1993-இல் 'கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்' என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய முனைவர் அச்யுதா சமந்தா, 45 ஆயிரம் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறார். 'வாழ்வதற்காக கொடு.., கொடுப்பதற்காக வாழ்' என்பதை லட்சியமாகக் கொண்டு ,'கொடுக்கும் கலை' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி, உலக அளவில் பரப்பி வருகிறார். திருமணம் செய்துகொள்ளாமல், கிடைப்பதை எல்லாம் சமூகத்துக்கே அளித்து வருகிறார்.
'எனது வாழ்க்கையின் முதல் 25 ஆண்டுகள் உணவில்லாமல் பட்டினியால் வாடினேன். ஆனால், அடுத்த 25 ஆண்டுகளில் பத்து லட்சம் பேருக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கையின் குறிக்கோள். அதனால் எல்லோருக்கும் உணவளிப்பதை கடமையாகச் செய்து வருகிறேன்'' என்கிறார் அச்யுதா சமந்தா.
ஒடிஸ்ஸாவில் கல்விப்புரட்சியை ஏற்படுத்தி வரும் அவரிடம் பேசியபோது:
'கற்பனையிலும் எட்டாத மிகவும் வறுமையான குடும்பத்தில் 1965-இல் பிறந்தேன். எனது தந்தை அனாதிசரண் சமந்தா, ஜார்கண்ட் மாநிலத்துக்கு உள்பட்ட ஜாம்ஷெத்பூரில் சிறு நிறுவனத்தில் சாதாரண வேலையில் இருந்தார். எனக்கு நான்கு வயதாக இருக்கும்போது, எனது தந்தை ரயில் விபத்தில் மரணம் அடைந்தார். கடனையும் அவர் விட்டுச் சென்றிருந்தார். எனது தந்தையின் நண்பர்கள் செய்த உதவியால், மூன்று மாதங்களைக் கழிக்க நேர்ந்தது. அதன்பிறகு வறுமையைத் தாங்க முடியவில்லை.
என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். எங்களைக் காப்பாற்ற முடியாமல் எனது தாய் நீலிமாராணி சமந்தா தடுமாறினார். தினமும் ஒருவேளை உணவை வழங்க முடியாமல் வறுமையில் வாடிவந்தார். இதனால் ஒடிஸ்ஸா மாநிலத்துக்கு உள்பட்ட, கட்டாக் நகருக்கு அருகேயிருந்த எங்கள் சொந்த ஊரான கலரபங்கா கிராமத்துக்கு வந்துசேர்ந்தோம். அங்கு, விறகுகளை வெட்டி, அதை விற்று குடும்பத்தை அம்மா காப்பாற்றி வந்தார். நான் உலர்ந்த இலைகளைச் சேகரித்து விற்றும், நெல் வேகவைத்து புழுங்கல் அரிசியாக்கி விற்றும் சிறிது பணம் சம்பாதிப்பேன்.
பணம் கிடைக்கும்போது மட்டும் கஞ்சியும், முருங்கைக் கீரை பொரியலும் கிடைக்கும். வறுமை வாட்டியதால் ஆரம்பக் கல்வியைப் பெறாமல் சிறுசிறு வேலைகளை செய்துவந்தேன். ஏழு குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் தவித்த எனது தாய், 5 சகோதர, சகோதரிகளையும் உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைத்திருந்தார். என்னையும், தங்கையை மட்டும் அவருடன் வைத்துகொண்டார்.
எனது தாயால் படிப்பையும் தர முடியவில்லை. ஒருநாள் நண்பர்களோடு ஒளிந்துவிளையாடும் விளையாட்டை ஆடியபோது, எதேச்சையாக அரசுப் பள்ளிக் கட்டடத்தில் ஒளிந்தேன். அங்கு வந்த ஆசிரியரைப் பார்த்து நண்பர்கள் ஓடிவிட்டனர். நான் மட்டும் சிக்கினேன். 'என்ன படிக்கிறாய்' என்று கேட்டார். காரணத்தைச் சொன்னேன்.
