

மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகங்களில் தங்கமும் ஒன்று. தங்கத்தின் விலையோ கிடுகிடுவென விண்ணைமுட்டும் உயரத்துக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.
எனினும், செல்வந்தர் முதல் சாமானியர் வரைக்கும் தங்கத்தின் மீதுள்ள மோகம் இன்னும் தணிந்தபாடில்லை. ஆபரணச் சேர்க்கையாகவும், நாணயம் மற்றும் பிஸ்கட் முதலீடுகளாகவும், பங்கு வர்த்தக முதலீடாகவும் தங்கவேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நாம் பயன்படுத்தும் தங்கம் தங்கமாகவே அப்படியே பூமியில் கிடைப்பதில்லை. அதன் தாதுக்களின் படிமங்களின் செறிவான இடத்தை ஆய்வு செய்து, அதில் கிடைக்கும் தங்கத்தின் அளவு, மதிப்பு, தோண்டி எடுக்கும் செலவைவிட பலமடங்கு அதிகமாக இருந்தால் மட்டுமே சுரங்கம் அமைத்துத் தோண்டி எடுக்கப்பட்டு அதன் தாதுக்கள் பலகட்ட சுத்திகரிப்பிற்குப் பிறகு சொக்கத் தங்கமாக மாறுகிறது.
இந்தியாவில் மாபெரும், அதாவது 940 ஹெக்டேர் பரப்பளவில் 222 டன் தூய தங்க இருப்பு ராஜஸ்தானில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பன்ஸ்வாரா மாவட்டம், கந்தோல் தாலுகாவில் உள்ள கன்காரியா கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக சமீபத்தில் வெளியான தகவல் கூறுகிறது. இருப்பினும், இன்னும் அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. இது ராஜஸ்தானின் மாவட்டத்தில் மூன்றாவது தங்கம் தோண்டும் மண்டலமாகும்.
இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரபிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து நான்காவது தங்கம் தோண்டும் மாநிலமாக ராஜஸ்தான் 2024-ஆ ம் ஆண்டு அறியப்பட்டது.
இந்தியாவின் புதிய தங்கத் தலைநகராக இது தொடர்ந்து உருவாகி வருவதால், மாவட்டத்தில் இது மூன்றாவது தங்கம் தோண்டும் மண்டலமாகும். புக்கியா மற்றும் ஜக்புராவில் முந்தைய கண்டுபிடிப்புகள் பதிவாகியுள்ளன.
தகவல்களின்படி, கன்காரியாவில் மூன்று கிலோமீட்டர் பரப்பளவில் தங்கத் தாது பரவியிருப்பதை புவியியல் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட மதிப்பீடுகள் சுமார் 113.52 மில்லியன் டன் தங்கத் தாது இருப்பதாகக் கூறுகின்றன. இதில் ராஜஸ்தானில் இதுவரை பதிவான மிகப்பெரிய வைப்புகளில் ஒன்று. 222.39 டன் தூய தங்கம் உள்ளது.
அருகிலுள்ள கங்காரியா-காரா பகுதியும் 205 ஹெக்டேர் பரப்பளவில் 1.24 மில்லியன் டன் தங்கத் தாதுவை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தைத் தவிர, பல மதிப்புமிக்க இணை-கனிமங்களையும் இந்த இடத்திலிருந்து பிரித்தெடுக்க முடியும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ராஜஸ்தான் அரசு முன்பு பூகியா-ஜக்புரா சுரங்கத் தொகுதிகளை ஏலம் எடுத்திருந்தது, ஆனால் ஏலம் வென்ற நிறுவனம் தேவையான உத்தரவாதத் தொகையை டெபாசிட் செய்யத் தவறியதால் உரிமம் ரத்து செய்யப்பட்டது. புதிய டெண்டர்கள் வெளியிடப்பட்டன. சமர்ப்பிப்புகள் அக்டோபர் 14 அன்று முடிவடைந்து, நவம்பர் 3- ஆம் தேதி ஏலங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த மாவட்டத்தில் ஏற்கெனவே தங்கம் கண்டறியப்பட்ட இடங்களிலும் தங்கச் சுரங்கம் அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுரங்க நடவடிக்கைகள் தொடங்கியதும், பன்ஸ்வாராவும் தங்கச் சுரங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இந்திய மாநிலங்களின் ஒரு குறிப்பிட்ட குழுவில் சேரும். இது எதிர்காலத்தில் இந்தியாவின் மொத்தத் தங்கத் தேவையில் 25% வரை வழங்க வாய்ப்புள்ளது.
இந்த வளர்ச்சி மின்னணுவியல், பெட்ரோ கெமிக்கல்ஸ், பேட்டரிகள் மற்றும் ஆட்டோ துறைகளில் பெரிய முதலீடுகளை ஈர்க்கக்கூடும் என்றும், உள்ளூர் இளைஞர்களுக்குக் கணிசமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும், பன்ஸ்வாராவை ராஜஸ்தானில் ஒரு குறிப்பிடத்தக்க தொழில்துறை மற்றும் பொருளாதார மையமாக மாற்றமுடியும் என்றும் நிபுணர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.
1990-91 ஆம் ஆண்டில் புவியியல் ஆய்வின்போது பன்ஸ்வாராவில் தங்க இருப்பு முதன்முதலில் அடையாளம் காணப்பட்டன. கிட்டத்தட்ட 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஜக்
புரா-புகியா பெல்ட்டின் ஆய்வுகள், ஒரு டன் தாதுவில் தோராயமாக 1.945 கிராம் தங்கம் இருப்பதாகக் காட்டியது. இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 120 டன் தங்கம் இருக்கலாம்; இது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வருவாயாக இருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.