
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் அல்ல; ஆனால் 'ஹோலி ஸீ' (புனிதக் கடல்) எனப்படும் போப்பாண்டவரின் வாடிகன் அரசு உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுடன் ராஜீய உறவு வைத்திருக்கிறது. 'இறைவனின் ராஜ்யம்' என்பது கத்தோலிக்க விசுவாசிகளைப் பொருத்தவரை போப்பாண்டவரின் மூலம்தான் சாத்தியம்.
'நாஜிக்களிடமிருந்து ஐரோப்பாவில் உள்ள கத்தோலிக்கர்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று பிரிட்டனின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னபோது, அவரிடம் சோவியத் அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலின் கோபமாகக் கேட்டாராம்- 'யார் இந்தப் போப்பாண்டவர்? அவருக்கு சேனை இருக்கிறதா? அவரிடம் எத்தனை படைப் பிரிவுகள் இருக்கின்றன? அவரையும் அவரது ஆதரவாளர்களையும் காப்பதில் நமக்கென்ன லாபம்?''
ஸ்டாலினும் மறைந்தார்; அவர் சர்வாதிகாரியாகத் தலைமை வகித்த சோவியத் யூனியனும் சரித்திரத்தில் கரைந்து விட்டது. ஆனால், எந்தவித சேனையும், படைப்பிரிவும் இல்லாத போப்பாண்டவரின் தலைமையும், அவர் தலைமை தாங்கும் 'ஹோலி ஸீ' ராஜ்யமும், அதன் விசுவாசிகளும் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல்...
போப் பிரான்சிஸ் மறைந்ததும் அவரைக் கேலி செய்யும் விதத்திலும், தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் நோக்கத்துடனும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'எக்ஸ்' வலைதளத்தில் தன்னை போப்பாண்டவர் வேடத்தில் வெளியிட்டு, தான் போப்பாண்டவராக ஆசைப்படுவதைப் பதிவு செய்தார். கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் அவரது பைத்தியக்காரத்தனத்தைக் கேலி செய்தது. நான்காண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்படவேண்டிய அவசியம் போப்பாண்டவருக்கு கிடையாது!
ஹிந்து மதம் என்று பரவலாக அறியப்படும் சநாதன தர்மத்தைத் தவிர, உலகில் உள்ள ஏனைய எல்லா மதங்களும் தேவதூதராக வரும் ஒரு தலைவரால் உருவானவை- மோசஸில் இருந்து யூத மதம்; கெளதம புத்தரில் இருந்து பெளத்தம்; மகாவீரரில் இருந்து ஜைனம்; இயேசு கிறிஸ்துவில் இருந்து கிறிஸ்துவம்; 'நபிகள் நாயகம்' மொஹமதில் இருந்து இஸ்லாம்.
தேவ தூதரான தலைவரின் மறைவுக்குப் பிறகு ஆதரவாளர்களும், விசுவாசிகளும் அவரது உபதேசங்களைப் பரப்ப நிறுவனங்களை உருவாக்கினார்கள். அந்தந்த நிறுவனங்கள் மதங்களாக மாறின. நிறுவனர்களின் அடியொற்றி வந்த சீடர்கள் அதை வழிநடத்துகிறார்கள்.
கிறிஸ்துவத்தைப் பொருத்தவரை, மற்றவற்றில் இருந்து அது சற்று வித்தியாசப்படுகிறது. தேவபுத்திரனான இயேசுபிரானால் அடையாளம் காணப்பட்ட புனித பீட்டரால், அவரது உத்தரவுப்படி உருவாக்கப்பட்ட பலமான அஸ்திவாரத்தில் திருச்சபை எழுப்பப்பட்டிருக்கிறது.
இயேசுநாதரின் மூலம் பரமபிதாவாகிய தேவனைக் காண்பதுபோல, போப்பாண்டவரில் அவர்கள் தேவமைந்தனின் தூதுவரைப் பார்க்கிறார்கள். போப்பாண்டவரும் திருச்சபையும், தேவமைந்தனையும் பரமபிதாவையும் எப்படி பிரிக்கமுடியாதோ, அதுபோல ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாது.
