நியூயார்க்கின் விடியல்...

நியூயார்க் மேயராக, ஸோரன் குவாமே மம்தானி அண்மையில் தேர்வாகியுள்ளார். இவர் தனது வெற்றியை 'நியூயார்க் நகரத்தில் ஒரு புதிய விடியல்' என்று வர்ணித்ததுள்ளார்.
நியூயார்க்கின் விடியல்...
Published on
Updated on
2 min read

நியூயார்க் மேயராக, ஸோரன் குவாமே மம்தானி அண்மையில் தேர்வாகியுள்ளார். இவர் தனது வெற்றியை 'நியூயார்க் நகரத்தில் ஒரு புதிய விடியல்' என்று வர்ணித்ததுள்ளார்.

தேர்தல் நேரத்தில் மம்தானியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். மம்தானி வெற்றி பெற்றதும், 'மிஸ்டர் டொனால்ட் டிரம்ப்... நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

நான் உங்களுக்காக நான்கு வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்...' என்று சொல்லி, ஒலிபெருக்கியின் சப்தத்தை அதிகரிக்கச் சொன்னார். தொடர்ந்து, 'டொனால்ட் டிரம்ப்பைத் தோற்கடிக்க அவரை வளர்த்த நியூயார்க்கால் முடியும். அமெரிக்க அரசியல் இருளில் நியூயார்க் வெளிச்சம் வழங்கும்' என்றார்.

மம்தானி மேடையை விட்டுப் புறப்படும்போது ஹிந்தி மொழியில் வெளியான 'தூம்' படத்தின் ஹிட் பாடலான 'தூம் மச்சாலே..' எனும் பாடல் ஒலித்தது. பதிலுக்கு மம்தானியின் வெற்றி குறித்து டிரம்ப், 'ம்ம்ம் ... அது அப்படி தொடங்குகிறது...' என்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் எழுதினார்.

நியூயார்க்கின் முதல் இந்திய வம்சாவளி மேயராக வரலாறு படைத்திருக்கும் மம்தானியின் அபார வெற்றி, டிரம்புக்குப் பின்னடைவுதான். 2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்பின் ஜனநாயகக் கட்சியின் கோட்டையாக இருந்த நியூயார்க் நகரம், குடியரசுக் கட்சியை நோக்கி நகர்ந்துள்ளது. 'மம்தானி மேயராகிவிடக் கூடாது' என்று முன்னாள் ஜனநாயகக் கட்சியின் ஆளுநரும் டிரம்பின் எதிரியுமான ஆண்ட்ரூ கியூமோவை டிரம்ப் முழுமூச்சாக ஆதரித்தார்.

பெரும் பணக்காரர்கள் மீது அதிக வரி விதிப்பதும், உயர்ந்து வரும் வீட்டு வாடகையைக் கட்டுக்குள் வைப்பதும் மம்தானியின் கொள்கையாக இருந்தது. 'தொழிற்சாலையில் எட்டு மணி நேர வேலை அல்லது டாக்சி ஓட்டுவது போன்ற வேலைகளில் வரும் வருமானம் மாதாந்திர வங்கித் தவணைகள் கட்டுவதற்கும், குடும்பச்செலவுகளுக்கும், குழந்தைகளைப் படிக்க வைக்கவும் போதுமானதாக இருக்க வேண்டும்' போன்ற மம்தானியின் சோசியலிச கொள்கைகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தது மட்டுமல்லாமல் வாக்குகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

'ஒரு ஜனநாயக சோசலிஸ்ட் என்ற எனது அடையாளத்துக்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்' என்று சொன்ன மம்தானி, இருபத்து ஏழு வயதான மனைவி ரமா துவாஜியுடன் மேடையில் தோன்றினார்.

'ஜவாஹர்லால் நேருவின் வார்த்தைகளை நான் நினைத்துப் பார்க்கிறேன். வரலாற்றில் நாம் பழையதிலிருந்து புதியதற்கு அடியெடுத்து வைக்கும் ஒரு தருணம் வருகிறது. ஒரு யுகம் முடிகிறது. ஒரு தேசத்தின் ஆன்மா மகிழ்கிறது. இன்றிரவு நாம் பழையதிலிருந்து புதியதற்கு அடியெடுத்து வைக்கிறோம்' என்று மம்தானி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

'நியூயார்க்கின் உழைக்கும் மக்களிடம், அதிகாரம் அவர்களின் கைகளில் இல்லை என்று செல்வந்தர்களும், செல்வாக்கு உள்ளவர்களும் சொன்னார்கள். ஆனாலும், மக்களே நீங்கள் பெரிதாக ஒன்றை அடையத் துணிந்துவிட்டீர்கள். எதிர்காலம் நம் கைகளில் உள்ளது. டிரம்ப் போன்ற கோடீஸ்வரர்களுக்கு வரிவிதிப்பைத் தவிர்க்கவும், வரிச்சலுகைகளைப் பயன்படுத்தவும் அனுமதித்த ஊழல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்று மம்தானி கூற, அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்தனர்.

1991-இல் உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் பிறந்த மம்தானியின் தாயார் பிரபல இயக்குநர் மீரா நாயர். மம்தானிக்கு ஏழு வயதாக இருந்தபோது, தந்தை மஹ்மூத் மம்தானிக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை கிடைத்ததால், குடும்பம் நியூயார்க்குக்குக் குடிபெயர்ந்தது. மஹ்மூத் ஏழு புத்தகங்களை எழுதியுள்ளார்.மீரா நாயரும் நிறைய சம்பாதித்துள்ளார். சொந்தமாக பங்களாவும் இருக்கிறது.

2014-இல் பட்டம் பெற்றவுடன் மம்தானி, அரசியல் கூட்டங்கள், பிரசார அமைப்பாளராக மாறினார். 2018-இல் அமெரிக்கக் குடிமகன் அந்தஸ்தைப் பெற்ற மம்தானி, 2020-இல் மாகாண உறுப்பினருக்குப் போட்டியிட்டு ஐந்து முறை பதவி வகித்தவரை தோற்கடித்தார். மாத வாடகை கொடுத்து அடுக்கு

மாடிக் குடியிருப்பில் வசிக்கிறார். இவரிடம் கார் இல்லாததால், மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com