புவிக்கு 1.48 கோடி மரக்கன்றுகள்...

புவிக்கு 1.48 கோடி மரக்கன்றுகள்...

பழங்காலத்தில் தமிழர்கள் பிரித்து வைத்த ஐவகை நிலங்களில் ஒன்று முல்லை.
Published on

பழங்காலத்தில் தமிழர்கள் பிரித்து வைத்த ஐவகை நிலங்களில் ஒன்று முல்லை. இது வனமும், வனம் சார்ந்த இடம். வனம் என்றாலும் காடு என்ற பொருளும் உண்டு. இரண்டு வார்த்தைகளையும் இணைந்த "முல்லைவனம்' என்ற பெயர் கொண்ட மனிதர் மரங்களின் காதலராகவும், மரம் வளர்ப்பதில் பெரும் ஆர்வலராகவும் இருக்கிறார்.

இவர் தனது எட்டு வயதில் தாத்தாவுடன் ஆரம்பித்த மரம் வளர்ப்புப் பணியை தற்போது ஐம்பத்து எழு வயதிலும் தொடர்ந்து செய்து வருகிறார். இதுவரை 1.48 கோடி மரக்கன்றுகளை நட்டு, புவியை பசுமையாக்கி இருக்கிறார்.

சென்னையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பழமரக் கன்றுகளையும், பூஞ்செடிகளையும் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்த முல்லைவனத்திடம் பேசியபோது, 'சிறு வயதிலேயே செடிகள், கொடிகள், மரங்கள் மீது ஆர்வம் வந்துவிட்டது.

இப்போது ஆலமரமாகப் பரந்து, விரிந்து வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவில் 1.48 கோடி மக்கள் இருக்கின்றனர். ஆளுக்கு ஓர் மரம் என்ற வகையில் 1.48 கோடி மரங்களை என் வாழ்நாளில் புவிக்குக் கொடுக்க வேண்டும் என்பது எனது பேராசை' என்கிறார்.

அவர் மேலும் கூறியது:

'ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகரின் முக்கிய குடியிருப்புப் பகுதிகளான வளசரவாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம், சின்மயா நகர், கே.கே.நகர், மதுரவாயல், ஆழ்வார் திருநகர், நெசப்பாக்கம், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகள் விளைநிலங்களாகவே இருந்தன. அங்கேதான் என் தாத்தாவும் விவசாயம் செய்ய, என் அப்பாவும் உதவியாக இருந்தார். அந்தக் காலத்தில் எங்கள் பகுதியில் சாலை வசதி எல்லாம் கிடையாது. எங்கே போனாலும் மாட்டு வண்டியும், குதிரை வண்டியும்தான்.

வண்டிப் பாதைகளின் இரண்டு பக்கங்களிலும் மரங்கள் வளர்ந்து, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நீட்டிக் கொண்டிருக்கும். என் அப்பாவோ இடையூறாக இருக்கும் மரக் கிளைகளை வெட்டி பாதையை சீர் செய்வார். வெட்டப்படும் மரக்கிளைகளின் குச்சிகளைச் சீராக வெட்டி, வயல் வரப்புகளிலும், மற்ற இடங்களிலும் நட்டுப் பராமரிக்க நாளடைவில் செடியாக, மரமாக வளரும். விதைகளும், நட்டு வைத்த குச்சிகளும் வளர்ந்து நிழலும், பூவும், காயும், பழங்களும் கொடுப்பதைப் பார்க்க எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படும்.

சமையலறையில் இருந்து தூக்கி வீசப்படும் புளியங்கொட்டைகளில் தொடங்கி மா, பலா உள்ளிட்ட பல கொட்டைகளைச் சேகரிப்பேன். பல வீடுகளுக்கும் சென்று அவர்கள் பயன்படுத்திய பாட்டில்கள், தகர டப்பாக்களைக் கேட்டு வாங்குவேன். அவைகளில் மண்ணைப் போட்டு, விதைகளை ஊன்றி, தண்ணீர் விட்டு கவனத்துடன் வளர்க்கத் தொடங்கினேன்.