இந்த அடிப்படையான புரிதலுடன்தான் கத்தோலிக்கத் திருச்சபையில் போப்பாண்டவர்களின் முக்கியத்துவத்தை நாம் பார்க்க வேண்டும். இதற்குப் பின்னால் சில அரசியல் நிகழ்வுகள் இல்லாமல் இல்லை.
கிமு. 44-இல் ரோமாபுரியில் ஜூலியஸ் சீஸர் படுகொலை செய்யப்படுகிறார். ரோமாபுரி சாம்ராஜ்யதுக்கு உள்பட்ட பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலத்தில் கிபி 33-இல் இயேசுநாதர் சிலுவையில் ஏற்றப்படுகிறார். கிபி 70-இல் யூதர்களின் எழுச்சியை அடக்குவதற்காக ரோமாபுரி அரசு சாலமனின் இரண்டாவது தேவாலயத்தை இடித்து அழிக்கிறது. இந்தப் பின்னணியில்தான் கிறிஸ்தவ பைபிள் எனப்படும் 'புதிய ஏற்பாடு' தொகுக்கப்படுகிறது.
சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாள் இயேசுபிரான் எப்படி உயிர்த்தெழுந்தார் என்பதும், அழிக்கப்பட்ட தேவாலயத்தை அவர் மீண்டும் நிறுவுவார் என்பதும் புதிய ஏற்பாடு தெரிவிக்கும் செய்திகள். இயேசுநாதரின் உடலும் திருச்சபையும் அதை நிறைவேற்றும் என்கிற நம்பிக்கை விதைக்கப்பட்டது. அதை நிறைவேற்ற இயேசுநாதரால் பணிக்கப்பட்டவர்தான் புனித பீட்டர்.
மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த புனித பீட்டர், எந்த ரோமாபுரி சாம்ராஜ்யத்தால் 'இறைவனின் தேவாலயம்' தகர்க்கப்பட்டதோ அதே ரோமாபுரியில் திருச்சபையை நிறுவினார். உயிர்த்தெழுந்த இயேசுநாதரின் கட்டளைப்படி புனித பீட்டர் ரோமாபுரி சென்றார் என்றும், இயேசுநாதர் உயிர்த்தெழுந்த செய்தியையும், இறைவனின் கட்டளையை மீறிய பாவத்தில் இருந்து மனித இனத்தை மீட்க தேவபுத்திரன் அவதரித்தார் என்பதையும் உலகுக்கு தெரிவிப்பதுதான் புனித பீட்டரின் நோக்கமாக இருந்தது.
அதனால், இயேசுநாதரைப் போலவே புனித பீட்டரும் சிலுவையில் அறையப்பட்டார். நீரோ என்கிற மன்னனால் சிலுவையில் அறையப்பட்டாலும் எல்லா ஓவியங்களிலும் புனித பீட்டர் அறையப்பட்ட அந்தச் சிலுவை தலைகீழாகத்தான் வரையப்படுகிறது; இயேசுநாதரின் சிலுவையில் இருந்து வேறுபட்டதாகக் காட்டப்படுகிறது.
புனித பீட்டரில்தான் தொடங்குகிறது போப்பாண்டவர்களின் வம்சாவளி. அவர்தான் திருச்சபையை நிறுவியதாக விசுவாசிகள் நம்புகிறார்கள்.
கிபி 300-இல் ரோமாபுரி சக்கரவர்த்தியாக இருந்த இருந்த கான்ஸ்டன்டைன் கிறிஸ்துவராக மதம் மாறுகிறார். அதுமுதல் கிறிஸ்துவத் திருச்சபை ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் ஆன்மிக மையமாக மாறுகிறது. கிபி 500-இல் ரோமாபுரியின் அதிகாரபூர்வ மதமாக கிறிஸ்துவம் அறிவிக்கப்பட்டு, ஏனைய மார்க்கங்களும் நம்பிக்கையாளர்களும் அழிக்கப்படுகிறார்கள்.
மாற்று மத சகிப்புத்தன்மை இல்லாமையின் தொடக்கம் மட்டுமல்ல, அப்போது முதல்தான் மேலைநாடுகளில் மதமும் அரசியலும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவாறு மாறுகின்றன.
