ஆண்டுதோறும் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் வீடுகளில் தாய்களைப் பிள்ளைகள் போற்றுகின்றனர். சமூக ஊடகங்களிலும் வாழ்த்தி, பதிவுகள் செய்வதும் தற்போது நடைபெறுகிறது.
இந்த நிலையில், அன்னையர் தினம் குறித்து பெண் ஆளுமைகள் சிலரிடம் பேசியபோது:
முனைவர் செ.ராஜேஸ்வரி, மொழிபெயர்ப்பாளர், மதுரை:
'அம்மா என்றால் அன்பு' என்பது ஒரு மனிதனுக்கு முதல் முதலில் உலகத்தைக் காட்டியவள் அன்னை. அவளே முதல் ஆசிரியை. அவள் காட்டிய விஷயங்களையே அவன் நல்லது என்று கண்டான். அவள் பேசியவற்றையே அவன் சரியானவை என்று கேட்டுக் கொண்டான். அவள் சொல்லித் தந்தவற்றை மட்டுமே அவள் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிந்தான்.
தாயே கண்கண்ட தெய்வம். ஒரு குழந்தைக்கு தாயும் அவளே, தந்தையும் அவளே, ஒற்றைக் குழந்தைகளுக்கு சகோதர்களும் அவளே. சொந்தமும் பந்தமும் இல்லாதவர்களுக்கு அனைத்து சொந்தமும் பந்தமுமாக ஒரு தாய் விளங்குவாள். தன் குழந்தையின் குரலைக் கேட்ட மாத்திரத்தில், 'உடம்புக்கு சுகம் இல்லையா?' என்று கேட்பாள். 'ஒரே குஷியாக இருக்கிறாய்' என்று கேட்பாள்.
தனக்குப் பத்து குழந்தைகள் இருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் முழுமையாக அன்பைக் கொடுப்பாள். ஆனால், பிள்ளைகள் தன் தாயை பங்கு போட்டு, 'காடாறு மாதம்', 'நாடாறு மாதம்' என்ற வகையில், 'உன் வீட்டில் ஆறு மாதம், என் வீட்டில் ஆறு மாதம்' என்று வைத்துப் பாதுகாப்பார்கள்.
தாய் ஆரோக்கியமான பிள்ளைகளைக் காட்டிலும், நோயுற்ற பிள்ளையிடம் அதிகம் அன்பும், அக்கறையும், கவனமும் கொள்வாள். ஆனால், பிள்ளைகளோ நோயுற்ற தாயை கவனிக்க முன்வருவதில்லை.
வழிதவறிப் போன குழந்தையிடமும் அன்பு காட்டுபவள் தாய். 'திருத்திக் கொண்டு வர முடியும்' என்று நம்பி முழு அன்பை செலுத்துவாள். ஒரு தாய்க்கு அதிகபட்ச மிகழ்ச்சி அவள் பிள்ளைகளின் பிள்ளைகளைப் பார்க்கும்போது உண்டாகும். தன் வம்சம் விருத்தி அடைய வேண்டும் என்பதன் மூலம் மனிதர் குல மேம்பாட்டுக்கு உதவுகின்றவள் தாய் மட்டுமே. பிள்ளையிடம் கட்டுப்பாடற்ற அன்பை செலுத்துபவள்.
துறவியாகப் போன பட்டினத்தார், 'நான் எங்கிருந்தாலும், என் தாய்க்கு இறுதிச்சடங்கு செய்ய வருவேன்' என்று சொல்லி, கடமைகளை நிறைவேற்றினார்.
'மேரியின் தாயன்பைக் காட்டிலும் யூதாஸின் தாயன்பு குறைந்ததல்ல' என்பார் கலீல் ஜிப்ரான். 'தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது' என்றார் முகம்மது நபி (ஸல்).
