ஒரு குற்றமும் அதன் ஆதாரமும்!

'தி வெர்ட்டிக்' திரைப்படம் குறித்து...
ஒரு குற்றமும் அதன் ஆதாரமும்!
Published on
Updated on
2 min read

முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நாம் பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால், முதல் முத்திரை அழுத்தமாக பதிய வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தேன். எல்லோரும் எதாவது ஒரு நேரத்தில் சந்திக்கிற பிரச்னை இந்தக் கதையில் இருக்கும். பணக்காரனையோ, கோடிஸ்வரனையோ, பலம் பொருந்திய தாதாவையோ எங்கேயாவது சந்திப்போம். அவர்கள் நமக்கு உதவுவார்கள், இல்லையெனில் நமக்கு எதிராக திரும்புவார்கள். அப்படி ஒரு சூழல்தான் கதை. வாழ்க்கையின் அசல் முகமாக இருக்கும். அன்பு கரம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் கிருஷ்ண சங்கர். அமெரிக்க குறும்பட உலகில் தனித்து தெரியும் தமிழர். இப்போது அமெரிக்காவிலேயே தனது முதல் தமிழ்ப் படத்தை முடித்து இங்கே வெளியிட இருக்கிறார். படத்தின் பெயர் 'தி வெர்ட்டிக்'.

அமெரிக்க குறும்பட உலகில் தனி முத்திரை... இப்போது தமிழ் சினிமா... எப்படி நடந்தது...

எனக்கு திருநெல்வேலிதான் பூர்விகம். எல்லோரையும் போல படிப்பு, தனிமை என ஒரு வாழ்க்கை இருக்கும். படிப்புக்காகத்தான் அமெரிக்கா பயணமானேன். தொழில் சம்பந்தமான படிப்பு. இதனிடையே அமெரிக்க சினிமாக்களின் தாக்கம் என்னுள் பெரும் மாற்ற்றத்தை உண்டாக்கியது. கிடைக்கிற நேரத்தில் சுதந்திர குறும்படங்களை எடுத்தேன். அது தவிர தியேட்டர் ஆர்ட்டிஸ்களை வைத்து நாடகங்களை இயக்குவது என ஒரு கட்டத்தில் பயணம் தடம் மாறியது. அதில் வெகுவாக பாராட்டுகளும் வந்ததடைந்தது. அதன் பின்தான் சினிமாவின் பக்கம் வந்தேன். இது தமிழ் சினிமாவில் என் முதல் படி. இந்த திரைக்கதைக்கான சில ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு விஷயம் என் கண்களுக்கு வந்தது. அது ஓர் உண்மை சம்பவம். எதார்த்தம் என்பது கற்பனையை காட்டிலும் விநோதமானது. அதிசயக்கத்தக்கது. அது மாதிரியான ஒரு சம்பவம் அது. இது மாதிரி நடக்குமா என்று கூட தோன்றியது. அதை பின் தொடர்ந்து போய் பார்த்தால், உலகம் நெடுகிலும் அந்த பிரச்னை நடந்துக் கொண்டே இருப்பதாகத் தெரிந்தது. கொஞ்சம் நிதானித்து பார்த்தால், அதில் சினிமாவுக்கான அவ்வளவு சங்கதிகள் இருந்தன. அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இதன் ஆரம்ப புள்ளி. பிளாக் காமெடியாக எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், கதை ஒரு கட்டத்துக்குப் பின் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படி ஆரம்பமான ஒரு பயணம்தான். இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

கதையின் உள்ளடக்கம் பற்றி...

ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஓர் அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் இந்த கதையின் அடிப்படை. அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன். எல்லா மனித சிக்கல்களிலும் மனித மோதல்கள் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு மோதல் உண்டு. ஆக்சன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

அமெரிக்காவில் படப்பிடிப்பு... நடிகர்களின் பங்களிப்பு...

இந்தப் படம் எனக்கு மறக்க முடியாத அனுபவம். நடிப்பவர்களைத் தேர்வு செய்ய உதவிய தயாரிப்பாளர் கோபிக்கு முக்கிய நன்றி. அவர் அரை மணி நேரத்தில் இப்படிப்பட்ட நடிப்புக் கலைஞர்களை எனக்குத் தேர்வு செய்து கொடுத்தார். தமிழ் நடிகர்களின் நடிப்பை பார்த்து அமெரிக்காவில் உள்ள நடிகர்கள் வியந்தார்கள். இங்கு உள்ள நம் நடிகர்கள் ஒவ்வொருவரும் 10 ஹாலிவுட் நடிகர்களுக்குச் சமமானவர்கள். இதை நான் சொல்லவில்லை அங்குள்ளவர்களே சொன்னார்கள். இதை நான் நேரில் பார்த்துப் புரிந்து கொண்டேன். ஒரு நீதிமன்றக் காட்சியில் வரலட்சுமி நடித்ததைப் பார்த்து அங்கு ஜூரிகளாக இருந்த மூன்று பேர் கண் கலங்கினார்கள். நீங்கள் கண் கலங்கக் கூடாது நீங்கள் ஜூரிகள் என்ற போது இந்த பெண்ணின் நடிப்பைப் பார்த்து அசந்து விட்டோம் என்றார்கள். இங்கிருந்து வந்த அனுபவமுள்ள நட்சத்திரங்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தான் 23 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க முடிந்தது. எனது உதவி இயக்குநர்கள் திரைப்படத்தைப் பற்றிய திருத்தமான தெளிவான அறிவோடு இருந்தார்கள். அதனால் தான் இந்தப் படத்தை இவ்வளவு குறைவான நாட்களில் எடுக்க முடிந்தது. அவர்களிடமும் நான் கற்றுக் கொண்டேன்.

என் உதவி இயக்குநர்கள் இந்த படத்திற்காக கொடுத்த உழைப்பு சாதாரணமல்ல.

18 மணி நேரம் படப்பிடிப்பு என்றால் மூன்று மணி நேரம் அதற்கு பின்பும் வேலை பார்த்தோம். அந்த அளவிற்கு எனக்கு அவர்கள் பக்கபலமாக இருந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com