கிபி 700-இல் இஸ்லாம் பரவத் தொடங்கி, அரேபியர்களும் பாரசீகர்களும் அதைப் பின்பற்றுகிறார்கள். மதீனா, டமாஸ்கஸ், பாக்தாத் என்று இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரியத் தொடங்குகிறது. ஆனால் போப்பாண்டவர் தலைமையிலான திருச்சபையின் ஆதிக்கத்தை அதனால் தடுக்கவோ, ஒடுக்கவோ முடியவில்லை.
போப்பாண்டவரிடம் என்ன சேனையா இருக்கிறது?- என்று ஜோசப் ஸ்டாலின் கேட்டாரே, அவருக்குத் தெரியாது போப்பாண்டவர்கள் சேனைகளை மட்டுமல்ல, பல சாம்ராஜ்யங்களையும், சக்கரவர்த்திகளையும்கூடத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்பது. போப்பாண்டவர்கள் இரண்டாம் ஆக்னஸ், இரண்டாம் யுஜின், மூன்றாம் இன்னசென்ட் ஆகியோரின் கட்டளைப்படி நடந்த சிலுவைப் போர்கள் சரித்திரத்தின் பக்கங்களின் முக்கிய இடம் பெறுகின்றன.
ரோமாபுரிச் சக்கரவர்த்தி நான்காம் ஹென்றியை கிரீடம் இல்லாமல் பனிப்புயலுக்கு இடையில் தனது கன்னோசா மடாலயத்தின் வாசலில் 1077-இல் குளிரில் நடுங்கியபடி நிற்க வைத்தார் போப்பாண்டவர் மூன்றாம் கிரகெரி என்பது ஜோசப் ஸ்டாலினுக்குத் தெரிந்திருக்க வழியில்லை. அவர் இறைநம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் ஆயிற்றே...
காலனிய ஆதிக்கத்தின் மூலம் கிறிஸ்துவத்தைப் பரப்புவது என்பது வாடிகனில் உள்ள போப்பாண்டவரின் உத்தரவு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 1493-இல் போப்பாண்டவராக இருந்த நான்காம் அலெக்சாண்டர் மேலை நாடுகளுக்கு ஸ்பெயின் நாட்டவரையும், கீழை நாடுகளுக்கு போர்ச்சுகீசியரையும் மதத்தைப் பரப்புவதற்காக அனுப்பினார் என்பது வெளியில் தெரியாத வரலாறு.
அதெல்லாம் ஏன், இப்போது உலகம் பின்பற்றுகிறதே 'காலண்டர்' என்கிற நாள்காட்டி, அதை முறைப்படுத்தித் தந்ததே போப்பாண்டவரின் தலைமையிலான ஹோலி ஸீ தான். 1583-இல் போப்பாண்டவர் எட்டாம் கிரகெரிதான் மாதங்களுக்கான பெயர்களை உறுதிப்படுத்தி, நாள்களை நிர்ணயித்து, இப்போது நாம் பின்பற்றும் காலண்டரை உலகுக்கு ஏற்படுத்தித் தந்தவர்.
இடைக்காலத்தில், போப்பாண்டவர்கள் படாடோப வாழ்க்கையுடன், உல்லாச விரும்பிகளாக மாறியபோது கத்தோலிக்கத் திருச்சபையின் மரியாதையும் கௌரவமும் மங்கத் தொடங்கியது. அரசர்கள் தங்கள் முன்னால் மண்டியிடுகிறார்கள் என்பதாலேயே, தங்களை அரசர்களின் அரசர்களாகப் போப்பாண்டவர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
துறவறம் மேற்கொண்டவுடன் குடும்பத்துடனான உறவைப் பாதிரியார்கள் துண்டித்துக் கொள்வதுதான் வழக்கம். திருமணம் ஆகாதவர்கள் என்பதால், கிபி 1500-க்குப் பிறகு போப்பாண்டவர்கள் தங்களது சகோதர, சகோதரிகளின் குழந்தைகளை வாடிகனில் செல்வாக்கோடு வளையவர அனுமதித்தனர். அவர்கள் உதவிகள் பெற்றதுடன், போப்பாண்டவரின் பெயரைப் பயன்படுத்திப் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள்.
