திரைக்கதிர்

25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் - பிரபுதேவா கூட்டணி இணைகிறது.
திரைக்கதிர்
Published on
Updated on
1 min read

ரஜினிகாந்த்தின் திரைப்பயணம் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா எடுப்பது தொடர்பாக ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் மன்ற நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். சோளிங்கரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் திரையில், ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களில் இருந்தும் சிறப்புக் காட்சிகளையும், அடிதூளான பஞ்ச் வசனங்களையும் தொகுத்து வெளியிட்டு அமர்க்களப்படுத்தினர்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் - பிரபுதேவா கூட்டணி இணைகிறது. படத்தின் பெயர் 'மூன்வாக்'. இயக்குநர் மனோஜ் என்.எஸ் இப்படத்தை இயக்குகிறார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பாக இது உருவாகவுள்ளது. குடும்பம் முழுவதையும் மகிழ்விக்கும், இசை, நடனம் மற்றும் நகைச்சுவையால் நிரம்பிய திரைக்கதையாக உருவாக்கம் பெறுகிறது. பலரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள 'மூன்வாக்' திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் 25 வருடங்கள் கழித்து ஒன்றிணைகிறார்கள்.

இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்து ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 'கடந்த சில இரவுகள் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. கடந்த சில நாள்களாக, ஒவ்வொரு உரையாடலுக்குப் பின்னும், ஒவ்வொரு செய்தி அறிவிப்புக்குப் பின்னும், ஒவ்வொரு இரவு உணவுக்குப் பின்னும் ஒரு பதற்றம் இருந்தது. எங்கோ ஒரு மலை உச்சியில் நமது வீரர்கள் விழித்திருப்பதையும், எச்சரிக்கையுடன் இருப்பதையும், ஆபத்தில் இருப்பதையும் நாம் பார்த்தோம். நம் வீடுகளில் நாம் பாதுகாப்பாக இருந்தபோது இருளில் நின்று, தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து உறக்கத்தை மறந்து நம்முடைய இராணுவ வீரர்கள் செயல்பட்டார்கள். இது வெறும் வீரமல்ல, இது ஒரு தியாகம்' என பதிவு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கெளரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரிக்கிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி 33 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. எதிர்வரும் செப்டம்பர் 18- ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது இப்படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com