2012- இல், 'என் நாயை மிஸ் செய்தேன்' என்று பகிர்ந்தார். புவியீர்ப்பு மனதுக்கு சோர்வை ஏற்படுத்தலாம். கூட்டமும் சத்தமும் முதலில் அந்நியமாகத் தோன்றலாம்.

 விண்வெளியில் உலர்ந்த உணவுக்குப் பிறகு, புதிய பழங்கள், பீட்சா சுவையாக இருக்கும். செரிமானத்தில் சிறு சிரமம் ஏற்படலாம்.

 ஒரு நாளில் 16 முறை சூரிய உதயம் பார்த்த பிறகு, 24 மணிநேர சுழற்சிக்கு பழக, தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம் வரலாம்.

 பெரிய கூட்டத்தில் பழக சிறிது நேரம் தேவைப்படும்.

நாசாவின் மறுவாழ்வுத் திட்டத்தில், மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள் உதவுவர். 1-3 வாரங்களில் நடப்பது சரியாகும், 3-6 மாதங்களில் முழு உடல் வலிமை திரும்பும். சுனிதாவின் மன உறுதியும், குடும்ப ஆதரவும் (கணவர் மைக்கேல், செல்ல நாய்கள்) அவரை விரைவாக மீட்க உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com