'நெப்பாப்டிசம்' (உறவினர்களுக்கு சலுகை) என்கிற வார்த்தையே வாடிகனில் இருந்துதான் உருவானது. நெஃப்யூ (மருமகன்) 'ஆப்பர்சூனிசம்' (வாய்ப்புகள்) என்கிற இரண்டு ஆங்கில வார்த்தைகளையும் இணைத்து உருவானதுதான் 'நெப்பாப்டிசம்' என்கிற வார்த்தை. போப்பாண்டவர்கள் மட்டுமல்ல, கார்டினல்களும் தங்களது உறவினர்களை முக்கியமான அரசுப் பதவிகளில் நியமிக்க அரசர்களுக்கு உத்தரவிட்டனர்.
போப்பாண்டவர் அரண்மனை, பேராயர்கள் மாளிகை என்று அவர்கள் ராஜ குருக்களாக மாறியபோது எழுந்த விமர்சனங்களின் விளைவுதான் மார்ட்டின் லூதரின் மறுமலர்ச்சிக்கான குரலும், பகுத்தறிவுவாதமும். அதையும் எதிர்கொண்டு, தன்னைத்தானே மாற்றிக்கொண்டு வாடிகன் கத்தோலிக்கத் திருச்சபையும், போப்பாண்டவர்களும் தொடர முடிந்ததற்கு, அதற்குப் பின்னால் இருந்த புனிதத்தன்மைதான் காரணம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாறு கத்தோலிக்கத் திருச்சபைக்கு இருந்தாலும், 1870 முதல் 1929 வரையில் அதற்கென்று ஒரு நிலையான இடமோ, அமைப்போ இருக்கவில்லை. ரோமாபுரியைத் தலைமையிடமாகக் கொண்டு திருச்சபை தொடர்ந்து இயங்கவில்லை என்பது பலருக்கும் தெரியாது. அவிக்நான், பிசா என்று தலைமையிடம் மாறிக்கொண்டிருந்தது.
180-க்கும் அதிகமான நாடுகளுடன் ராஜாங்க உறவு வைத்திருக்கும் உலகிலேயே சிறிய நாடான வாடிகன் எப்போது, எப்படி உருவானது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இந்த நூற்றாண்டில், அதுவும் 'ஃபாசிசம்' என்கிற வார்த்தைக்குக் காரணமான பெனிட்டோ முúஸாலினிதான் வாடிகன் உருவாகக் காரணம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
1928-இல் இத்தாலி அரசராக இருந்த மூன்றாம் விக்டர் இமானுவலிடம் பிரதமராக இருந்த பெனிட்டோ முúஸாலினியிடம்தான் அனைத்து அதிகாரங்களும் இருந்தன. அரசரைத் தனது கைப்பாவையாக வைத்து ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார் முúஸாலினி.
அப்போது போப்பாண்டவர் பதினோறாவது பயஸ் என்பவரின் கார்டினல் செயலராக இருந்த பியத்ரோ கஸ்பாரியுடன் முúஸாலினி ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் வாடிகன் என்கிற கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகமான தனி நாடு உருவானது. அந்த ஒப்பந்தத்துக்கு 'லேட்டரல்' ஒப்பந்தம் என்று பெயர்.
வாடிகனின் நிர்வாகத்தை 'பொன்டிஃபிகல் கமிஷன்' என்கிற ஏழு கார்டினல்கள் அடங்கிய குழுதான் நடத்துகிறது. அந்த ஏழு கார்டினல்களும் போப்பாண்டவரால் ஐந்தாண்டுகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.
போப்பாண்டவரின் அதிகாரத்துக்கு உள்பட்ட இடங்களையும், சொத்துக்களையும், மத ரீதியிலான திருச்சபையின் அமைப்புகளையும் 'ஹோலி ஸீ' என்று அழைக்கிறார்கள். ரோமாபுரியின் பங்குத் தந்தை (பிஷப்) என்கிற நிலையில் போப்பாண்டவர் தலைமையில் இயங்கும் கத்தோலிக்கத் திருச்சபையின் அரசுதான் 'ஹோலி ஸீ'. 'பொன்டிஃபிகல் கமிஷன்' எடுக்கும் தீர்மானங்கள் 'ஹோலி ஸீ' செயலகம் வழியாகப் போப்பாண்டவருக்கு அனுப்பப்படுகிறது. அவர் அதைப் பரிசோதித்து அங்கீகாரம் வழங்குவார்.
