தாகூரைப் போற்றும் கொரியர்கள்...

உலகில் எந்தவொரு படைப்பாளியின் எழுத்துகளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அளவுக்கு கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை.
தாகூரைப் போற்றும் கொரியர்கள்...
Published on
Updated on
2 min read

டி.எம்.இரத்தினவேல்

உலகில் எந்தவொரு படைப்பாளியின் எழுத்துகளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அளவுக்கு கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. கொரிய இலக்கியங்கள் பலவற்றிலும் தாகூரின் பாணி பரவலாக இருக்கிறது. இந்தியாவும், கொரியாவும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் சிக்கித் தவித்தபோது, தாகூரின் கவிதை கொரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டைச் சேர்ந்த கவிஞர், பிற நாட்டு மக்களால் போற்றிப் புகழும்படியான பெரும் பேற்றை பெற்றவர் அவர் மட்டும்தான்.

பழைய பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்த ஆதாரங்களைப் புரட்டிப் பார்த்தால், இந்தியாவும், கொரியாவும் தொடர்புடைய செய்திகள் நிறையவே தெரியவருகின்றன.

முதல் நூற்றாண்டில் காயா வம்சத்தைச் சேர்ந்த "கிம்- சுரோ' என்ற அரசன் இந்தியாவில் உள்ள அயோத்தியைச் சேர்ந்த ராஜகுமாரியை மணம் செய்தாராம். இதை நம்புவதானால், புராணக் காலத்தில் இரு நாடுகளுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்பதையும் ஏற்க வேண்டும். இதுதவிர, புத்த மதமும் இரு நாடுகளையும் இணைக்கும் சக்தியாக இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய இலக்கியமும் கலாசாரமும், குறிப்பாக கவி ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துகள் எல்லாம் இந்திய ஆன்மிகம், கலாசாரம், சிந்தனை, கலை, பண்பாடுகள் எல்லாவற்றின் மொத்தப் பிரதிநிதியாக தாகூரை கொரியர்கள் பலர் ஏற்றுகொண்டிருக்கின்றனர்.

அவருடைய மனித நேய உணர்வும், நியாய உணர்வும் அவருக்குப் பல நண்பர்களை உலகில் உருவாக்கிக் கொடுத்துள்ளன. முதலாவதாக, படிப்பவரையும் அவருடைய எழுத்துகள் மனதைத் தொடும். ஏதேச்சதிகாரத்துக்கு எதிரான போக்கை ஆதரிப்பவர் தாகூர். தம்முடைய சக்தி மிகுந்த கவிதைகளால் ஏதேச்சதிகாரத்துக்கு எதிராக மனிதக் குலத்தைத் தூண்டிவிட்டார்.

காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்டிருந்த கொரியா அப்போது அதற்கு எதிரான உணர்வுகளைத் தட்டி எழுப்பும் முயற்சியில் தாகூரை கொரியாவுக்கு விஜயம் செய்ய ஏற்பாடு செய்திருந்தது. அவரால் செல்ல முடியவில்லையே தவிர, கொடுக்கப்பட்ட அழைப்பிதழைக் கண்டு நெகிழ்ந்துவிட்டார். அந்த அழைப்பிதழில் கொரிய தேசிய உணர்வுகள் வெளிப்பட்டிருந்ததுதான் காரணம். அதில், தாகூரின் கவிதை நான்கு வரிகள் அச்சிடப்பட்டிருந்தது.

'ஆசியாவின் பொன்யுகத்தில் அதன்

ஒளித் தீபங்களில் ஒன்று கொரியா;

அந்தத் தீபம் மறுபடி ஏற்றப்பட்டுக்

கிழக்கை ஒளிர்விக்கக் காத்திருக்கிறது'

என்ற பாடலில் ரவிந்திரநாத் தாகூரின் கொரியா விடுதலைக்குச் சாதகமான கருத்துகள் வரவேற்கப்பட்டன. ஜப்பானுக்கு எதிராக அவர் கொரியாவை ஆதரித்தார்.

1924-இல் இரண்டாம் முறையாக ஜப்பானுக்கு தாகூர் விஜயம் செய்தபோது, ஜப்பானியர்கள் கூட்டத்திலேயே அவர் இதைச் சொன்னார். ஒரு மனிதர் என்ற அடிப்படையில் அந்தப் புரட்சிக்கு ஆதரவளித்தார் தாகூர். வெளிப்படையாகப் பார்த்தால், மிருதுவாகத் தெரியும். ஆனால், உள்ளுக்குள் அவரது இதயத்தில் சினத்தின் சீற்றம் புலப்படும்.

ஜப்பானியர்களின் தவறான கொள்கைகளுக்கு எதிராக அமைந்த அவரது கவிதைகள் வாயிலாக, ஜப்பானியக் கவிஞர்களிடம் எந்தவிதத் தாக்கத்தையும் காண முடியவில்லை.

ஆனால், சீனாவில் மட்டும் சில கவிஞர்களிடம் தாகூரின் எழுத்துகளின் தாக்கம் தெரிந்தது. கொரியாவில் பல கவிஞர்களின் குறிப்பாகத் தேசிய உணர்வு கொண்ட கவிஞர்களிடம் தாகூரின் எழுத்துகள் பெரும் பாதிப்பை உண்டாக்கின. அதிலும், "ஹேன்யோங் அன்' எனும் சீனக் கவிஞரின் படைப்புகளில் தாகூரின் இலக்கியமும், கொள்கைகளும் இரண்டறக் கலந்து வெளிப்பட்டன.

கொரிய சரித்திரத்தில், "முக்கிய தேசிய எழுச்சியின் சகாப்தம்' என்று குறிப்பிடப்படும் மார்ச் முதல் இயக்கத்தின் பத்தாவது ஆண்டு விழா 1929-இல் கொண்டாடப்பட்டது. இது ஜப்பானுக்கு எதிரானது. தாகூரின் கவிதை அந்த நாலு வரிகள்தான். ஆனால், கொரிய மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப அவை போதுமானவையாக இருந்தன. கொரிய மறுமலர்ச்சி ஏகாதிபத்தியத்துக்கு எதிராகச் சுடர் விடச் செய்தன.

இன்றைக்கும்கூட முன்னேற்றத்தையும் வளமான எதிர்காலத்தையும் நோக்கி வீறுநடை போட, கொரிய மக்களுக்கு எத்தகைய உத்வேகமும், உற்சாகமும் தாகூரின் கவிதைகள்தான். தாகூரின் பெயர் ஒவ்வொரு கொரிய வீட்டிலும் ஒலிக்கிறது. அவரது பங்களிப்பை ஒவ்வொரு கொரியர்களும் உணர்த்தியிருக்கிறார்கள்.

கவி ரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்துக்கான நோபல் பரிசை அவர் 1913-இல் பெற்றவுடனே அவர் கொரியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர், 1916-இல் இருந்து தாகூரின் அனைத்துப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் அறிமுகமாயின. தாகூரின் கீதாஞ்சலி 1920-ஆம் ஆண்டிலும், "பிறையும் தோட்டக்காரனும்' என்ற நூல் 1924-ஆம் ஆண்டிலும், "போஸ்ட் ஆபிஸ்' என்ற புகழ் பெற்ற நாடகம் 1926-ஆம் ஆண்டிலும் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

கொரியா மீது தாகூர் மிகுந்த அக்கறை காண்பித்தார். மேற்கத்திய எழுத்தாளர்களைப் போல் அல்லாமல், அவரை ஓர் எழுத்தாளராக மட்டும் அன்றி ஒரு தத்துவஞானியாகவும் ஏற்றது கொரியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com