தியாகிகளின் நினைவாக உதிரம் கொடுத்தோம்...

நாட்டின் சுதந்திரத்துக்காக, தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்டவர்களில் முதன்மையானவர் பகத் சிங்.
தியாகிகளின் நினைவாக உதிரம் கொடுத்தோம்...
Published on
Updated on
2 min read

நாட்டின் சுதந்திரத்துக்காக, தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்டவர்களில் முதன்மையானவர் பகத் சிங். அவரது 94-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மார்ச் 23-இல் தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ரத்த தான முகாம்

களில், 2,100 பேர் ரத்த தானம் செய்தனர்.

'சுதந்திரப் போராட்டத்துக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவாக, உதிரம் கொடுத்தோம். இனியும் கொடுப்போம்'' என்கிறார் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் க.பாரதி.

அவரிடம் பேசியபோது:

'அஸ்ஸாமில் பங்கா கிராமத்தில் வித்யாவதி- கிஷான்சிங் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் பகத் சிங், 23 ஆண்டுகள்தான் வாழ்ந்தார். ஆனால் அவர் விதைத்துச் சென்றது ஏராளம். 1919 ஏப்ரலில் ஜாலியன்வாலாபாக்கில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை ஜெனரல் டயர் தலைமையிலான ஆங்கிலேயப் படை வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் 1,600 சுற்றுகளில் சுட்டனர்.

ரத்தம் சிந்திய மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர். அப்போது லாகூரில் படித்த பகத் சிங்குக்கு வயது 12. அவர் ஜாலியன்வாலாபாக் வருகைதந்து, ரத்தம் தோய்ந்த அந்த மண்ணில் ஒரு கைப்பிடி எடுத்து, தான் கொண்டுவந்திருந்த கண்ணாடி பாட்டிலில் போடுகிறார். "இந்திய விடுதலையே எம் லட்சியம்' என முழங்கினார். திருமணம் செய்துகொள்ள மறுத்து, சுதந்திரத்துக்காகப் போராடினார்.

1929-இல் நாடாளுமன்றத்தில் குண்டு வீசினர் பகத்சிங், அவருடைய தோழர்கள் ராஜகுரு, சுகதேவ். இதனால் ஏற்கெனவே இருந்த சாண்டர்ஸ் கொலை வழக்கை தூசு தட்டி எடுத்து மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது ஆங்கிலேயே அரசு. சிறைவாசத்தில் சுமார் 151 புத்தகங்களை வாசித்து, ஆறு புத்தகங்களையும் வெளியிட்டார். 1931 மார்ச் 23-இல் பகத்சிங் தூக்கிலிடப்பட்டார்.

அவரது நினைவு நாள், பிறந்த நாள்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. 2025-ஆம் ஆண்டில் பகத்சிங் நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் ரத்த தான முகாம்களை நடத்த முடிவு செய்தோம்.

திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, திருவெறும்பூர், குடியாத்தம், செங்கம், திருச்சுழி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 23-இல் ஒரே நாளில் முகாம்கள் நடைபெற்றன.

இதன்படி, திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவும், சென்னை எண்ணூரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும், சேலத்தில் அமைச்சர் இரா.ராஜேந்திரனும், திருப்பூரில் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன், எம்எல்ஏ க.செல்வராஜும், திண்டுக்கல்லில் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தமும், சென்னை கே.எம்.சி. மருத்துவமனையில் எழும்பூர் எம்.எல்.ஏ. ஐ.பரந்தாமனும், குடியாத்தத்தில் எம்எல்ஏ அமுலு விஜயன், முன்னாள் எம்எல்ஏ ஜி. லதாவும், நாகப்பட்டினம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மக்களவை உறுப்பினர் வை.செல்வராஜும், அறந்தாங்கியில் எம்எல்ஏ எஸ்.டி.இராமச்சந்திரனும் முகாம்களை தொடங்கி வைத்னார்.

இதைத் தொடர்ந்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 23-ஆம் தேதியைத் தொடர்ந்து, 24, 25-ஆம் தேதிகளிலும், அரூர் அரசு மருத்துவமனையில் 25-ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற்றன. தருமபுரியில் 10 பேர் தங்களது உடல்களைத் தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரங்களில் கையெழுத்திட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அளித்தனர். தொடர்ந்து, முகாம்களை நடத்தி வருகிறோம். 2,100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் அளித்தனர். இவர்களில் 200 பேர் பெண்கள். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரை.செல்வம் என்பவர் 37-ஆவது முறையாக, ரத்த தானம் அளித்துள்ளார்.

இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்டத் தலைவர் கௌதம்குமார் தலைமையில் முகாம்கள் ஏற்பாடுகள் நடைபெற்றபோது, அவர் மார்ச் 22-இல் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் விருப்பத்தின்படி, கோவை கே.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்கு உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் மார்ச் 30-இல் ரத்த தான முகாம்கள் நடைபெறுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் ரத்த தானம் அளிக்க விரும்பும் கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் என 10 ஆயிரம் பேரின் விவரங்கள், ரத்த வகைகளைச் சேகரித்துள்ளோம். இவர்களைத் தொகுத்து, ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தத்தை உடனே சென்று தானம் செய்ய வழிவகை செய்ய 10 பேர் கொண்ட குழுவை விரைவில் ஏற்படுத்த உள்ளோம்'' என்கிறார் க.பாரதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com