வாடிகனின் மையப் பகுதியில் அமைந்த 'பாலúஸா தெல் கவர்னராதோ' என்கிற அரண்மனையில்தான் பொன்டிஃபிகல் கமிஷனும், வாடிகன் நகர அரசும் செயல்படுகின்றன. வாடிகனில் ட்ரிப்யூனல், மேல்முறையீடு, உச்சநீதிமன்றங்கள் உண்டு. கார்டினல் ஒருவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக போப்பாண்டவர் நியமிப்பார். கிரிமினல் குற்றங்கள் நடந்தால் அது இத்தாலிய அரசுச் சட்டப்படி நடவடிக்கைக்கு உள்படுத்தப்படும்.
கத்தோலிக்கத் திருச்சபைகளின் தலைவர்; ரோம் நகரத்தின் பங்குத் தந்தை; இயேசுநாதரின் பிரதிநிதி (விக்கார்); புனித பீட்டரின் வாரிசு; இத்தாலிய தலைமை மத குரு; ரோம் பிரதேசத்தின் மெட்ரோபாலிடன் ஆர்ச்பிஷப்; வாடிகன் நாட்டுத் தலைவர் - இப்படி போப்பாண்டவருக்குப் பல பதவிகளும், அதிகாரங்களும் உண்டு.
புனித பீட்டரில் தொடங்கி, இப்போது போப்பாண்டவராகப் பொறுப்பேற்றிருக்கும் பதினான்காம் லியோ வரையில் 267 போப்பாண்டவர்களாக அந்த வம்சாவளி தொடர்கிறது. போப்பாண்டவர்களில் 83 பேர் புனிதர்களாகி இருக்கிறார்கள்.
பெண்கள் (கன்னியாஸ்திரிகள்) ஏன் போப்பாண்டவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. திருச்சபையின் தொடக்கத்தில் இருந்து பெண்கள் யாரும் பாதிரிமாராக நியமிக்கப்படவில்லை. இயேசுநாதர் தனது சீடர்களாக ஆண்களை மட்டுமே தேர்வு செய்தார் என்று அதற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
கிபி 1024 கேனன் சட்டப்படி, ஞானஸ்நானம் பெற்ற ஆண்கள் மட்டுமே பாதிரியாராக முடியும். பாதிரியாராக, கார்டினலாக, நிறைவாக போப்பாண்டவராக அவர்கள் உயர முடியும். பெண்களுக்கு இந்த வாய்ப்பு கிடையாது. 1994-இல் போப்பாண்டவராக இருந்த இரண்டாம் ஜான் பால் அதை உறுதிசெய்து விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
போப்பாண்டவர்களைத் தேர்ந்தெடுப்பது என்கிற முறையின் அடிப்படையில்தான் ஜனநாயக ஆட்சிமுறையே நிறுவப்பட்டிருக்கிறது. கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாக அமைப்பைப் பின்பற்றித்தான் உலகில் அரசு நிர்வாகங்கள் நடைபெறுகின்றன என்பதைப் பலரும் உணர்வதில்லை.
போப்பாண்டவரின் தேர்வு என்பது 'பாப்பல் கான்க்ளேவ்' என்கிற ரகசிய முறையில் அமைந்தாலும், அதற்கென்று சில விதிமுறைகளும், வழிமுறைகளும் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக இந்தமுறை பின்பற்றப்படுகிறது.
போப்பாண்டவராக இருப்பவர் மறைந்தாலோ அல்லது போப் பதினாறாம் பெனடிக்ட்போலப் பதவி விலகினாலோ அடுத்த போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கப்படும்.