எனது நிலைமையைப் புரிந்துகொண்ட ஆசிரியர், இலவசக் கல்வியைக் கொடுக்க முற்பட்டு, பள்ளியில் சேர்த்துகொண்டார். அவரே கல்வி உபகரணங்களை வழங்கினார். சீருடைக்கு வழியில்லை. எனது தாய்க்கு மாற்றுச்சேலையும் கிடையாது. ஆசிரியர்களின் உதவி, ஊக்கத்தால் ஆரம்பக் கல்வியை முடித்தவுடன் எட்டு கி.மீ. தொலைவில் இருந்த ரகுநாத்பூரில் உயர்நிலைக் கல்வியை பெற்றேன். தினமும் பள்ளிக்குச் செல்ல 16 கி.மீ. நடப்பேன்.
கூரைவீட்டில் வசித்ததால், மழை பெய்தால் ஒழுகும் நிலை. மின்சார வசதியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இரவில் படிப்பதற்கு மண்ணெண்ணெய் விளக்கை பயன்படுத்துவேன். வறுமையின் பிடியில் இருந்து விடுபட கல்விதான் சிறந்த கருவி என்பதை உணர்ந்து படித்தேன். என்னைப் பார்த்து தங்கையும் படிக்க ஆரம்பித்தார். ஆசிரியர்கள் எனக்கு உதவி செய்து, வழிநடத்தினர்.
நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, வீட்டில் காலியாக இருந்த இடத்தில் காய்கறித் தோட்டம் அமைத்தேன். அங்கு கத்தரிக்காய் போன்ற காய்களைப் பயிரிட்டு, அதை சந்தைக்குச் சென்று விற்பேன். அங்கிருந்து வரும்போது அக்கம்பக்கத்துவீட்டாருக்குத் தேவைப்படும் மளிகைப் பொருள்களை வாங்கிவருவேன். இதுபோல நான் சம்பாதித்து தரும் பணத்தில் ஒருபகுதியை அம்மா எனக்கு தருவார். அந்தப் பணத்தில் ஒருபகுதியை என் தங்கை இதிராணி சமந்தாவுக்கு கொடுப்பேன்.
பின்னர், புரியில் உள்ள எஸ்.சி.எஸ். கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டமும், புவனேசுவரத்தில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி.(வேதியியலும் படித்தேன். பின்னர், தனியார் கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்து, ஓய்வு நேரத்தில் தனிப் பயிற்சி வகுப்புகளை நடத்திவந்தேன்.
மனிதனாக பிறந்தால் பத்து பேருக்கு உதவி செய்யாவிட்டால், இருந்தும் பயனில்லை என்று எனது அம்மா அடிக்கடி கூறிவார்.
இரு கல்வி நிறுவனங்கள் தொடக்கம்: புவனேசுவரத்தில் 1992-இல் ரூ.5 ஆயிரம் முதலீட்டில் 'கலிங்கா இன்ஸ்டிடியூட் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி' (கே.ஐ.ஐ.டி.) என்ற கல்வி நிறுவனத்தை தனியார் கட்டடத்தை வாடகை எடுத்துத் தொடங்கினேன். இங்கு தற்போது 40 ஆயிரம் மாணவர்கள் படித்துவருகிறார்கள்.
வறுமையில் வாடும் பழங்குடியினர் குழந்தைகளுக்கான கல்வி எட்டாக்கனியாக இருந்த நிலையில், அவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்க 1993-இல் 'கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்' (கே.ஐ.எஸ்.எஸ்.) என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினேன். மழலையர் வகுப்பில் இருந்து முதுநிலை வகுப்பு வரை 45 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசக் கல்வியை அளிக்கிறேன். 45 ஆயிரம் மாணவர்களுக்கு தினமும் 3 வேலை உணவு வழங்க வேண்டும் என்பதற்காக மிகப் பெரிய சமையலறையை உருவாக்கி இருக்கிறேன்.
