நடமாடும் உயிர்க்காவலர்
'எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்' என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
சித்த மருத்துவர், அக்குபஞ்சர் சிகிச்சையாளர், ஓவியர், கைவினைக் கலைஞர், கர்நாடக இசைக் கலைஞர், முதலுதவி சிகிச்சை அளிப்பவர், தீ- வாகன விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரகர் உள்ளிட்ட பன்முகம் கொண்டவரான சீனிவாச பிரசாத்தை 'டி.எஸ்.பி.' என்றே மக்கள் அழைக்கின்றனர்.
உள்ளூரில் இருந்தால் மிதிவண்டியிலும், வெளியூர் சென்றால் மொபெட்டில் செல்லும் இவர் தனது வாகனத்திலேயே தீயணைப்பான் கருவி, முதலுதவிப் பெட்டி, மருந்துகள், மருத்துவ உபகரணங்களை எப்போதும் வைத்திருந்து, பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளைப் புரிந்து 'நடமாடும் உயிர்க் காவலர்' என்ற பெயரை எடுத்துள்ளார்.
அவருடன் ஒரு சந்திப்பு:
உங்கள் இளமைக்காலம்..?
ஸ்ரீரங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை பயின்றேன். என்.சி.சி., சாரணர் இயக்கத்தில் அணித் தலைவராக இருந்தேன். மேலே படிக்க விருப்பமின்றி கிடைத்த வேலைகளைச் செய்யத் தொடங்கினேன். 1985-இல் ரயில்வேயில் கலாசி பணி கிடைத்து, முதுநிலை தொழில்நிபுணராக ஓய்வு பெற்றேன். ஆனால், முதலுதவி சிகிச்சையிலும், சேவைப் பணிகளிலும் ஓய்வின்றி என் இறுதி மூச்சு வரையும் பணியாற்றுவேன்.
சேவைப் பணிகள் குறித்து..?
ரயில்வே ஊழியர்களில் சிலரை ஒருங்கிணைத்து, 'கடற்படை சாரணர் இயக்கம்' என்ற பெயரில் சேவையைத் தொடங்கினேன். சாரணர் இயக்கத்தில் கிடைத்த முதலுதவிப் பயிற்சியே சேவைக்கு உந்துதலாகவும், தனியாக ஒரு பிரிவையும் அமைக்கவும் முடிந்தது.
சித்த மருத்துவம் கற்று, நடமாடும் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவருகிறேன். பிற மாநிலங்களுக்கும் சென்று சேவை புரிந்துள்ளேன்.
நான் பணிபுரியும் இடத்திலோ, செல்லும் இடத்திலோ, வீட்டுக்கு அருகிலோ யாருக்கேனும் வாகன விபத்து, தீ விபத்து, மரத்தில் இருந்து கீழே விழுந்து காயம் போன்றவை ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையை அளிப்பேன்.
உள்ளூரில் இருந்தால் மிதிவண்டி மூலம் சாலைகளில் சுற்றி வந்து சிறிய சிறிய விபத்துகளில் சிக்கி காயமடைந்தோருக்கு முதலுதவி செய்கிறேன். வெளி மாவட்டங்களுக்கு மொபெட்டில் செல்கிறேன். எனது வாகனத்திலேயே தீயணைப்பான் கருவி, முதலுதவிப் பெட்டி, மருந்துகள், மருத்துவ உபகரணங்களை எப்போதும் இருக்கும்.
நாற்பது ஆண்டுகளில் விபத்தில் காயமடைந்த ஆயிரக்கணக்கானோருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளேன். சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக எனது வாகனத்தில் உள்ள தீயணைப்பானைக் கொண்டு அணைத்துவிடுவேன். அனைத்து வகை நெருப்புகளையும் அணைக்கும் வகையிலான 5 கிலோ எடையுடைய தீயணைப்பான் எப்போதும் என்னிடம் இருக்கும்.
தனியே மருத்துவம் படித்தீர்களா?
மதுரையில் சித்த மருத்துவக் குருகுலக் கல்வியில் பயின்று, பதிவு பெற்ற மருத்துவரானேன். அக்குபஞ்சர் மருத்துவமும், வண்ணங்களால் சிகிச்சை அளிக்கும் முறையையும் கற்றேன். ஆங்கில மருத்துவத்தில் காயங்களுக்கு முதலுதவி சிசிகிச்சை அளிக்கப் பயன்படுத்தும் மருந்துகளுக்கு நிகரான மூலிகை மருந்தை நானே தயாரித்து பயன்படுத்தத் தொடங்கினேன்.
அடிபட்ட காயம், வெட்டுக் காயம், சிராய்ப்பு, தீக்காயம் உள்ளிட்டவற்றுக்கு இந்த மருந்து பெரிதும் பலனை அளிக்கிறது. டிஞ்சர், அயோடினைப் போன்று செயலாற்றும் மூலிகை மருந்தையும் தயாரித்து பயன்படுத்துகிறேன்.
'குரோமோதெரபி' என்ற வண்ணங்களால் சிகிச்சை முறையில் வண்ணங்கள், ஒளியைப் பயன்படுத்தி உடல், மன நலப் பிரச்னைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மாற்று மருத்துவ முறையிலும் சிகிச்சையை அளிக்கிறேன்.
மருத்துவத் துறையில் மறக்க முடியாத அனுபவம் இருக்கிறதா?
1986-இல் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட நெரிசல், 1997-இல் தஞ்சாவூர் பெரிய கோயில் தீ விபத்து போன்றவற்றில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டேன். இந்த விபத்துகளை நேரில் பார்வையிட்டதாலேயே உயிர் காக்கும் சேவையில் இடைவிடாது பணிபுரிந்து வருகிறேன்.
என்னிடம் முதலுதவி பெறும் நபரின் முகத்தில் எழும் புன்னகைதான் என்னை மேலும் மேலும் இயங்கச் செய்கிறது.
மருத்துவ விழிப்புணர்வுப் பணிகள் குறித்து..?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் தீ விபத்து, பட்டாசு விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை எனது நடமாடும் வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலமாக மேற்கொண்டேன்.
கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு உரையாற்றுவது, அகில இந்திய வானொலி நிலையத்தின் திருச்சி பிரிவின் மூலம் விழிப்புணர்வு நிகழ்வு, சேவை சங்கங்கள் விழாவில் பங்கேற்று முதலுதவி, தீ தடுப்பு குறித்து உரையாற்றுதல் போன்றவற்றை மேற்கொள்வேன்.
புதுச்சேரி வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, முதல்வர் என்.ரங்கசாமி என்னை நேரிலேயே அழைத்துப் பாராட்டினார்.
சென்னையில் நடைபெற்ற ஓர் அறக்கட்டளை விழாவில், 'நல் சமாரியன்' என்ற விருதையும் பெற்றேன். எனது மகன் 17 வயதிலேயே மரத்திலிருந்து விழுந்து உயிரிழக்க நேரிட்டாலும், இருவரை வளர்ப்பு மகளாகப் பெற்று திருமணம் செய்து கொடுத்துள்ளேன்.
ஓவியம் வரைவதில் உங்கள் அனுபவம் என்ன?
கோழி முட்டையில் துளையிட்டு அதனுள் ஓவியம் வரைதல், கொப்பரைத் தேங்காயைச் செதுக்கி ஓவியம் வடிக்கும் திறனைக் கொண்டுள்ளேன். அதேபோன்று கர்நாடக சங்கீதத்தைக் கற்று கடம், மேளம் வாசிக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