தனது மரணத்துக்கு முன்பு இயேசு கிறிஸ்து தனது சீடர்களிடம், 'இதோ உன் தாய்' என்று தனது தாயாரை ஒப்படைத்தார். ஒரு தாய் உருவாக்கும் ஆரோக்கியமான, அறிவான குழந்தை தான். நாளைய உலகத்தின் வெற்றித் தூண்கள். மனித குல மேம்பாட்டுக்கு தாயன்பே விதையாகும் வேராகும் பின்பு விருட்சமாகும்.
ராதிகா ஹரீஸ், பிரிட்டிஷ் தேர்வு வாரியத்தின் உறுப்பினர், கோவை:
தாய் என்றால் சிறப்பு. தமிழ் என்றால் தனிச்சிறப்பு. தமிழில் தாய்மைக்கான அழகான, அருமையான எத்தனை அர்த்தங்கள்தான் உள்ளன. பெற்றோருக்கான இரு சொற்களும், உயிரெழுத்தில் தொடங்கி, மெய்யெழுத்தில் தொடர்ந்து உயிர்மெய் எழுத்தில் முடிகிறது. எனினும், அப்பாவில் வல்லின இடையெழுத்து-அம்மாவிலோ மெல்லினமாக மாறுகிறது. கருவை உருவாக்கும் உன்னத உயிர் தாய்.
உயிர் தந்து உயிர்த்தெழுபவள், உயிர்த்தெழுந்து உயிர்த்தெடுப்பவள், தன்னைப் பின்தள்ளி தன் துக்கம், தூக்கம், பசி, பிணி என அனைத்தையும் புறந்தள்ளி தன் பெற்றெடுத்தக் குழந்தைகளுக்காகவே வாழ்வை அர்ப்பணிப்பவள். அனைத்து உயிரினங்களிலும் சகலம் ஆகிறாள்.
தாய்மை என்பது பெற்றால்தான் பிள்ளையா? என்ற ஒன்றைத் தாண்டி பெண்மைக்குள் ஒளிந்து, ஒளிரும் உயரிய உணர்வு. தாதியாய், செவிலியாய், ஆசிரியையாய், ஆளுமையாய் என பன்முகங்களிலும், பன்துறைகளிலும் தாய்மை உணர்வு ததும்ப, சமூகங்களை, சந்நதிகளைச் சரியாக்க, சரியாகக் காக்க சதா சர்வ காலமும் சவால்களை சந்தித்துக் கொண்டே இருப்பவள்.
எத்தனையோ பெண்கள்தான். தாயானபின், தன் தாயை நிதமும் நினைத்து நெக்குருவதைக் கண்டும், கேட்டும் இருப்போம். ஆம் தாய்மை என்பது உதிர்ப்பது அன்று, உதிப்பிப்பது அன்று, உதிப்பது இன்றைய விடியலில். உதிப்பது பரிதி மட்டுமன்று, பரிசுத்தமான தாய்மையின் பரிமாணங்களும், நம்மால் இயன்ற பாராட்டுதல்களும் தான் அன்னையர் தின சிறப்பு.
நெல்லை கார்த்திகா- பேச்சாளர்:
ஒரு நாள் மட்டுமல்ல; ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்தான் அன்னையர். அவர்கள் நேரில் காணும் தெய்வங்கள். உலகத்துப் பேரழகிகள். ஒரு ஆண் வெளியுலகத்தில் சவால்களை எதிர்கொள்கிறான். ஆனால், ஒரு பெண் தன் கருவிலேயே பல சவால்களையும் எதிர்கொண்டு சாதனைகளைப் படைக்கிறாள்.
பெண்கள் வீட்டில் பல உறவுகளில் நம்மை வழி நடத்தினாலும், அன்னை என்ற உறவு உன்னதமானது. எல்லா உறவுகளையும் ஒன்றிணைப்பவள் அவள்.
உலகில் அன்னையின் அன்புக்கும், பண்புக்கும் வேறு எதுவும் ஈடு இணையில்லை. அன்பின் அடையாளமாகத் திகழும் அன்னையைத் தவிர அதீத அன்பை வேறு யாராலும், கொடுத்து விட முடியாது.
