ஒரே அணி... ஒரே கனவு..!

ஒரே அணி... ஒரே கனவு..!

இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் 1983, 2011 -ஆம் ஆண்டுகள் மறக்கமுடியாதவை. 1983-இல் கபில்தேவும், 2011-இல் தோனியும் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்து சாதனை படைத்தார்கள்.
Published on

இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் 1983, 2011 -ஆம் ஆண்டுகள் மறக்கமுடியாதவை. 1983-இல் கபில்தேவும், 2011-இல் தோனியும் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்து சாதனை படைத்தார்கள். இப்போது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி தன் பங்குக்கு, ஹர்மன் ப்ரீத் கௌர் தலைமையில் உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியாவில் வாழும் 70 கோடி பெண்களுக்கு ஒரு பெருமைக்குரிய தருணமாக நவம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு மாறியுள்ளது.

ஐரோப்பிய -ஆப்பிரிக்கப் பெண்களுடன் ஒப்பிடுகையில், 'இந்தியப் பெண்கள் உடல் பலவீனமானவர்கள்' என்ற அனுமானங்கள் தகர்த்து எறியப்பட்ட தருணம். நீல நிற உடை அணிந்த வீராங்கனைகள், இந்த தலைமுறைக்கும், இனி வரும் தலைமுறைக்கும் ஊக்கமளிப்பார்கள்.

இந்தியப் பெண்கள் அணியில் அனைவரும் தங்கள் தங்கள் பங்களிப்பைச் செய்தாலும் கேப்டன் ஹர்மன் ப்ரீத், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அணி அதிக ரன்கள் எடுக்கவிடாமல் செய்ததில்தான் இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

2005, 2017-இல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் இறுதி வரை வந்தாலும் இந்திய மகளிரால் வெற்றி பெற முடியவில்லை. 2025 உலகக் கோப்பைக்கான போட்டித் தொடரில் மூன்று முறை தோல்வி அடைந்தாலும், ஃபீனிக்ஸ் பறவை போல இந்திய அணி, ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வெற்றி கண்டு இறுதிப் போட்டியில் அடி எடுத்து வைத்தது.

உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, நியூஸிலாந்து பெண்கள் அணியினர் பங்கு போட்டு வந்தாலும் இந்த முறை இந்தியா நான்காவது சக்தியாக விசுவரூபம் எடுத்துள்ளது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம், மகளிர் அணிக்கு ரூபாய் 51 கோடியும், சர்வதேச கிரிக்கெட் வாரியம் ரூபாய் 38 கோடியும் பரிசாக வழங்கியது.

கிரிக்கெட் ஆர்வம் அதிகமாக இருக்கும் இந்தியாவில், பெண்கள் கிரிக்கெட்டுக்கு இந்தப் பரிசுத் தொகை அதிக அளவில் இளம்பெண்களை கிரிக்கெட்டுக்கு ஈர்க்கும்.

'பல ஆண்டுகளாக உலகக் கோப்பையை வெல்வது குறித்துப் பேசி வருகிறோம். தரமான கிரிக்கெட் விளையாடி வருகிறோம். ஆனால் இந்தியப் பெண்கள் அணி உலகக் கோப்பையை உயர்த்துவதைப் பார்க்க இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கனவு கண்டு வந்தேன். ஹர்மன் ப்ரீத்தின் அணியின் வெற்றி எனது கனவுகளை நனவாக்கியது' என்று 2017 மகளிர் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவை வழிநடத்திய மிதாலி ராஜ் பதிவு செய்துள்ளார்.

கேப்டன் ஹர்மன் ப்ரீத் கௌருக்கு முப்பத்து ஆறு வயதாகிறது. கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் விளையாட்டு வீரராக இருந்தாலும், இளைஞர்களுடன் கிரிக்கெட் ஆடி பயிற்சி பெற்றார். ஹர்மன் 2014 -இல் இந்திய ரயில்வேயில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்ததனால் மும்பை சென்றார். அது கிரிக்கெட்டில் நிலைத்து நிற்க உதவியது. ஹர்மன் 2016 முதல் இந்திய மகளிர் டி 20 அணியின் முழுநேர கேப்டனாகவும், 2022 முதல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் முழுநேர கேப்டனாகவும் இருந்து வருகிறார். உலகக் கோப்பைக்கான போட்டியை முடிவுக்குக் கொண்டுவர, கடைசி விக்கெட்டைப் பிடித்தவர் ஹர்மன்தான்.

உலகக் கோப்பைத் தொடரில் 434 ரன்கள் எடுத்து இந்திய அரங்கில் புதிய சாதனை புரிந்திருக்கும் ஸ்மிருதி மந்தனாவுக்கு வயது 29. கோடிகள் பரிசாகப் பெறும் மந்தனாவின் தந்தை, மஹாராஷ்டிரா சாங்லி நகரத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் வீரராக இருந்தார்.