உடனடியாக 'கேமர்லெங்கோ' எனப்படும் சேம்பர்லின் கார்டினல், புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் வாடிகனின் நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார். 80-வயதுக்கு உள்பட்ட கார்டினல்கள் வாடிகனில் கூடி ரகசியமாக விவாதித்துப் புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
வாடிகனில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கக் கூடும் கார்டினல்கள், உள்ளே நடப்பது எதையும் வெளியில் தெரிவிக்க மாட்டோம் என்கிற ரகசியப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உள்ளே நுழைந்ததும் தேவாலயத்தின் கதவுகள் மூடப்படும். அதற்குப் பிறகு, புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர்களுக்கு வெளியுலகத்துடன் எந்தவிதத் தொடர்பும் இருக்காது.
மூன்றில் இரண்டு பங்கு கார்டினல்கள் ஆதரவு பெற்றால்தான் போப்பாண்டவராகத் தேர்வாக முடியும். ஒவ்வொரு கார்டினலும் தங்களது தேர்வை அதற்காக வழங்கப்படும் சீட்டில் எழுத வேண்டும். எந்த ஒருவருக்கும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காவிட்டால், அந்தச் சீட்டுகள் ஒரு பிரத்யேக இரசாயனத்தில் தோய்த்து எரிக்கப்படும். அதில் இருந்து வெளிவரும் கரும்புகை, வாக்கெடுப்பில் யாரும் தேர்வாகவில்லை என்பதை வெளியில் ஆவலுடன் கூடியிருக்கும் பாதிரிமார்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும்.
முதல் சுற்றிலேயே ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம்; பல நாள்கள்; வாரங்கள்; மாதங்களும்கூட முடிவு எட்டப்படாமல் தொடரலாம். சில போப்பாண்டவர்கள் மாதங்களுக்கு, ஏன் வருடங்களுக்குப் பிறகுதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, போப் பத்தாம் கிரகெரியைத் தேர்ந்தெடுக்க கிபி 1268 முதல் 1271 வரையில் மூன்று ஆண்டுகள் சிஸ்டைன் தேவாலயத்தில் கார்டினல்கள் இருந்ததாகப் பதிவு இருக்கிறது.
போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வெள்ளை நிறப் புகை வெளிப்படும்விதத்தில் பதிவு செய்த சீட்டுகள் எரிக்கப்படும். தேர்வுக்குப் பிறகு தனது தேர்வை அந்தக் கார்டினல் ஏற்றுக்கொள்ள வேண்டும். தனக்கென்று புதிய பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்டதும், கார்டினல்களில் மூத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டவரிடம், 'உங்களுக்குப் போப்பாண்டவராக செயல்பட சம்மதமா?' என்று கேட்பார். 'சம்மதம்' என்று தெரிவித்த நொடியில் அவர் போப்பாண்டவராகி விடுகிறார்.
அடுத்தாற்போல, சிஸ்டைன் தேவாலயத்தில் உள்ள பிரார்த்தனை அறைக்குள் அவர் தனியாக அனுமதிக்கப்படுவார். மிகப்பெரிய பதவிச் சுமையை ஏற்பதற்கு முன்னர், மண்டியிட்டுக் கண்ணீர் விட்டு சிலர் அழுவதுண்டு என்று சொல்கிறார்கள். பிரார்த்தனை முடிந்து வெளியில் வந்ததும், அவர்கள் போப்பாண்டவருக்கான உடை, அங்கியை அணிவார்கள்.
'நமக்குப் புதிய போப்பாண்டவர் கிடைத்து விட்டார்' என்று புனித பீட்டர் தேவாலயத்தின் மாடத்தில் இருந்து தேர்தலை நடத்திய கார்டினல் அறிவிப்பார். அதைத் தொடர்ந்து, 'பாலியம்' எனப்படும் பாரம்பரிய உடையுடன் அந்த மாடத்துக்கு வந்து புதிய போப்பாண்டவர் தரிசனம் கொடுப்பார். கூடியிருக்கும் விசுவாசிகளுக்கு ஆசியுரை வழங்குவார்.
'விவா இல் பப்பா' (போப்பாண்டவர் நீடு வாழ்க!) என்கிற கோஷம் விண்ணைப் பிளக்கும்!