அன்னையர் தினத்தன்று வாழ்த்து அட்டைகளிலும், கைப்பேசி தகவல்களிலும் அன்னையை மகிழ்விப்பது உண்மையான மகிழ்ச்சியே கிடையாது.
'தன் வாரிசை நற்பண்பு நிறைந்தவர்' என பிறர் சொல்ல கேட்கும் தாய், தன் பெற்ற காலத்தில் பெரிதும் மகிழ்கிறாள். அதைத்தான் 'சான்றோன் எனக் கேட்ட தாய்' என்கிறார் திருவள்ளுவர். அதுவே பெற்ற தாய்க்கு பிள்ளைகளாகிய நாம் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு.
-பொ.ஜெயச்சந்திரன்
அமுதா நித்தியானந்தம், ராஜகோபால் பாலிடெக்னிக் டீன்:
'மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா...' என்றார் பாரதியார். ஒரு தாய் தனது குழந்தைகளைப் பராபட்சமன்றி, ஒரே மாதிரியாக வளர்த்தெடுப்பாள். 'ஒருவன் நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னையின் வளர்ப்பிலே..' என்பார்கள்.
தனது குழந்தைகள் எந்த நேரத்தில் அழைத்தாலும் சிரித்துகொண்டே பதில் சொல்வார் தாய். ஒருவன் எந்த உயர்நிலைக்குச் சென்றாலும், அவன் தனது தாயின் மடியில் இருந்த நாள்கள்தான் சொர்க்கம். அந்த நாள்கள்தான் வாழ்வின் இனிமையான நாள்கள்.
புனிதமான தாயின் பரிபூரண ஆதரவு என்றும் பிள்ளைகளுக்கு எந்தச் சூழலிலும் கிடைக்கும்.
தாய் மறைந்துவிட்டாலும் மனக் குழப்பத்தில் இருக்கும்போது, தாயின் புகைப்படத்துக்கு முன் சென்று வேண்டி வணங்கினாலே நல்வழி கிடைத்திடும்.
ம.ஜெயமேரி, ஆசிரியை, விருதுநகர்:
இல்லத்தில் உள்ள அன்னையே தெய்வம்தான். மனிதர்களுக்கு அவரவரின் தாய்தான் முதல் தெய்வம். வீட்டிலேயே உள்ள தாயை வணங்குவதே ஒவ்வொருவரின் தலையாயக் கடமை. 'மாதா, பிதா, குரு, தெய்வம்..' என்று வகுத்திருக்கின்றனர். அன்னையே யாமறிந்த முதல் தெய்வம்.
உலகில் வாழும் உயிர்களில் சுயநலமில்லாத உறவு அம்மா. அம்மாவின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.
ஒரு கவிதைப் போட்டியில் நான் பங்கேற்றபோது, 'அம்மா என்பதற்கு அன்பு' என்றே எழுதிவிட்டு வந்தேன்.
பிரியா சௌந்தரராஜன், ஆர்யா டி.வி. நிறுவனர், வேலூர் மாவட்டம்:
'தாயில்லாமல் நானில்லை. தானே எவரும் பிறந்ததில்லை..', 'தாயிற் சிறந்த கோயிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை', 'அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா.. ஆடும் வரை ஆடிவிட்டு அன்னை மடியில் தூங்கம்மா...', 'அம்மா என்று அழைக்காத உயிரில்லையே.. அம்மாவை வணங்காத உணர்வில்லையே.. நேரில் நின்று பேசும் தெய்வம்...' என்று தாயை முன்னிறுத்தி, திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
தாயை வணங்காமல் எவரும் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் அன்னையரின் பிறந்த நாளில் வணங்குவதைப் போல, அன்னையர் தினத்தை நாமும் கொண்டாட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.