மகாராஷ்டிராவின் 19 வயதுக்குள்பட்ட பிரிவின் கிரிக்கெட் வீரராக சகோதரர் இருந்ததனால் மந்தனாவும் கிரிக்கெட்டால் ஈர்க்கப்பட்டார். 11 வயதில் மகாராஷ்டிராவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியிலும், 15 வயதில் சீனியர் அணியிலும் விளையாடி தரவரிசையில் வேகமாக முன்னேறினார். மந்தனா இடது கை ஆட்டக்காரர். வலது கை ஆஃப்-பிரேக் பந்துவீச்சுக்குப் பெயர் பெற்றவர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் 87 ரன்கள் விளாசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்திய ஷஃபாலி வர்மா இந்திய அணியில் தொடக்கத்தில் சேர்க்கப்படவில்லை. அரையிறுதி ஆட்டத்தில் காயம் காரணமாக விலகிய பிரதிகா ராவலுக்கு மாற்றாக ஷஃபாலி சேர்க்கப்பட்டார். எந்த நம்பிக்கையில் சேர்க்கப்பட்டாரோ அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளார். ஆட்ட நாயகி விருதும் வழங்கப்பட்டுள்ள ஷஃபாலியின் வயது இருபத்து ஒன்று.

கிரிக்கெட்டுக்கு தீப்தி ஷர்மாவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஜனவரி 2025-இல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, உத்தர பிரதேச காவல் துறையில் துணைக் கண்காணிப்பாளராக (டி,எஸ்.பி.) நியமிக்கப்பட்டுள்ளார். இருபத்து எட்டு வயதாகும் தீப்தி உலகக் கோப்பைத் தொடரில் மொத்தம் 215 ரன்கள் எடுத்ததுடன் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இறுதி ஆட்டத்தில் மட்டும் 58 ரன்கள், 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆட்ட நாயகி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நுழையக் காரணமாக அமைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரையிறுதி ஆட்டத்தில் தூள் கிளப்பினார். இறுதி ஆட்டத்தில் விரைவில் அவுட் ஆனார். இருபத்து ஐந்து வயதாகும் ஜெமிமாவுக்கு கிரிக்கெட் தவிர பாட்டுப் பாடவும், கிடார் வாசிக்கவும் வரும். கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் பாட, ஜெமிமா கிடார் வாசிக்கும் நிகழ்ச்சி 2024 -இல் நிகழ்ந்தது.

'உலகக் கோப்பையில் இந்தியப் பெண்கள் அணி வெற்றி பெற்றால் நான் மீண்டும் பாடுவேன். ஜெமிமா கிடார் வாசிப்பார்!' என்று அறிவித்திருந்தார். இந்த அரிய வாய்ப்பும் ஜெமிமாவுக்குப் பரிசுதான்!

உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியப் பெண்கள் அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் பயிற்சியாளர் அமோல் மஸூம்தார். சச்சினுக்கும் பயிற்சியளித்தவர்தான் அமோலுக்கும் பயிற்சியாளர். ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள், 30 சதங்கள், 60 அரை சதங்கள் என்று சாதனைகள் செய்திருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியில் அமோலால் இடம் பெற முடியவில்லை.

2014-இல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அமோல், இளையோர் கிரிக்கெட், ஐ.பி.எல். தொடர் உள்ளிட்டவற்றில் பயிற்சியாளராக மாறினார். ஐம்பது வயதாகும் அமோல் கடந்த இரு ஆண்டுகளாக இந்திய மகளிர் அணிக்குப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். 'குரு' வாக இருந்து சத்தம் இல்லாமல் கச்சிதமாக இந்திய மகளிர் அணியை வெற்றியின் பக்கம் கொண்டு செல்வதில் வெற்றி பெற்றுள்ளார்.

பலித்தது கனவு!

சிறுவயதில் என் தந்தையின் கூடையில் நீண்ட கிரிக்கெட் பேட்டை பார்த்தேன். எனக்காக தந்தை அதை சிறியதாக்கிக் கொடுத்தார். அதேபோல கிரிக்கெட் ஆடும் பெண்களின் நீலச்சீருடை யின்மீது எனக்கு மோகம். அதை அணிந்து ஆடவேண்டும் என்பது எனது கனவு. ஒருநாள் அந்த வாய்ப்பு எனக்கு அமைந்தது. அதை நழுவவிடக்கூடாது என்றும் நினைத்தேன். கோப்பையைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதும் எனது அவா. அதுவும் நிறைவேறியது. கடவுள் எனக்கு அந்த வாய்ப்புகளைத் தந்தார்.

-ஹர்மன் ப்ரீத்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com