இன்றைக்கு இவ்விரண்டு கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களாக உயர்ந்துள்ளன.
கே.ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், மேலாண்மை, கட்டடக்கலை, ஊரக மேலாண்மை போன்ற பல பாடங்களை வழங்கி வருகிறோம். இந்த கல்வி நிறுவனங்களில் கிடைக்கும் வருமானத்தை கே.ஐ.எஸ்.எஸ். கல்வி நிறுவனத்தில் ஏழை குழந்தைகளைப் படிக்க வைக்க பயன்படுத்துகிறேன்.
தற்போது 45 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசக் கல்வியைக் கொடுத்து வருகிறேன். என் வாழ்நாளில் குறைந்தது 20 லட்சம் பேருக்கு இலவசக் கல்வியை வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறேன். எனது கல்வி நிறுவனத்தில் 20 ஆயிரம் பேர் வேலைசெய்து வருகின்றனர். 2 லட்சம் பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பை அளித்து வருகிறேன்.
எனது வாழ்க்கையின் முதல் 25 ஆண்டுகள் உணவில்லாமல் பட்டினியால் வாடினேன். அடுத்த 25 ஆண்டுகளில் பத்து லட்சம் பேருக்கு உணவளிக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கையின் குறிக்கோளாக எடுத்துக்கொண்டேன்.
'கொடுக்கும் கலை': 2013- மே 17-இல் பெங்களூரில்'கொடுக்கும் கலை' (ஆர்ட் ஆஃப் கிவிங்) என்ற இயக்கத்தைத் தொடங்கினேன். பிறக்கும்போது எதையும் கொண்டுவரவில்லை. இறக்கும்போதும் எதையும் கொண்டு செல்லப்போவதில்லை. இங்கு பெறுவதை இங்கேயே கொடுத்துவிட வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி. பணம், பொருள் எதையும் நான் வைத்துகொள்வதில்லை.
கல்லூரியில் படிக்கும்போது சுற்றுலாவுக்குச் செல்ல எனது அண்ணன் எனக்கு முந்நூறு ரூபாய் கொடுத்தார். என் நண்பனுக்கு சுற்றுலா செல்ல பணம் இல்லை. எனவே, எனக்கு கொடுத்த பணத்தை நண்பனுக்கு கொடுத்துவிட்டு, அவரை சுற்றுலாவுக்கு அனுப்பிவிட்டு நான் வீட்டில் இருந்தேன். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி, பெறுவதில் கிடைப்பதில்லை.
'அமைதி, அன்பு நிலைத்திருக்க வேண்டும்' என்பதே 'கொடுக்கும் கலை' இயக்கத்தின் நோக்கமாகும். பல்வேறு நாடுகளிலும் ‘கொடுக்கும் கலை' இயக்கத்தை தொடங்கியிருக்கிறேன். பெங்களூரில் தொடங்கப்பட்ட 'கொடுக்கும் கலை' இயக்கத்தின் பொறுப்பாளரான ஆர்.குருபிரசாத், பிறருக்கு உதவும் நோக்கத்தோடு செயல்படுகிறார். அவருடன் மமதா என்.சுவாமி, ஜெயலட்சுமி, தொட்டேகெளடா, தீபா, பசவராஜூ, சூடாமணி, அமிதா, சிரி, பிரணவ், குருபிரசாத்தின் ஆசிரியர் மஞ்சுளா உள்ளிட்டோர் நற்பணிகளை செய்துவருகிறார்கள்.
எனது தாய் தான் எனது ஹீரோ. அவர் சொல்லித் தந்த மனிதநேயம்தான் 'கொடுக்கும் கலை' இயக்கமாக விரிவடைந்துள்ளது. இன்றைக்கும் 20 ஆயிரம் பேர் உலகின் பல பகுதிகளில் 'கொடுக்கும் கலை'யை ஊக்குவித்து வருகின்றனர்.
