உலகின் நீண்ட நேர மாரத்தான்!

ஷிசோ கனகுரி என்பவர்தான் ஜப்பானிலிருந்து மாரத்தான் பிரிவிற்காக முதலில் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியானவர்.
உலகின் நீண்ட நேர மாரத்தான்!
The Asahi Shimbun
Published on
Updated on
2 min read

ஷிசோ கனகுரி என்பவர்தான் ஜப்பானிலிருந்து மாரத்தான் பிரிவிற்காக முதலில் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியானவர். அது நடந்த வருடம் 1912. ஒலிம்பிக் போட்டி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் நடக்க இருந்தது. அந்நாள்களில் அயல்நாட்டுப் பயணங்கள் கடல் மார்க்கமாகவே நடந்தன.

ஜப்பானிலிருந்து ஸ்டாக்ஹோம் செல்ல ரஷ்யாவின் நீண்ட இருப்புப்பாதையான டிரான்சைபீரியன் பாதையைப் பயன்படுத்தினார், கனகுரி. அவருக்கு ஸ்டாக்ஹோம் செல்ல 18 நாள்கள் பிடித்தன. கனகுரியின் பாதி ஆற்றல் அந்தப் பயணத்திலேயே குறைந்தது.

ஸ்டாக்ஹோமிலும் கனகுரிக்குத் தொல்லைகள் காத்திருந்தன. அதிக வடக்கில் இருப்பதால் நள்ளிரவிலும் சூரியன் உண்டு. சூரியன் அதிக நேரம் மறைவதில்லை. எனவே கனகுரிக்குப் பெரும்பாலும் உறக்கமும் வரவில்லை. அந்நாட்டின் உணவும் ஜப்பானியருக்கு ஒத்துவரவில்லை. மேலும் அவரது பயிற்சியாளர் காசநோயால் பீடிக்கப்பட்டிருந்தார். எனவே கனகுரிக்குச் சரியான பயிற்சியும் கிடைக்கவில்லை.

சோதனையாக, அந்த வருடம் ஸ்டாக்ஹோம் உஷ்ண அலையால் பாதிக்கப்பட்டிருந்தது. 1912-ஆம் ஆண்டு ஒலிம்பிக் வரலாற்றின் முதன்முறையாக வெப்பம் தாங்காமல் ஓர் ஓட்டப் பந்தய வீரர் மயங்கி உயிர் துறந்தார். ஆனால் எந்த இடைஞ்சல்களையும் கனகுரி பொருட்படுத்தவில்லை. திட்டப்படி தனது மாரத்தான் பந்தயத்தை மேற்கொண்டார்.

16 மைல்களைக் கடந்தபின் அயர்வும் சோர்வும் அவரை ஆட்கொண்டன. அவர் உடலில் நீர்ச்சத்தும் குறைந்திருந்தது. எனவே பந்தயத்தைக் கைவிட முடிவு செய்தார்.

வழியில் அங்கிருந்த பூங்கா ஒன்றில் தடுமாறி அமர்ந்து கொண்டார். அவரது நிலையைக் கண்டு இரங்கி அங்கிருந்த ஒரு குடும்பத்தினர் ஆரஞ்சு சாறு தந்து அவரை ஆசுவாசப்படுத்தினர். ஒருமணி நேரம் இடைவெளி விட்டுவிட்டு அந்தக் குடும்பத்தினர் தந்துகொண்டிருந்த ஆரஞ்சு சாற்றையே அருந்திக் கொண்டிருந்தார்.

பந்தயத்தை முடிக்கவில்லையே என்ற துயரம் கனகுரியை வாட்டியது. எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அமைதியாக ஜப்பான் திரும்பினார். அவர் எவரிடமும் விவரம் தெரிவிக்காததால், சுவீடனில் தொலைந்த நபர்கள் பட்டியலில் அவர் பெயர் சேர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 54 வருடங்கள் அவர் பெயர் அந்தப் பட்டியலில் இருந்து வந்தது.

1967-ஆம் வருடத் தொடக்கத்தில் சுவீடன் பத்திரிகையாளர் ஒருவர் கனகுரியை ஜப்பானில் சந்திக்க நேர்ந்தது. அப்போது கனகுரி ஜப்பானில் பள்ளி ஒன்றில் புவியியல் பற்றிய வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பத்திரிகையாளர் கனகுரியின் ஒலிம்பிக் அனுபவம் பற்றிய கட்டுரையை சுவீடனில் பிரசுரித்தார்.

சுவீடனின் தொலைக்காட்சி அலுவலகம் உடனே கனகுரியுடன் தொடர்பு கொண்டு 1912 -இல் அவர் பாதியில் திரும்பிய மாரத்தான் பந்தயத்தை முடிக்க இயலுமா என்றும் கேட்டனர். அவரது ஓட்டத்திற்கான கடிகாரம் அதுவரை நகர்ந்துகொண்டிருந்தது. கனகுரி மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

எனவே 1967 -ஆம் வருடம் மார்ச் 20-ஆ ம் தேதி கனகுரி தனது 75-ஆம் வயதில் ஸ்டாக்ஹோம் திரும்பி வந்தார். தனது மாரத்தான் பந்தயத்தை விட்ட இடத்திலிருந்தே மீண்டும் தொடங்கி முடித்தார்.

பந்தயம் முடிந்ததும் பூங்காவில் அவருக்கு ஆரஞ்சு சாற்றைக் கொடுத்து தெம்பைக் கொடுத்த குடும்பத்தைச் சந்திக்க முடிவு செய்தார். அந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பெங்க்ட் பெட்ரே என்பவர் மீண்டும் கனகுரிக்கு ஆரஞ்சு சாற்றையே தந்து வரவேற்றார்.

ஷிசோ கனகுரியின் பெயர் மாரத்தானில் அதிக நேரம் எடுத்துக் கொண்டவர் என்ற தலைப்பில் கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

கனகுரி தனது ஒலிம்பிக் மாரத்தான் பந்தயத்தை 1912-இல் தொடங்கி 1967-இல் முடித்தார். பதிவு செய்யப்பட்ட நேரம் 54 வருடங்கள், 8 மாதங்கள், 6 நாட்கள், 5 மணி நேரம், 32 நிமிடங்கள், 20.3 விநாடிகள். கனகுரிக்கு அந்தச் சமயத்தில் திருமணமாகி ஆறு குழந்தைகளும் 10 பேரக்குழந்தைகளும் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com