எழுத, எழுத...

பதினான்கு வயதில் தனியார் பேனா தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாகச் சேர்ந்து, பின்னர் தனி நிறுவனத்தைத் தொடங்கி பல்வேறு வகையான மை பேனாக்களை தயாரித்து
எழுத, எழுத...
Published on
Updated on
2 min read

பதினான்கு வயதில் தனியார் பேனா தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாகச் சேர்ந்து, பின்னர் தனி நிறுவனத்தைத் தொடங்கி பல்வேறு வகையான மை பேனாக்களை தயாரித்து, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார் திருவள்ளூரைச் சேர்ந்த எழுபத்து மூன்று வயதான எம்.எஸ்.பாண்டுரங்கன். இவருக்கு உதவியாக அவரது மகனும் பொறியியல் பட்டதாரியுமான எம்.பி.கந்தன் இருந்துவருகிறார்.

சாதனைப் பயணம் குறித்து பாண்டுரங்கனிடம் பேசியபோது:

'திருவள்ளூரில் 1961-இல் 15-க்கும் மேற்பட்ட மை நிரப்பி எழுதும் பேனாக்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. அதில் ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணிபுரிந்தேன். பந்து முனை பேனா கம்பெனிகளின் வரவால், மை நிரப்பி எழுதும் பேனாக்களின் விற்பனை சரிந்தது. இதனால் தொழிலாளிகள் வேலை இழந்ததோடு, நிறுவனங்களும் மூடப்பட்டன.

ஆழ்ந்த யோசனைக்குப் பின்னர், எனது வீட்டின் தரைதளத்தில் "ரங்கா' என்ற பெயரில் பேனா தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினேன். அதற்கான தளவாட இயந்திரங்கள், மூலப் பொருள்கள், பேனா முள்களை வரவழைத்தேன்.

வழக்கமான பேனாக்களைவிட சில நுணுக்கமான வேலைகள் செய்து கண்ணைக் கவரும் வகையில் செய்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நாளடைவில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் உருவாகினர். இதற்கு பேனாக்களின் தரம்தான் காரணம்.

பெருமாள் கோயில் தெருவில் ஐம்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தொழிற்கூடத்தில் வைத்து பேனாக்களுக்கான பாகங்களைத் தயார் செய்து, சில நுணுக்கமான வேலைகளைக் கைகளால் தயார் செய்கிறோம். ஒரு பேனா செய்வதற்கு 4 மணி நேரமாகும். இதேபோல் 6-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைசெய்தால்தான் நாள்தோறும் 10 பேனாக்கள் வரையில் தயார் செய்ய முடியும். நுணுக்கமான வேலை என்பதால் வேலைப்பளுவும் அதிகமாகும்.

"வாள் முனையைவிட பேனா முனை வலிமையானது' என்பதால், ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து 100 வகைகளில் பேனா முள்களை வரவழைக்கிறோம். இதேபோல் எபோநைட், ஆக்ரிலீக், அல்டம், பிராஸ், அலுமினியம், காப்பர், பீக், இந்தியன் பவுன்டைன் பென் போன்ற 40 வகைகளில் 250 வண்ணங்களில் தயார் செய்கிறோம்.

அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இந்த பேனாக்களின் விலை ரூ.3 ஆயிரம். தங்க முள் பேனா ரூ.25 ஆயிரம். சர்வதேச அளவில் தனித்துவமான பிராண்டையும் உருவாக்கியுள்ளோம். பிரபலங்கள் விரும்பும் பேனாக்கள் இவை. இதைப் பயன்படுத்துவதன் மென்மையாக உள்ளதால் கைகள் வலிக்காது. காகிதங்களில் எழுத்துகள் பெரிய அளவிலும், சிறு அளவிலும் இடம் பெறும் வகையில் பேனா முள்கள் பொருத்துகின்றனர்.

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கண்காட்சியிலும் பேனாக்களை இடம் பெறச் செய்யும்போது, பிராண்ட் பேனாக்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.

இந்த பேனாக்கள் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. பந்து முனை பேனாக்கள் பயன்படுத்தி விட்டு உடனே தூக்கி வீசுவதால் நெகிழிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பேனா மூலம் எழுதுவதால் அறிவுபூர்மான ஞாபகச் சக்தி கிடைக்கும். ஆனால், கணிப்பொறியில் பார்த்து வேலை செய்வதால் ஞாபகத்தில் இல்லாமல் போய்விடும் நிலையுள்ளது. தேடி வந்து வாங்கிச் செல்வோரும் உண்டு. இணையத்திலும் பேனாக்களைக் கேட்கின்றனர்.

இனி பாம்ப்பூ, அபிமன்யு, மார்க்கண்டேயா, சாமுராய் போன்ற பேனாக்களையும் தயார் செய்ய உள்ளோம்'' என்கிறார் பாண்டுரங்கன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com