2014-இல் சமூக, ஆன்மிகம், மனிதநேயம் என்ற நோக்கத்தில் நலப் பணிகளை மேற்கொண்டோம். 2015-இல் 'ஆடை வடிவில் கருணை' (ஏழைகளுக்கு நல்ல உடைகளை அளிப்பது), 2016-இல் 'உன்னோடும் உலகோடும் உறவாடு' (எல்லோருடனும் உறவுபாராட்டுவது), 2017-இல் 'சைக்கிள் ஓட்டுதல்' (மன வளர்ச்சிக்கும் உடற்பயிற்சிக்கும்), 2018-இல் 'பட்டினி போக்கும் பை' (உணவுப் பைகளை ஏழைகளுக்கு கொடுப்பது), 2019-இல் 'அன்பின் பை' (ஏழைகளுக்குப் பொருள்களை பையில் போட்டு கொடுப்பது), 2020-இல் 'கரோனாவுடன் போராடுவோம்' (கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல்), 2021-இல் 'என் தாய் என் ஹிரோ' (தாய்மார்களை போற்றி, உதவி செய்வது), 2022-இல் 'நம்பிக்கை, மகிழ்ச்சி, நல்லிணக்கம்' (நம்பிக்கையின் சின்னமாக மரங்களை நடுவது, மகிழ்ச்சியின் அடையாளமாக உறவுகளோடு நேரத்தைச் செலவிடுவது, நல்லிணக்கத்தின் சின்னமாக ஏழை மாணவர்களுக்கு பேனாக்களை பரிசளிப்பது), 2023-இல் 'உதவிக்கு உதவி செய்வது' (நமக்கு உதவி செய்யும் துப்புரவாளர்கள், பால்காரர்கள், நாளிதழ் கொடுக்கும் சிறுவன்கள், அலுவலக உதவியாளர்கள், வீட்டுவேலையாள்கள் போன்ற தொழிலாளர்களைப் பாராட்டி முடிந்த உதவிகளை செய்வது), 2024-இல் 'கொடுத்துப் பழகுவோம்' (யாருக்காவது எதையாவது கொடுத்து உதவி செய்தல்) போன்ற நோக்கங்களின் அடிப்படையில் உதவிகளைச் செய்து வருகிறோம்.
இந்த ஆண்டில் (2025) 'அக்கம்பக்கத்து நல்லது' என்ற தலைப்பில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது என்ற பணியை மேற்கொண்டுள்ளோம்'' என்கிறார் அச்யுதா சமந்தா.
'கொடுக்கும் கலை'
'கொடுக்கும் கலை' உருவான விதம் குறித்து அந்த இயக்கத் தலைவரான ஆர்.குருபிரசாத் கூறியது:
'பெங்களூரில் மாகடி சாலையில் உள்ள அரசுப் பள்ளியில் 1985-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் 26 பேர் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் 2012 டிசம்பர் 12-இல் சந்தித்தோம். 'சந்திப்பது, உண்பது, கலைந்துசெல்வது..' என்றில்லாமல், பிறருக்கு குறிப்பாக ஏழைகளுக்கு பயன்படும் வாழ்க்கையை முன்னெடுக்க முடிவு செய்தோம். நண்பர்களும் வெவ்வேறு தொழில், வேலையில் இருந்தாலும், மக்கள் பணிக்கு சில மணி நேரத்தை ஒதுக்க முடிவுசெய்தோம். அந்த கருத்தை எனது நீண்டகால நண்பராஸ் அச்யுதா சமந்தாவிடம் கூறினேன்.
அதன் விளைவாக, 2013 மே 17-இல் பெங்களூரில் 'கொடுக்கும் கலை' அல்லது 'ஈகை கலை'
(ஆர்ட் ஆஃப் கிவிங்) என்ற இயக்கத்தை தொடங்கினார். நானும் இணைந்து பணியாற்ற தொடங்கினேன். கர்நாடகம் முழுவதும் கிளைகளைத் தொடங்கியிருக்கிறோம். முடிந்த அளவு ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை பரப்பி வருகிறோம். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.' என்கிறார் குருபிரசாத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.