வடிவமைப்பு: வி. ஜெயப்பிரகாஷ், இரா. சுந்தரபாண்டியன், இ. காசிவிஸ்வநாதன்.
போப்பாண்டவர் தேர்வு
ஆரம்ப காலங்களில், அதாவது நான்காம் நூற்றாண்டு வரையில், ரோமாபுரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே பரவி இருந்த ரோமன் கத்தோலிக்கர்களும், பாதிரியார்களும்தான் போப்பாண்டவரைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பு காணப்படுகிறது.
11-ஆம் நூற்றாண்டில் இருந்துதான் ஆட்சிமன்றக் குழுவால் போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை நடைமுறைக்கு வந்தது. கிபி 1274-இல் போப்பாண்டவராக இருந்த பத்தாம் கிரகெரிதான் இந்த 'கான்க்ளேவ்' என்கிற குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் முறையை ஏற்படுத்தினார்.
1996-இல் போப் இரண்டாம் ஜான் பால், 2007-இல் பதினாறாம் பெனடிக்ட் இருவரும் புதிய சில மாற்றங்களைத் தேர்ந்தெடுப்பில் ஏற்படுத்தினார்கள்.
கான்க்ளேவில் யாருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பது குறித்த விவரங்களை வெளியிடப்படுவதில்லை.
கி.பி.1274-க்கு முன்பு, ஒருவர் மறைந்த உடனேயே அடுத்த போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு உலகளாவிய அளவில் கத்தோலிக்கத் திருச்சபை விரிவடைய அடைய, எல்லா கார்டினல்களும் வந்து சேர வேண்டும் என்பதற்காக 10 நாள்கள், 15 நாள்கள் அவகாசம் வழங்கும் முறை ஏற்பட்டது.
20-ஆம் நூற்றாண்டில் ஐந்து நாள்கள் தொடர்ந்த 'கான்க்ளேவ்', 14 சுற்று வாக்கெடுப்புக்கும், ஐந்து நாள்களுக்கும் பிறகு கிபி 1922-இல் பதினோறாம் பயஸைப் போப்பாகத் தேர்ந்தெடுத்தது. 1939-இல் பனிரெண்டாம் பயஸ் மூன்றாவது சுற்றிலும், 2005-இல் பதினாறாம் பெனடிக்ட் நான்காவது சுற்றிலும், 2013-இல் பிரான்சிஸ் ஐந்தாவது சுற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கிபி 1939-இல் பன்னிரண்டாம் பயஸ் இரண்டே நாள்களில் மூன்றாவது சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் சமீப காலத்தில் மிகக் குறுகிய நாளில் நடைபெற்ற போப்பாண்டவர் தேர்வு. அதற்கு நிகராக இப்போதைய போப் பதினான்காம் லியோவின் தேர்வைக் குறிப்பிடலாம்.
1503-இல் போப் இரண்டாம் ஜூலியஸ் சில மணி நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெயர் மாற்றம்...
போப்பாண்டவராகத் தேர்வானால் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அது வெறும் அடையாள வழிமுறை, அவ்வளவே...
தனது திருச்சபைச் சேவையின் புதிய தொடக்கம் என்பதால், தனது பார்வையை வெளிப்படுத்தும் விதத்தில் பெயரை மாற்றிக்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
தாங்கள் வியந்து பார்த்த அல்லது வழியொற்றி நடக்க நினைக்கும் முந்தைய போப்பாண்டவர்களை முன்னோடியாகக் கொண்டு செயல்பட இருப்பதை வெளிக்காட்ட, அவர்களது பெயர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். போப்பாண்டவர் என்பவர் தனி மனிதரல்ல, உலகக் கத்தோலிக்க திருச்சபையை வழி நடத்த இருப்பவர் என்பதால், தன்னுடைய தனித்தன்மை, தேசிய அடையாளம் உள்ளிட்டவற்றை உதறுவதும்கூடப் பெயர் மாற்றத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும்.
திருச்சபை வரலாற்றில் தனது பெயரை மாற்றிக்கொண்ட முதலாவது போப்பாண்டவர் கிபி 533-535 இல் இருந்த போப் இரண்டாம் ஜான். மெர்கூரியஸ் என்கிற தனது இயற்பெயரைத் துறந்து புனித ஜானின் பெயரை ஏற்றுக் கொண்டார். அதிலிருந்துதான் இந்த வழக்கம் தொடங்கியது.
