ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிப்பது 236 அடி உயர ராஜகோபுரம்.
ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம்...
Published on
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிப்பது 236 அடி உயர ராஜகோபுரம். கோயிலை சுற்றி அமைந்துள்ள 21 கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க, கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக இருக்கும்.

விஜயநகரப் பேரரசு காலத்தில், அதாவது 500 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப் பெறாத தெற்கு ராஜகோபுரம், அகோபில மடத்தின் 44-ஆவது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமானப் பணி 1979-இல் தொடங்கப்பட்டது. 13 நிலைகளுடனும் 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு 1987 மார்ச் 23-இல் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

15-ஆம் நூற்றாண்டின்போது, மதுரையை ஆண்ட சுல்தான் படை கோயிலுக்கு வந்தது. தேவையான பொன், பொருள்கள் கொள்ளையடித்தும் அந்தப் படைத் தளபதிக்கு ஸ்ரீரங்கத்தை விட்டு செல்ல மனமில்லை. காவிரிக் கரையில் அமைந்துள்ள இயற்கை அழகு மட்டுமல்ல; கோயிலில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் ஏராளம் இருக்கும் என்பதால், அவற்றையும் கவர்ந்தே செல்ல வேண்டும் என திட்டமிட்டு, முகாமிட்டார். ஆனால் பொக்கிஷம் சிக்கவில்லை.

இந்த நிலையில் அந்நியப் படையின் ஆதிக்கத்தால் பக்தர்களும், ஸ்ரீரங்கம் வாசிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர். அப்போது கோயிலில் நடனமாடி திருப்பணி செய்து வந்த வெள்ளையம்மாள் என்ற பெண், படைத்தளபதிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என திட்டமிட்டார்.

பெண்ணாசை பிடித்த தளபதியோ, வெள்ளையம்மாளிடம் நெருங்கி பழகினார். இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வெள்ளையம்மாள் ஒருநாள் தளபதியிடம் ரகசியமாக, 'நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பொக்கிஷத்தை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்' என்று , வெள்ளை கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே வெள்ளையம்மாள் அந்த தளபதியை மேலிருந்து கீழே தள்ளிவிடவே, மண்டை உடைந்து தளபதி இறந்தார். இருப்பினும், 'படைவீரர்கள் தன்னை சும்மா விடமாட்டார்கள்' என்று கருதிய வெள்ளையம்மாள் மேலே இருந்து குதித்து, தானும் தனது உயிரையும் மாய்த்துகொண்டார். இதுதான் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு.

அரங்கனின் பொக்கிஷத்தைக் காப்பாற்றுவதற்காக தன்னுயிரை ஈந்த அந்த மங்கையின் நினைவாகவே அந்தக் கோபுரம் இன்றுவரை 'வெள்ளை கோபுரம்' என்று அழைக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com