மாற்றுத் திறனாளி பெண்ணால், மாற்றுத்திறனாளிப் பெண்களுக்காக, மதுரையில் இருபது ஆண்டுகளாக 'தியாகம்' பெண்கள் அறக்கட்டளையானது செயல்படுகிறது. மதுரை மாநகர எல்லையையும் தாண்டி சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் 'தியாகம்' தனது உதவிக்கரங்களை நீட்டியுள்ளது.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் விதியை நினைத்து சோகத்தில் மூழ்காமல், 'முயற்சியே என் பாதை... நம்பிக்கையே என் பயணம்' என்று சக மாற்றுத் திறனாளிகளுக்கும் புதிய பாதையை அமைத்து வழிகாட்டியாக வாழ்ந்து வருகிறார் நாற்பத்து எட்டு வயதான அமுத சாந்தி.
அவரிடம் பேசியபோது:
'நான் பிறக்கும்போதே எனக்கு இடது கையானது அரை கையாக இருந்தது. பெற்றோர், உறவினர்களுக்கு வருத்தம். எனக்கு ஊனம் உண்டு என்ற எண்ணம் வராமல் பார்த்துகொண்டனர். ஜவுளி வியாபாரம் செய்து வந்த தந்தை தொழில் நஷ்டத்தில் அனைத்தையும் இழந்தார். அதனால் வறுமை, இழப்புகளைச் சந்தித்தே குடும்பம் நகர்ந்தது.
தொடக்கப் பள்ளியில் சக மாணவர்கள் எனது தோற்றத்தைக் கண்டு, காட்டிய வித்தியாசமான பார்வை என் மனதில் அம்பாகத் தைத்தன. வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்பு முதல் திருநெல்வேலியில் இருக்கும் காந்தி கிராமத்தின் கிளை நிறுவனமான 'அவ்வை ஆசிரமம்' என்னை அரவணைத்தது. பி.காம். வரை படித்தேன்.
ஆசிரமத்தில் பெற்றோரை இழந்த அல்லது ஆதரவற்ற குழந்தைகள் மறுவாழ்வு பெற்றனர். அங்கு பொதுநலத்தையும் அறிந்தேன். அதனுடன் பாடல், கலைப் பயிற்சி, விளையாட்டு ஆன்மிகம், தோட்டப் பணிகளில் என்னை இணைத்துகொண்டேன். வாழ்த்து அட்டைகள் தயாரிப்பது, தையல் வேலைகளையும் கற்றேன்.
பி.காம். முடித்ததும் மதுரையில் தனியார் நிறுவனப் பணியில் சேர்ந்தேன். 2000-இல் மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கணக்காளராகப் பணியைத் தொடர்ந்தேன். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் வங்கி மேலாண்மையில் முதுகலைப் பட்டமும், கணினியில் சான்றிதழ், 'டேலி' டிப்ளமோ படிப்பையும் முடித்தேன்.
என்னை வளர்த்த அவ்வை ஆசிரமத்திடமிருந்து கிடைத்த அனுபவங்களால் மதுரை மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க உறுப்பினராக இணைந்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள், சலுகைகள் குறித்த அனைத்து கூட்டங்கள், போராட்டங்கள், கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டேன். பணிபுரிந்துகொண்டிருக்கும்போதே என்னாலான உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்து வந்தேன்.
'அரசாலோ அல்லது பொதுநல அமைப்பாலோ மட்டும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்கையில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள மாற்றுத்திறனாளிகளும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்பதை உணர்ந்தேன். கசப்பான அனுபவங்கள் ஒரு தேடலை என்னுள் விதைத்தன. எனது தீவிரமான முயற்சியில் நல்ல உள்ளங்களின் ஆதரவு கிடைத்தன.
'தியாகம்' பெண்கள் அறக்கட்டளையை 2005-இல் தொடங்கினேன். சிறு உதவிகள்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்காலிகப் பாதுகாப்புதான். அவர்களின் வல்லமையைக் கூட்டுவதுதான் நிரந்தரத் தீர்வு. சுய தொழில் பயிற்சி, சுய வேலைவாய்ப்பு, ஆலோசனை வழங்குதல், அனுபவப் பகிர்வு, மாற்றுதிறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று உதவுதல் அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தங்கும் இல்லம், நட்பு வட்டம் என தன் பணிகளை 'தியாகம்' அறக்கட்டளை விரித்தது. இதுவரை சுமார் 5 ஆயிரம் மாற்றுத் திறனாளிப் பெண்களைச் சொந்தக்காலில் நிற்க வைத்திருக்கிறோம். அவர்கள் வீட்டில் இழந்த மதிப்பை மீட்டுத் தந்துள்ளோம். மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து கொள்ள விரும்புவர்களுக்கு அதற்கான மையத்துடன் தொடர்புபடுத்துகிறோம்.
'தியாகம்' அமைப்புக்கு மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பரிந்துரையில் இரண்டு தனியார் நிறுவனங்கள் நிதிஉதவி அளித்தன. நாங்களும் மதம், இனம், ஜாதி வேறுபாடு பார்ப்பதில்லை. எங்களை அணுகும் ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமான பயிற்சிகள் குறித்து வழிகாட்டுகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்ற சிலருக்கு தமிழ்நாட்டு அரசுப் பணிகள், வங்கி வேலைகள் கிடைத்துள்ளன. பல தொழில்நிறுவனங்கள் அவர்களது பணிக்கு தேவையானவர்களை எங்களிடமிருந்து மாற்றுத்திறனாளிகளைத் தேர்வு செய்துள்ளனர்.
ஊர்ந்து தவழ்ந்து சென்ற பெண்கள் மூன்று சக்கர சைக்கிளில், சிலர் பிரத்யேக ஸ்கூட்டரில் பயணிக்கின்றனர். குடும்பத்தாரின் அல்லது பிறரது கருணைக்காக அவர்கள் ஏங்கும் நிலை மாறி, நம்பிக்கையுடன் நம்மாலும் வாழ்ந்து காட்ட முடியும் என்று நிரூபித்துள்ளார்கள்' என்கிறார் அமுத சாந்தி.
-பிஸ்மி பரிணாமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.