16-ஆம் நூற்றாண்டில் இருந்து எல்லா போப்பாண்டவர்களும் புதிய பெயருக்கு மாறி இருக்கிறார்கள்.
914-இல் போப் லாண்டோவும், 2013-இல் போப் பிரான்சிஸூம் அதுவரையில் யாரும் வைத்துக்கொள்ளாத பெயர்களை ஏற்றனர். ஆனால் ஆறாம் நூற்றாண்டு முன்பு வரை தங்களது பெயர்களை யாரும் மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. புனித பீட்டரை நியமித்தவர் இயேசுநாதர் என்பதால் யாரும் அந்தப் பெயரைத் தங்களுக்கு வைத்துக் கொள்வதில்லை.
புனித பீட்டரின் பெயர் மட்டுமல்ல, ஆண்ட்ரூஸ், ஜேம்ஸ், ஜோசப், லூக், தாமஸ் உள்ளிட்ட பெயர்களை ஏன் எந்தப் போப்பாண்டவரும் தேர்ந்தெடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஜான், கிரகெரி, பயஸ், இன்னசென்ட், லியோ, கிளெமெண்ட், பெனடிக்ட் உள்ளிட்டவை மிக அதிகமாகப் போப்பாண்டவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர்கள்.
ஜான் என்கிற பெயர்தான் மிக அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர். இருபத்தி மூன்றாம் ஜான் என்பதுவரை அந்தப் பெயரில் போப்பாண்டவர் இருந்திருக்கிறார். அதில் ஒரு ஆச்சரியம் பாருங்கள், இருபதாம் ஜான் என்று போப்பாண்டவர் இடம் பெறவில்லை. ஏதோ காரணத்துக்காக வைத்துக் கொள்ளவில்லையா அல்லது கணக்கில் தவறு ஏற்பட்டதா தெரியவில்லை.
போப்பாண்டவர்களில் 16 பேர் கிரகெரி, 16 பேர் பெனடிக்ட், 14 பேர் கிளெமெண்ட், 14 பேர் லியோ, 13 பேர் இன்னசண்ட், 12 பேர் பயஸ் என்கிற பெயரில் இருந்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட பெயர்களைத்தான் போப்பாண்டவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று திருச்சபையில் சட்டமோ, விதியோ கிடையாது. அதேநேரத்தில், தேர்ந்தெடுத்த பெயரை மாற்றிக்கொள்ளும்படி கார்டினல்கள் வற்புறுத்தி இருக்கிறார்கள். ஒருசில போப்பாண்டவர்கள் அதற்கு சம்மதித்து இருக்கிறார்கள்.
ஜான் என்கிற பெயர்தான் மிக அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர். இருபத்தி மூன்றாம் ஜான் என்பதுவரை அந்தப் பெயரில் போப்பாண்டவர் இருந்திருக்கிறார். அதில் ஒரு ஆச்சரியம் பாருங்கள், இருபதாம் ஜான் என்று போப்பாண்டவர் இடம் பெறவில்லை. ஏதோ காரணத்துக்காக வைத்துக் கொள்ளவில்லையா அல்லது கணக்கில் தவறு ஏற்பட்டதா தெரியவில்லை.
போப்பாண்டவர்களில் 16 பேர் கிரகெரி, 16 பேர் பெனடிக்ட், 14 பேர் கிளெமெண்ட், 14 பேர் லியோ, 13 பேர் இன்னசண்ட், 12 பேர் பயஸ் என்கிற பெயரில் இருந்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட பெயர்களைத்தான் போப்பாண்டவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று திருச்சபையில் சட்டமோ, விதியோ கிடையாது. அதேநேரத்தில், தேர்ந்தெடுத்த பெயரை மாற்றிக்கொள்ளும்படி கார்டினல்கள் வற்புறுத்தி இருக்கிறார்கள். ஒருசில போப்பாண்டவர்கள் அதற்கு சம்மதித்து இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.