மனிதர்களுக்கு காலம் அளித்த பரிசு!

அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கிறது.
மனிதர்களுக்கு காலம் அளித்த பரிசு!
Published on
Updated on
2 min read

அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கிறது. அது நல்லதோக் கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும்.

அப்படித்தான் இங்கே ஒரு சூழல். கடவுளோ, சைத்தானோ நம்பிக்கைகள் வேறுபடலாம். ஆனால், ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்பது நிதர்சனம். இதுதான் இந்தக் கதையின் அடிப்படை. கதையின் உள்ளடக்கம் பேசி கரம் கொடுக்கிறார் இயக்குநர் இராம் இந்திரா. “மனிதர்கள்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.

நீங்கள் பேசுகிற விதம் சரி.... இப்போதுள்ள டிரெண்ட் பிடித்து கதை சொல்லுவதுதான் இங்கே முக்கியம்...

திண்டுக்கல்தான் எனக்கு ஊர். அங்கிருந்து புறப்பட்டு இங்கே வந்து சேர்ந்தது பெரும் பயணம். பெரிய சினிமா ஞானம் இல்லை. அப்பா, அம்மாவுக்கு சினிமா பிடிக்கும். அப்படித்தான் சினிமா எனக்குள் வந்தது. நல்ல சினிமாக்கள் அம்மாவின் சாய்ஸ். அது அப்படியே உள்ளுக்குள் இறங்கி விட்டது.

அரசு கவின் கல்லூரியில் சேர்ந்தேன். அது ஒரு கலைக் கோயில். சும்மா இருக்கிற நேரத்தில் கதைகள், புத்தகம், சினிமா என தனி உலகம் இருந்தது. ஒரு நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்கிற நினைப்பு மனசுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் சினிமா பற்றி நிறைய கற்றுக் கொண்டே இருந்தேன். சினிமாவுக்கான ஸ்கிரிப்ட்டுக்கு, எதையும் கொஞ்சம் மேலே இருந்து பார்க்க வேண்டும் என சொல்லுவார்கள்.

இந்த கதைக்காக வாழ்க்கையையும் மேலே இருந்து பார்த்தேன். முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாம பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால், முதல் முத்திரை அழுத்தமாக பதிய வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தேன்.

எல்லோரும் எதாவது ஒரு நேரத்தில் சந்திக்கிற பிரச்னை இந்தக் கதையில் இருக்கும். பணக்காரனையோ, கோட்டீஸ்வரனையோ, பலம் பொருந்திய தாதாவையை எங்கேயாவது சந்திப்போம். அவர்கள் நமக்கு உதவுவார்கள், இல்லையெனில் நமக்கே எதிராக திரும்புவார்கள்.

அப்படி ஒரு சூழல்தான் கதை. வாழ்க்கையின் அசல் முகமாக இருக்கும். என் முதல் படத்தில் குறைகளோ, பிழைகளோ இருக்கலாம். எதைப் பற்றியும் விமர்சனம் செய்யவோ, குறைகளை சுட்டிக் காட்டவோ, நான் படம் எடுக்கவில்லை. எனக்குள் இருக்கும் நல்ல சினிமா கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு அடித்தளம். அவ்வளவுதான்.

எப்படி வந்திருக்கிறது படம்...

நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ஆறாத வலி இருந்துக் கொண்டே இருக்கும். அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் ஒரு கோபத்தை சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். அந்த கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம். ஒன்லைன் ரொம்பவே சிம்பிள்தான்.

ஆனால், த்ரில்லரில் திரைக்கதை ரொம்பவே முக்கியம். படத்தின் மேக்கிங் இன்னும் பலம். அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை கடந்து விடுகிற மனசு, எதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சி கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும். அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை. போராடுவதும் வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு.

அன்பும், போராட்டமும்தான் இந்த மானூடத்தின் நிரந்தரம். நல்லவனாக வாழத்தான் எல்லோருக்கும் ஆசை. ஆனால், காலம் எல்லாவற்றையும் கண்ணெதிரே கலைத்து போட்டு விட்டு ஒன்றும் தெரியாத சிறுப்பிள்ளை போல் ஓடி ஒளிந்து கொள்கிறது.

நல்லவன் கெட்டவனாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான். எதை வெறுக்கிறமோ, அதை நேசிக்கிறோம். எதை விரும்பினமோ, அதை வெறுக்கிறோம், ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனை குழிக்குள் தள்ளி, கேட்காததை கொடுத்து கேட்டதை மறுத்து விளையாடுகிற இந்த காலம் ஒரு சில மனிதர்களுக்கு என்ன பரிசளித்தது என்பதுதான் இங்கே கதைக்களம்.

உள்ளடக்கத்தில் இன்னும் கொஞ்சம் தெளிவு கொடுக்கலாமே...

மனித வாழ்க்கையை வேறு கோணத்தில் அணுகி வந்திருக்கிறேன். அது எல்லாமே இளம் தலைமுறைக்கான புரிதலாகத்தான் இருக்கும். ஒரு படம் என்னென்ன அனுபவங்களைத் தரும் என எனக்குள்ளேயே ஒரு கணக்கு இருக்கிறது. அதற்கு தகுதியாக இந்தப் படம் வந்திருக்கிறது. இந்தப் படம் ஒரு அசல் வாழ்க்கையை விட்டு, கொஞ்சமும் விலகாமல், ஏற்றி வைத்தும் சொல்லாமல், அச்சு அசலாக வந்திருப்பதுதான் விசேஷம்.

சொல்லியே ஆக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறேன். படம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே படம் உங்களை உள்ளே இழுத்துப் போட்டு விடும். மனித உணர்வுகள் எல்லாமே இந்தப் படத்தில் சரி பாதி இருக்கும். எல்லாமே புது காட்சிகளாக எடுத்து முடித்திருக்கிறேன். சில விஷயங்களை ஊடுருவிப் பார்த்தால், இது எல்லோருக்குமான சினிமாவாகவும் இருக்கும்.

முதல் பட இயக்குநருக்கு தயாரிப்பாளர் அமைவது வரம்....

சுதந்திரமான சினிமா. சின்ன வயதில் கூட்டாஞ்சோறு ஆக்குகிற மாதிரி ஒரு சினிமா எடுத்திருக்கிறோம். கதை சொல்லும் முறையில், மற்ற நுட்பங்களில் சர்வதேச தரம் இருக்கும். சமரசம் இருக்காது. ஆனால், சுவாரசியமான சினிமா. சுவாரசியம் என்பது பாட்டு, சண்டை, குரூப் நடனத்தில் மட்டுமே இல்லை.

இயல்பான வாழ்க்கையிலும் இருக்கிறதென சொல்ல வருகிற சினிமா. தயாரிப்பாளருக்காக பாட்டு வைத்தேன். காமெடி வைத்தேன். குத்து பாடல் வைத்தேன் என்று இல்லாமல் கதைக்கு நேர்மையாக என்ன வைக்கிறோம்... அதுதான் முக்கியம் என்று நினைத்து ஒரு படத்தை எடுத்தோம். மனிதர்கள் படத்தைப் பார்த்த பிறகு நாம் பேச நிறைய விஷயம் இருக்கும் என்று நம்புகிறேன். ஓர் எளிமையான சினிமா. கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ், சரவணன், குணவந்தன், சாம்பசிவம் இந்த ஆறு பேர்தான் கதையின் மாந்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com