கண்ணுக்கு தட்டுப்படாத பிரியங்கள்!

ஒரு சினிமா ரசிகனாக எனக்கு சார்லி சாப்ளின், பாலுமகேந்திரா சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அமெரிக்க இயக்குநர் ஃப்ராங்க் காப்ரா என்னை ரொம்பப் பாதித்தவர்.
கண்ணுக்கு தட்டுப்படாத பிரியங்கள்!
Updated on
2 min read

ஒரு சினிமா ரசிகனாக எனக்கு சார்லி சாப்ளின், பாலுமகேந்திரா சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அமெரிக்க இயக்குநர் ஃப்ராங்க் காப்ரா என்னை ரொம்பப் பாதித்தவர். இரண்டாம் உலகப் போர் சமயம், உலகம் முழுக்கவே போர் அழுத்தம் மக்கள் மனதில் ஒருவித வெறுப்பை உண்டாக்கி இருந்தபோது, தன் சினிமாக்களில் பிரியத்தையும் நேசத்தையும் நிரப்பிக் கொடுப்பார் ஃப்ராங்க்.

நமக்குள் ஏதோ ஒரு சின்ன இலையை அசைக்கிறதுதான் ஒரு சினிமாவின் தாக்கமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சினிமா காட்ட ஆசைப்பட்டுதான் இதை எடுத்தேன். படிக்கிற புத்தகம் மாதிரி, பார்த்து வளர்ந்த சினிமா மாதிரி இதுவும் ரொம்பவே எளிமையானது. பெரிய திட்டம் எதுவும் இல்லை. இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம்'' என்று நம்பிக்கையாக பேசுகிறார் எம்.ஆர். பாரதி. பத்திரிகை, எழுத்து, உலக சினிமா என தனி ரசனைக்காரர். இப்போது 'ட்ரீம் கேர்ள்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.

'ட்ரீம் கேர்ள்' படத்தில் உலக சினிமா பாதிப்பு எதுவும் இருக்குமா....

அப்படி எதுவும் இல்லை. நான் பாலுமகேந்திராவின் மாணவன். அவரிடம் சில படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். பி.சி. ஸ்ரீராம் சாரோடு பல ஆண்டுகள் பயணித்தவன். நான் சினிமாவுக்கான உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிய போது சரியான படம் அமையவில்லை. சின்ன சின்ன படங்களில் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன்.'நெஞ்சமெல்லாம் நீயே' என்ற படத்தில் பணியாற்றினேன்.

அதுதான் உருப்படியான ஒரு படம். சினிமா என்பது கஷ்டம் கிடையாது .தேவையில்லாமல் சிரமப்படக்கூடாது. சரியாக வாய்ப்புகள் அமையவில்லை என்றால் அதிலிருந்து ஒரு பிரேக் கொடுத்துவிட்டு மீண்டும் செல்லலாம். சற்று விலகி இருந்து பார்த்தால் நமக்கு ஒரு திறப்பு கிடைக்கும். நான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சிரமப்பட்டதில்லை. சினிமாவை நம்ப வேண்டும் நேசிக்க வேண்டும் அவ்வளவுதான்.

மனித மனம் காட்டை மறந்து, வீட்டின் சூழலுக்குப் பழக்கப்பட்ட மிருகம் போல எப்போதும் ஒரு நிர்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது. மிருகம் மிருகமாக இருக்க இயலாமல் தடுப்பது மிருகத்தின் கோணத்தில் பெருந்துக்கம். எங்கேயாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து, உள் இழுத்து முழுவதுமாக புதைந்து போயிருந்த நினைவுகளை எல்லாம் தூர்வாரி வெளியே இழுத்துப்போட்டால் எப்படி இருக்கும். அப்படி ஒரு தாக்கத்தில் எழுந்த உணர்வுதான் படம். பரவசம் கொடுக்கும் பயணம், எளியவர்களின் எதிர்பார்ப்பு இல்லாத பிரியம்... இப்படித்தான் இருக்கும் இது.

எந்த மாதிரி திரை பாணி வடிவம்....

கடந்து போன காலங்கள்தான். காதல்தான். எப்பேர்பட்ட ஆன்மிக அனுபவம் அது. மலையின் முன் நிகழும் அற்புதம். காதலும்கூட ஆன்மிகத்தின் ஒரு வழிதான். காதல் மட்டும் அல்ல; எந்தத் தீவிரமான உணர்வும் ஆன்மிகத்துக்கான முதல் திறவுதான். ஷாஜகானைப் பற்றி எத்தனைக் கருத்துகள் உலவினாலும், நிரம்பி வழிந்த அவனுடைய காதல்தான் தாஜ்மஹால் என்ற இப்படி ஓர் அற்புதத்தை உருவாக்கி இருக்க முடியும்.

காதல், வாளைப் பறித்துவிட்டு... பூக்களைத் தருகிறது. காதல், ஒரு வீரனைக் கோழையாக்குகிறது... கோழையை வீரனாக்குகிறது. எப்போதும் காதல் முரணுக்குப் பிறந்த குழந்தைதான். கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தப் படம். ஒரு கனவை துரத்தும் காதலனின் வாழ்க்கை.

உள்ளடக்க கதை பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாமே...

சூரியன் குளிர்ந்து போகும்வரை நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னைக் காதலிப்பேன்' என்று எப்படிக் காதலிக்க வேண்டும் எனக் கற்றுத்தந்தார் ஷேக்ஸ்பியர். அப்படி ஒரு ரசனைக்காரர் இதில் வருகிற ஹீரோ ஜீவா.

காதல்தான்... காதல் மட்டும்தான் அவருக்கு அனைத்துக்கும் கிரியா ஊக்கி. அவருக்கு அனைத்தும் ஈரமான காதலிலிருந்துதான் உயிர்ப்பித்தது... உயிர்ப்பிக்கிறது. அவருக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்த கனவு அவரது காதலை எங்கே கொண்டு நிறுத்தியது என்பதுதான் இங்கே களம். ஹீரோயின் ஹரிஷா.

பிரபு சாஸ்தா, இந்திரா உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .இளமாறன் இசை. வசனம் ஹேமந்த் செல்வராஜ். படத்தொகுப்பு .கே.பி. அஹமத். சாருலதா பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் பாடல்களை சரிகம இசை நிறுவனம் வெளியிட்டுள்ளது எங்களுக்கு இன்னும் கூடுதல் பலம்.

இந்த மாதிரி சினிமாக்களுக்கு ரசிகர்கள் பெருகி வருகிற காலம் இது...

ஒரே மாதிரியான சினிமாக்கள் பார்த்து எல்லோருக்கும் ஓர் அலுப்பு இருக்கிறது. காமெடி, பேய் இதுதான் மாறி மாறி இருக்கிற ட்ரùண்ட். ஆனால் காதல் படங்களுக்கு எப்போதுமே ஒரு கூட்டம் உண்டு. 'தென் மேற்கு பருவக்காற்று', 'அசுரன்' மாதிரியான படங்களுக்கு வந்த கூட்டம் எல்லாம் நல்ல சினிமாக்களின் பின்னால் நிற்கிற கூட்டம்.

அப்படியான ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். அதன் பின் இந்தப் படத்தில் நிறைய பேர், எதார்த்த கதாபாத்திரங்கள். படத்தின் சில காட்சிகளைப் பார்த்த இயக்குநர் பார்த்திபன் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சாலமன் போஸþக்கு தனது அடுத்தப் படத்தில் வாய்ப்பு தருவதாக சொல்லியிருக்கிறார். இது எங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. நம்பிக்கையாக காத்திருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com