கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான்.
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
Published on
Updated on
2 min read

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது, சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

ஒவ்வொரு திரைப்பட ஜானர்களுக்கும் ஒரு சீசன் அமையும். ஒரு பேய்ப்படம் ஹிட் அடித்தால், அதைத் தொடர்ந்து பேய்ப் படங்களாக வரும். அதுபோலவே காதல் படங்கள் வெற்றி பெற்றால், காதல் பற்றிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.

ஆனால், பயோபிக் திரைப்படங்களைப் பொருத்தமட்டில் அதற்கென தனி சீசன் எதுவும் கிடையாது. எவர்க்ரீனாகத் தொடர்ந்து எப்போதும் பயோபிக் திரைப்படங்கள் வந்துகொண்டே இருக்கும். ஹாலிவுட்டில்தான் முதன்முதலாக பயோபிக் திரைப்படங்கள் வெளியாயின. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பயோபிக் என்ற வகையிலான சினிமாவை எடுக்கத் தொடங்கியது ஹாலிவுட்.

அப்படி ஆப்ரகாம் லிங்கனுடைய பயோபிக் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டது ஹாலிவுட். நாளடைவில் பயோபிக் திரைப்படங்களின் வடிவங்களும் மாற்றத்தை எட்டியது.

இந்தியாவில் 1950-களில் புராணக் கதைகளைத் தான் முதன்முதலில் எடுத்து வெளியிட்டார்கள். அதன் பிறகுதான் உண்மையான பயோபிக் திரைப்படங்கள் இந்திய சினிமாவில் வெளியாகத் தொடங்கின. இப்படித்தான் 1965-ஆம் ஆண்டு பகத் சிங்கின் பயோபிக் திரைப்படமாக 'ஷாகீத்' திரைப்படம் வெளியானது. இதன் பிறகு பயோபிக்கின் வடிவம் சற்றே மாற்றத்தை எட்டியது.

பெரும்பாலும் இந்தியாவின் முக்கிய தலைவர்களின் கதைகளும், முக்கிய விளையாட்டு வீரர்களின் கதைகளும் படமாக எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த இந்தியாவின் முகமாக இருக்கும் பலரின் கதைகளை பாலிவுட் எடுக்கும்போது அது இந்தியா முழுவதும் கவனம் பெற்றது.

இப்படி பயோபிக் திரைப்படங்களில் அதனுடைய பட்ஜெட்டும், அதனுடைய மார்க்கெட்டும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய சினிமாவில் இதுவரை வெளியாகி தாக்கத்தை ஏற்படுத்திய, பெரிதளவில் வரவேற்பைப் பெற்ற முக்கியமான பயோபிக் திரைப்படங்களை இங்கு பார்க்கலாம்...

ஷாகீத்

இந்திய சினிமாவில் பயோபிக்குகள் எடுக்கத் தொடங்கிய தொடக்கக் காலகட்டத்தில் வெளியான திரைப்படம்தான் 'ஷாகீத்'. பகத் சிங்கின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியதுதான் இந்தப்படம். நடிகர் மனோஜ் குமார் பகத் சிங்காக இப்படத்தில் நடித்திருப்பார்.

இந்தப் படம் இன்றும் முக்கியமான பயோபிக் திரைப்படங்களில் சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பதற்கு சில காரணங்களும் இருக்கின்றன. அதில் ஒன்று, புரட்சியாளரின் கதையை முதன்முதலாக சினிமாவில் காட்சிப்படுத்தியது இத்திரைப்படம்.

காந்தி

பயோபிக் திரைப்படங்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால், அதில் இந்த 'காந்தி' படத்தைத் தவிர்க்கவே முடியாது. இத்திரைப்படத்தை எடுத்தவர் இந்திய இயக்குநர் கிடையாது. ஆங்கில இயக்குநர் ஒருவர்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு இங்கிலாந்தில் வசிக்கும் நடிகர் பென் கிங்ஸ்லிதான் இப்படத்தில் காந்தியாக நடித்திருப்பார்.

இந்திய நிறுவனமும், பிரிட்டனின் ஒரு தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருந்தன. இப்படம் வெளியாகி அப்போதே சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றது. காந்திஜி வாழ்க்கையின் பல பக்கங்களையும் இந்த பயோபிக் பேசியது. இத்திரைப்படம் அப்போது 8 ஆஸ்கர் விருதுகளையும் வென்று சாதனை படைத்தது.

சர்தார்

சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து 1993-ஆம் ஆண்டு வெளியிட்டார்கள். நடிகர் பரேஷ் ரவால் சர்தார் வல்லபாய் பட்டேலின் கதாபாத்திரத்திற்குச் சரியாகப் பொருந்தியிருப்பார். சிறப்பான ஒப்பனைகளை மேற்கொண்டு நியாயம் செய்யும் நடிப்பை வழங்கியதற்காக அப்போது பாராட்டுகளை அள்ளினார் பரேஷ் ரவால். இத்திரைப்படம் அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது.

டாக்டர் பாபசாஹேப் அம்பேத்கர்

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் இத்திரைப்படம் இன்றும் முக்கியமான பயோபிக் திரைப்படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அம்பேத்கரின் வாழ்க்கை குறித்து ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இப்படத்தை எடுத்திருந்தார்கள். அம்பேத்கர் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்து தேசிய விருதையும் பெற்றார்.

பாக் மில்கா பாக்

2013-இல் வெளியான இத்திரைப்படம் வழக்கமாக பயோபிக் படங்கள் களமாடும் கதைக்களத்திலிருந்து முழுமையாக வேறுபட்டது. மில்கா சிங் என்கிற விளையாட்டு வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த பயோபிக் படத்தை எடுத்திருப்பார்கள்.

விளையாட்டு வீரர்களின் கதைகளையும் பயோபிக் படங்களாக எடுக்கலாம் என்ற புதியதொரு அலையையும் இத்திரைப்படம் உருவாக்கியது. இப்படியான விளையாட்டு வீரர்களின் கதைகள் பார்வையாளர்களை ஊக்கப்படுத்தி உத்வேகம் அளித்தது. இன்று விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியாகும் பயோபிக் படங்களுக்கு இத்திரைப்படம் முன்னோடி என்றே சொல்லலாம்.

எம்.எஸ்.தோனி

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை எமோஷனல் மாறாமல் அப்படியே இப்படத்தின் மூலம் திரையில் கொண்டு வந்தார்கள். சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனியின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தி நியாயம் செய்யும் நடிப்பைக் கொடுத்திருப்பார்.

அதனால்தான், அவர் மறைவுக்குப் பிறகும் இத்திரைப்படம் அவரின் அடையாளமாகப் பலரின் மனதில் நிற்கிறது. தோனியின் வாழ்க்கைப் பக்கங்களைக் காட்சிப்படுத்திய இத்திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான பிணைப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதைத் தாண்டி, 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'மேரி கோம்', 'ராக்கெட்ரி', 'சூப்பர் 30', 'யாத்ரா', 'என்.டி.ஆர். கதாநாயகுடு', 'மகாநதி', 'செல்லுலாய்டு', 'ராமனுஜம்' உட்பட பல பயோபிக் திரைப்படங்களும் இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமானவையாகத் திகழ்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com