முதல் பெண்ணாக ஆசை

'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
முதல் பெண்ணாக ஆசை
Published on
Updated on
2 min read

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

அதீகா மிர் சொல்வது:

'கார்டிங் என்பது மோட்டார் பந்தயத்தில் ஒரு பகுதியாகும். 'கார்ட்ஸ்' எனப்படும் சிறிய, திறந்த குட்டி கார்களை அதற்கான பந்தயத் தடங்களில் வேகமாக ஓட்டுவதாகும். கார் ரேஸில் கார்ட்ஸூக்கு முக்கியப் பங்கு உண்டு. பல தொழில்முறை ஓட்டுநர்களுக்கு 'கார்ட்ஸ்' ஒரு தொடக்கப் புள்ளியாகும்.

இதில் எனக்கு நல்ல அனுபவம் உண்டு. இது ஆண்களுக்கான விளையாட்டு. 'ஃபார்முலா 1' -இல் போட்டியிடும் 21-ஆம் நூற்றாண்டின் முதல் பெண்ணாக நான் இருக்க விரும்புகிறேன். அதுதான் என் லட்சியம். அதற்கு ஒவ்வொரு நாளும் நான் கடினமாக உழைக்க வேண்டும். அதைத்தான் செய்து வருகிறேன்.

'ஃபார்முலா 1' வரலாற்றில் இரண்டு பெண்கள் மட்டுமே கிராண்ட் பிரிக்ஸில் பங்கு பெற்றுள்ளனர். 1992 - ஆம் ஆண்டு முதல் எந்தப் பெண்ணும் தகுதிபெற முயற்சிக்கவில்லை. இந்தப் பின்னணியில், கார்ட்டிங் பிரிவில் நான் பங்கு பெறுகிறேன்.

கார்டிங் ஒரு கலப்பு -பாலினப் போட்டி. சிறுவர்களும் சிறுமிகளும் ஒன்றாகக் கருதப்படுவார்கள். ஆனால், நான் மிகவும் வேகமாக குட்டி காரை ஓட்டுவதால், சிறுவர்கள் என்னை முந்த என்னை முட்டுவது போல ஓட்டுவார்கள். சிறுவர்களிடம் 'சிறுமி நம்மை முந்துவதா' என்ற ஈகோ பிரச்னை இருக்கிறது.

என் தந்தை ஆஸிஃப் மிர், முன்னாள் தேசிய கார்ட்டிங் சாம்பியன். இப்போது எனக்குப் பயிற்சி கொடுக்கிறார். தொடக்கத்தில் போட்டி முடிந்ததும் நான் அழுது கொண்டு வெளியேறினேன். காரணம், பந்தயத்தில் கவனம் செலுத்தி அதிவேகமாக நான் கார் ஓட்டும்போது திடீரென்று ஒரு பையன் என் வண்டியில் மோதினார். 'இப்படி மோதுவதைத் தவிர்க்க முடியாது.

அதுதான் விளையாட்டு. சும்மா புலம்பிக் கொண்டு, அழுது கொண்டு இருக்கக் கூடாது' என்று அப்பா சமாதானப்படுத்துவார். 'இது ஆண், பெண் என்ற வித்தியாசத்தைப் பற்றிய போட்டி அல்ல. இந்த மாதிரி சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்ற புரிதல் வந்ததினால், என்னை ஒத்த சம வயதினரில் வேகமான பந்தய வீரராக என்னால் ஆக முடிந்துள்ளது.

கடந்த ஆண்டில் உலகின் பிரபல 'ரோடாக்ஸ் மேக்ஸ் சேலஞ்ச்' இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, பிரான்சில் நடந்த புகழ்பெற்ற 'லீ மான்ஸ்' சுற்றில் வென்றேன். இந்தப் பெருமையைப் பெற்ற முதல் இந்தியர் மட்டுமல்ல, முதல் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவரும் நான்தான். இந்தச் சிறப்புகள், சாதனைகள் மட்டுமே 'ஃபார்முலா 1' அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்திற்கு நான் தெரிவு செய்யப்பட வெற்றிப்படிகளாக அமைந்தன. நான் என் பெற்றோருடன் வளைகுடா நாட்டில் வசித்து வருகிறேன்.

ஒவ்வொரு பந்தயத்துக்குப் பிறகும், எனது அனுபவத்தை பள்ளி மாணவர்களுக்குச் சொல்லச் சொல்வார்கள். ஏனைய மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படுகிற நிகழ்ச்சியின் 'கேள்வி பதில்' பிரிவில், 'என்ன வேகத்தில் கார் ஓட்டுவீர்கள்?' என்று மறக்காமல் கேட்பார்கள். நான் 'மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பறந்துடுவேன்' என்பேன். மாணவ, மாணவியர் மலைத்துப் போவார்கள்.

நான் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து, 6 மணிக்கு உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்கிறேன். பின்னர் பள்ளி. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு, சிமுலேட்டர் பயிற்சி, பிறகு மீண்டும் உடற்பயிற்சி, பிறகு மீண்டும் சிமுலேட்டர் பயிற்சி, படிப்பு, இரவு உணவு, தூக்கம்,' இப்படித்தான் எனது ஒவ்வொரு நாளும் நகர்கின்றன.

'பந்தய நாள்களில், அழுத்தம் தீவிர

மடையும். கார் பந்தயங்கள் 16 முதல் 17 நிமிடங்கள் நீளும். சில அங்குல இடைவெளியில் போட்டி கார்கள் பறக்கும். யார் யாருடன் மோதுவார்களோ என்று மனம் 'திக் திக்' என்று அடித்துக் கொள்ளும். அப்பாவின் கார் சாகசங்களைப் பார்த்துத்தான் நானும் கார் ரேஸில் பங்கெடுக்க ஆர்வம் காட்டினேன்.

தொடக்கத்தில் காரில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் கூட அப்பாவின் உதவி தேவைப்பட்டது. இப்போது எனக்காக உதவ 'தொழில்முறை' குழு உள்ளது. என்றாலும், இறுதியில் அப்பாவிடம் 'எல்லாம் ஓ.கே. யா?' என்று கேட்டுவிட்டுத்தான் காருக்குள் அமர்வேன்.

'நான் இயற்கையாகவே பதட்டப்படாமல் இருப்பவள். இருந்தாலும், சில தருணங்களில் பதற்றப்படாமல் இருக்க முடியாது. மும்பையின் போக்குவரத்து சாதாரணமாக சொந்த கார்களில், டாக்சியில் பயணிப்பவர்களின் பொறுமையை அநியாயத்திற்குச் சோதிக்கும். மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பாயும் எனக்கு சாலையில் நீண்ட நேரம் வாகனங்கள் அசையாமல் நிற்பது எவ்வளவு பெரிய சோதனை தெரியுமா? இது எனக்குத் தரப்பட்ட தண்டனை என்று நினைத்துக் கொள்வேன்.

செப்டம்பர் 28 -இல் நடந்த 'வளைகுடா ரோட்டக்ஸ் மேக்ஸ் சாம்பியன்ஷிப்' போட்டியில் முதல் பெண் வெற்றியாளராகி சாதனை படைத்துள்ளேன். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் போட்டியில் கையில் காயம் ஏற்பட்டிருந்த நிலையிலும் நான் வெற்றி பெற்றேன்!' என்கிறார் அதீகா மீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com