ராஜஸ்தானின் ஆரவல்லி மலைத் தொடருக்கு அருகேயுள்ள பழமையான நகரம்தான் ஜெய்ப்பூர். இந்நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்பு கொண்ட கட்டுமானங்களால் 'இளஞ்சிவப்பு நகரம்' (பிங்க் சிட்டி) என அழைக்கப்படுகிறது. 1799- ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரை நிறுவிய மன்னர் சவாய் ஜெய் சிங் பேரனும் கச்வாஹா ராஜபுத்திர ஆட்சியாளருமான சவாய் பிரதாப் சிங் ராயல் சிட்டி பேலஸூக்கு அருகே 'ஹவா மஹால்' எனும் விநோத மஹாலைக் கட்டினார். இது 'காற்றின் அரண்மனை' (பேலஸ் ஆஃப் தி விண்ட்ஸ்) என அழைக்கப்படுகிறது.
1770 -இல் ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் போபால் சிங் என்கிற ஆட்சியாளரால் கட்டப்பட்ட 'கேத்ரி மஹாலின்' தனித்துவமான அமைப்பைப் பார்த்து வியந்த மன்னர் சவாய் பிரதாப் சிங், ஐம்பதடி உயரத்தில் அழகாக ஐந்து அடுக்குத் தளங்களைக் கொண்ட இந்த ஹவா மஹாலை உருவாக்கினார். இந்த அழகிய அரண்மனை அடித்தளமின்றிக் கட்டப்பட்டது என்பதால், அற்புதமான கட்டடக் கலை அதிசயமாகும்.
சிவப்பு, இளஞ்சிவப்பு மணற்கற்களால் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டடம் பிரமிடு வடிவத்தைக் கொண்டுள்ளது. லால் சந்த் உஸ்தாத் என்பவர் வடிவமைத்துள்ளார்.
பகவான் கிருஷ்ணர் மீது சவாய் பிரதாப் சிங் பக்தி கொண்டிருந்ததால், கிருஷ்ணரின் மணிமுடி கிரீடத்தைப் போன்ற தோற்ற வடிவத்தில் அரண்மனையைக் கட்டமைத்தார். இது தேன்கூடு போன்ற அமைப்புக்காக பிரபலமானது.
ஹவா மஹாலில் 953 சிறிய ஜன்னல்கள் நுணுக்கமான கட்டுமான வடிவமைப்புடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இங்கு படிக்கட்டுகள் இல்லை, சரிவுப் பாதைகளின் வழியேதான் ஏறி இறங்க வேண்டும். உள்ளே 'ஆகாஷ் படால் ஜாலி' என்று அழைக்கப்படும் கிரில் உள்ளது. இந்த கிரில்லில் இருந்து, ஒருவர் உள்ளே இருந்து வெளிப்புறக் காட்சியைப் பார்க்க முடியும். ஆனால் வெளியே இருந்து உள்ளே யார் இருக்கிறார்கள் எனப் பார்க்க முடியாது. அரண்மனையின் உள்புறங்கள் தூண்கள் கொண்ட அறைகள், மேல் தளம் வரை அடையும் குறைந்தபட்ச அலங்காரமான தாழ்வாரங்களைக் கொண்டுள்ளது.
உள்முற்றம் முதல் மற்றும் இரண்டாவது தளங்களின் முன்பகுதியை அலங்கரிக்கிறது. கீழ் இரண்டு தளங்களைப் போல் அல்லாமல், மேல் மூன்று தளங்களும் ஒரு அறைக்கு மேல் இல்லாத அகலத்தைக் கொண்டுள்ளன. கட்டடத்தின் முற்றத்தின் மையத்தை அலங்கரிக்கும் நீரூற்றுகள் உள்ளன.
ஹவா மஹால் தங்குவதற்காக உருவாக்கப்படவில்லை. மாறாக, அரச குடும்பப் பெண்கள் முகத்தின் முன் மறைப்புச் சீலையின்றி இந்த மாட வளைவுகளில் அமர்ந்து, சில விசேஷ நேரங்களில் மட்டும் இங்கு வந்து இருந்து தெருக்களில் நடைபெறும் தினசரி வாழ்க்கையையும், திருவிழாக்களையும், ஊர்வலங்களையும், சந்தையின் பரபரப்பையும் சிறு ஜன்னல் அமைப்புகளின் மூலம் பார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முகலாய, ராஜபுத்திர கட்டடக்கலை பாணிகளின் அற்புதமான கலவையை இந்த மஹால் கொண்டுள்ளது. அதன் குவிமாடம் கொண்ட விதானங்கள், மலர் வடிவங்கள், தாமரை உருவங்கள், புல்லாங்குழல் தூண்கள் உள்ளிட்டவை ராஜபுத்திர பாணியை பிரதிபலிக்கின்றன. மேல்தளங்களில் உள்ள ஜந்தர் மந்தர் வானியல் ஆய்வுக்காக அக்காலத்தில் கட்டப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.