நம்பிக்கை நட்சத்திரம்...

ஐ.பி.எல். 2025 தொடரில் துரித சதம் அடித்த பதினான்கு வயதான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூரியவன்ஷி கிரிக்கெட் உலகின் கவனத்தை தனது பக்கம் திருப்பியுள்ளார்.
நம்பிக்கை நட்சத்திரம்...
Published on
Updated on
2 min read

ஐ.பி.எல். 2025 தொடரில் துரித சதம் அடித்த பதினான்கு வயதான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூரியவன்ஷி கிரிக்கெட் உலகின் கவனத்தை தனது பக்கம் திருப்பியுள்ளார். வருங்கால இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக, அவர் உருவெடுப்பார் என்பதில் ஐயமில்லை.

கிரிக்கெட் உலகின் பிரசித்தி பெற்ற விளையாட்டு திருவிழாக்களில் ஐ.பி.எல். தொடர் முக்கிய இடம் வகிக்கிறது. 'கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டும் லீக் தொடர்' என்ற பெருமையும், 'அதிக பார்வையாளர்களைக் கவரும் தொடர்' என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

நிகழாண்டு ஐ.பி.எல். தொடரில் பதினான்கு வயதான வைபவ் சூரியவன்ஷி (ராஜஸ்தான்), பதினாறு வயதான பிரயாஸ் ரே பர்மன் (பெங்களூரு), பதினேழு வயதான முஜிப்பூர் ரஹ்மான் (பஞ்சாப்), பதினேழு வயதான ரியான் பராக் (ராஜஸ்தான்), ஆயுஷ் மத்ரே (சென்னை) உள்ளிட்டோர் அடங்குவர்.

இவர்களில் வைபவ் சூரியவன்ஷியை மெகா ஏலத்தில் ரூ.1.1 கோடி அளித்து ராஜஸ்தான் அணி வாங்கியது. இதனால் ஐ.பி.எல். தொடரிலேயே இளம் வயது கோடீஸ்வரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

நான்கு வயதிலேயே ஆர்வம்:

பிகாரின் தஜ்புரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சூரியவன்ஷி நான்கு வயது சிறுவனாக இருக்கும்போதே, பிளாஸ்டிக் பந்துகளை வலுவாக அடிக்கும் திறனை அவரது தந்தை கண்டார்.

'கிரிக்கெட்டில் ஆர்வத்தை கண்டு எனது தந்தை சஞ்சீவ் சூரியவன்ஷி ஊக்கம் அளிக்க, அவரது மேற்பார்வையில் கிரிக்கெட்டை ஆடத் தொடங்கினேன். நான் விளையாடுவதற்காக தனியாக சிறு மைதானம் போன்ற அமைப்பை தந்தை அமைத்து தந்தார். அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர்களையும் அழைத்து எனக்கு பெளலிங் செய்ய கூறுவார். தற்போது அவரது நம்பிக்கையை மெய்யாக்கி உள்ளேன்' என சூரியவன்ஷி தெரிவித்தார்.

12 வயதில்...:

பிகாரைச் சேர்ந்த சூரியவன்ஷி, பன்னிரெண்டு வயதில் வினுமன்கட் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிகார் அணியில் ஆடினார். ஐந்து ஆட்டங்களில் 400 ரன்களை குவித்து கவனத்தை ஈர்த்தார். சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான யு 19 ஆட்டத்தில் 62 பந்துகளில் 102 ரன்களை விளாசி, 'யூத் டெஸ்ட் ஆட்டத்தில் துரித சதம் அடித்த இந்தியர்' என்ற பெருமையையும் பெற்றார்.

2024-இல் ரஞ்சி கோப்பையில் பன்னிரெண்டு வயதில் பிகார் அணியில் இடம் பெற்றவர் என்ற சாதனையும் நிகழ்த்தினார். தற்போது ஐ.பி.எல். தொடரில் இடம் பெற்று ஆடி தனது திறமையை நிரூபித்து வருகிறார். கடந்த ஏப். 19-இல் முதல் ஆட்டத்தில் 20 பந்துகளில் 34 ரன்களை எடுத்த சூரியவன்ஷி அவுட்டானவுடன் கண்ணீருடன் சென்றது குறிப்பிடத்தக்கது.

பிரையன் லாராவே முன்னோடி:

மேற்கு இந்திய தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாராவை தனது முன்னோடியாக கருதி ஆடி வந்துள்ளார் சூரியவன்ஷி. பிரையன் லாரா டெஸ்ட் ஆட்டத்தில் அவுட்டாகாமல் 400 ரன்கள் அடித்த விடியோவை பல முறை கண்டு களித்தார் சூரியவன்ஷி. 'ஆட்டத்தில் வெல்ல வேண்டும்' என்ற லாராவின் உத்வேகம் எனக்கு தூண்டுகோலாக அமைந்தது. பெளலர்கள் மீது லாரா ஆதிக்கம் செலுத்தியது போன்றே நானும் ஆதிக்கம் செலுத்தி ஆட வேண்டும்.

35 பந்துகளில் சதம் அடித்த இளம் வீரர்:

குறிப்பாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 பந்துகளில் 101 ரன்களை விளாசி ஐ.பி.எல். தொடரில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும், 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளையும் விளாசினார். குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த கடின வெற்றி இலக்கான 210 ரன்களையும் சேஸ் செய்து வெற்றி பெற உதவினார்.

அச்சமில்லாமல், தன்னம்பிக்கை, திறமையுடன் அனைத்து பெளலர்களையும் எதிர்கொண்டு சூரியவன்ஷி இந்தச் சாதனையை நிகழ்த்தினார். ஐ.பி.எல். தொடரில் இரண்டாவது துரித சதம் அடித்தவர் சாதனையும் தற்போது சூரியவன்ஷி வசமே உள்ளது.

கெயில் முதலிடம்: ஐ.பி.எல். தொடரில் 2013-இல் புணே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெயில் வெறும் 30 பந்துகளில் சதத்தைப் பதிவு செய்தார். ஐ.பி.எல். வரலாற்றில் இந்தச் சாதனையை இதுவரை எவரும் தகர்க்கவில்லை.

யூசுப் பதான் (ராஜஸ்தான்) 37 பந்துகளில் சதம் (2010 ஐ.பி.எல். தொடரில் மும்பைக்கு எதிராகவும், டேவிட் மில்லர் (பஞ்சாப் கிங்ஸ்) 38 பந்துகளில் சதம், (2013 (பெங்களூருக்கு எதிராக), டிராவிஸ் ஹெட் (ஹைதராபாத் 39 பந்துகளில் சதம், பிரியான்ஷ் ஆர்யா பஞ்சாப் 39 பந்துகளில் சதம், அபிஷேக் சர்மா (ஹைதராபாத்) 40 பந்துகளில் சதம் அடித்த சாதனைகள் உள்ளன.

சூரியவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை காணும்போது, ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் சாதனையையும் விரைவில் தகர்த்து விடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com