எங்கள் வீட்டில் மாடுகளும் இருந்து, பால் வியாபாரமும் செய்ததால் இயற்கை உரமும் தயாரிக்க முடிந்தது. சென்னையில் ஆவின் பால் விநியோகம் ஆரம்பித்த காலத்தில் ஏராளமான வீடுகளுக்குச் சென்று "பால் கவர்களை குப்பையில் போடாமல் கொடுங்கள்' என்று கேட்டு வாங்கிக் கொண்டு வருவேன். அவைகளில் மண், உரம் போட்டு, விதையூன்றி நாற்றுகள் வளர்க்கத் துவங்கினேன். இப்படி வளர்ந்தவற்றை விரும்பியவர்களுக்கு இலவசமாகவே வழங்கத் தொடங்கினேன்.

எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், படிப்பை நிறுத்திவிட்டு, விவசாயத்திலும், பால் வியாபாரத்திலும், செடிகள் வளர்ப்பதிலும் ஈடுபடத் தொடங்கினேன். இளைஞனாகவுடன் செடிகளை வளர்த்து, பல பள்ளிகளுக்கும் சென்று விநியோகித்து, "மாணவர்களுக்கு செடிகளைப் பராமரிப்பது எப்படி?' என்று சொல்லிக் கொடுப்பேன்.

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் செடிகள் வளர்க்க நான் உதவி இருக்கிறேன். எனக்கு பள்ளி ஆசிரியராக இருந்த பார்த்தசாரதி 1989-ஆம் ஆண்டில் ஒருநாள் என்னிடம், "சோழவந்தானில் நடக்கவிருந்த தனது மகள் திருமணத்துக்கு வருபவர்களுக்குத் தாம்பூலத்துடன் விநியோகம் செய்ய வேண்டி 50 மரக்கன்றுகளைக் கேட்டார். அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த பஸ்ஸிலேயே நானும் கூடச் சென்று மரக்கன்றுகளை விநியோகித்தேன். அதன் பிறகு இன்று வரை திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் விநியோகிப்பதற்காக லட்சக்கணக்கில் பல்வகையான மரக்கன்றுகளை வளர்த்துகொடுத்திருக்கிறேன்.

பள்ளிகளில் செடிகளை நட்டு, பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பென்சில்கள், பேனாக்கள் போன்ற சிறு பரிசுகளைக் கொடுத்திருக்கிறேன்.

செடிகளைக் குழந்தைகள் போல நினைத்து பலரும் கேட்பதால், அவற்றை பணத்துக்கு விற்பனை செய்ய எனது மனம் இடம் தரவில்லை. தற்போது மண், உரம், விதைகள் என அனைத்தும் விலை உயர்ந்துவிட்டாலும், என்னால் தயக்கமின்றி வழங்க முடிகிறது. எனக்கு வழிகாட்டி, உதவியாக இருந்த என் தாத்தா, அப்பா, மனைவி எல்லோரும் மறைந்துவிட்டனர். வயதான் என் தாயும், என் மகனும் மட்டுமே எனக்கு உதவியாக இருக்கின்றனர்.

"தான் வசிக்கும் பகுதியிலும் மரக்கன்றுகளை நடுமாறு நடிகர் விவேக் கேட்டார். அதை செய்து முடித்தேன். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசனையின்பேரில், எனது மரக்கன்றுகள் நடும் திட்டத்தை விரிவுபடுத்தினேன். கடலூரில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற விழாவில், அப்துல் கலாம், விவேக் இருவரும் தமிழ்நாட்டின் மற்ற பசுமையாளர்களுடன் என்னையும் கெளரவித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும்.

நான் நடத்தி வரும் "மர வங்கி'க்கான வாகனத்தை அப்துல் கலாம் வழங்கினார்.

2015-இல் பத்து கிராம் தங்கப் பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் கொண்ட "சேவா ரத்னா' விருது, 2020-இல் தலாய் லாமா பங்கேற்ற "விஷன் இந்தியா 2020' நிகழ்ச்சியில் பாராட்டு போன்றவை நினைவில் நிற்கும் நிகழ்வுகள்.

எனது நெருங்கிய நண்பர் அருணாசலம். அவர் மழைக் காலத்தில் ஒரு நாள் வாகனத்தில் சென்றபோது, மரக் கிளை ஒடிந்து பாதிப்புக்குள்ளானார். பல்வேறு சிகிச்சைகளுக்குப் பின்னரும் அவர் இன்னமும் முழுமையாக குணமடையவில்லை. அதை நினைக்கும்போது என் மனது பெரும் சோகத்தில் ஆழ்ந்துவிடும். மரங்களின் மீது பாசம் கொண்டாலும், மரத்தால் ஏற்படும் மனப் பாதிப்பு இது'' என்கிறார் முல்லைவனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com