அண்மையில் தனது முகநூல் பக்கத்தின் வாயிலாக இரண்டு சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் ராஜேஷ் குமார். முதலாவது அவர் அண்மையில் கலந்துகொண்ட கல்லூரி விழா தொடர்பானது. அது பற்றி அவர் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார் :
சாதாரண சினிமா நடிகர்களுக்கு இருக்கும் புகழ் கூட உங்களைப் போன்ற பிரபல எழுத்தாளர்களுக்கு இல்லையே....என்ன காரணம்....? அண்மையில் நான் கலந்து கொண்ட கல்லூரி விழாவில் ஒரு மாணவி கேட்ட கேள்வி இது.
இந்தக் கேள்விக்கு நான் சொன்ன பதில் என்ன தெரியுமா? ஒரு சினிமா அது எவ்வளவு மோசமான படமாக இருந்தாலும் சரி, அதை தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் இரண்டு கோடி பேராவது பார்த்து விடுகிறார்கள் என்கிறது ஒரு சர்வே. ஆனால் ஒரு எழுத்தாளரின் படைப்பு எவ்வளவு நன்றாக இருந்தாலும் படிப்பவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களுக்குள் அடங்கி விடுகிறது.
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒரு சினிமா டி.வி யின் மூலமாக உங்கள் வீட்டுக்குள் நுழைந்து உங்களைப் பார்க்க வைத்து விடும். ஆனால் நீங்கள் விரும்பினால் மட்டுமே ஒரு எழுத்தாளரின் புத்தகம் உங்கள் வீட்டுக்கு வரும். தற்காலத்தில் ஊடகங்கள் உயிர் வாழ்வதற்குக் காரணமே சினிமா நடிகர், நடிகைகள்தான்.
அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் உதவாக்கரையாக இருந்தாலும் அவர்களுக்காக உருவானதுதான் பிரேக்கிங் நியூஸ். ஒரு காமெடி நடிகருக்குத் தருகிற முக்கியத்துவத்தைக் கூட பிரபல எழுத்தாளர்களுக்கு ஊடகங்கள் தருவதில்லை. எனவே எழுத்தாளர்கள் மின்னுவதில்லை. ஆனால் அதைப் பற்றி நான் சிறிதும் கவலைப்
படுவதில்லை. ஏனென்றால் எனக்கு ஒரு வாசகர் இருந்தால் அது ஒரு பில்லியனுக்கு சமம். அவர் பகிர்ந்து கொண்டிருக்கும் இரண்டாவது விஷயம் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட அரிதான ஒரு நினைவுப் பரிசு பற்றியது.
அவர் கூறுகிறார் :
நான் பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்போது விதவிதமான நினைவுப்பரிசுகளை அளிப்பார்கள்.
சில நினைவுப்பரிசுகளை மறக்க முடியாது. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் எனக்கு அப்படி ஒரு நினைவுப் பரிசினை அளித்தார்கள். அதில் கண்ணாடியைக் கொண்டு ராஜேஷ்குமார் , விவேக் ரூபலா என்று கவனமாக செதுக்கப்பட்டிருந்தது. இதை நான் பாதுகாக்க தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பரிசு வழங்கியவர்களுக்கு கண்ணாடி மனசு போலும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.