சிவாஜி நடித்த ராஜராஜ சோழன்...
ரவி ராமநாதன்
தமிழ் எழுத்தில் வல்லமை காட்டிய எழுத்தாளர் அரு. ராமநாதன்.
சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட கண்டனூரில் வயி. ராம. அருணாச்சலம் செட்டியார் - அரு. வள்ளியம்மை ஆச்சி தம்பதிக்கு தலைமகனாக 1924 ஜூலை 7-இல் பிறந்தார். திருச்சியில் பள்ளிப்படிப்பும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்
மீடியட் முதல் வருடமும் பயின்றார். இளம்வயதிலேயே தமிழ் மீது ஆர்வம் அதிகம் இருந்தது.
நாடக உலகில் பிரபலமான டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்திய நாடகப் பரிசுப் போட்டியில், அரு. ராமநாதனின் படைப்பான 'இராஜராஜ சோழன்' பரிசு பெற்றது. 1947-இல் 'கல்கி' நடத்திய சிறுகதைப் போட்டியில் 'கோழிப்பந்தயம்' என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டு, வெளியானது.
1947-இல் தனது 23-ஆவது வயதில், 'காதல்' மாத இதழை திருச்சியில் வெளியிட்டார். காதல் என்ற வார்த்தையையே அசூசையாகத் தமிழ்ச் சமூகம் கற்பித்துக் கொண்டிருந்த காலம். 1950-களில் காதல் திருமணம் என்பது மிக அரிதான விஷயமாகவும், விவாகரத்து என்பது அதைவிட அரிய விஷயமாகவும் இருந்தன. பத்திரிகையின் சாராம்சமும், வடிவமைப்பும், பிரசுரித்த கட்டுரைகளும் வாசகர்களின் எண்ணிக்கையைக் கூட்டின.
'காதல்' பத்திரிகைக்கு கவிமணியே ஒரு வாழ்த்துரை வழங்கி இருக்கிறார். பிரபல எழுத்தாளர்கள் மு. வரதராசனார், டாக்டர் ராசமாணிக்கனார், தொ.மு. பாஸ்கர தொண்டமான், கு.அழகிரிசாமி, அகிலன், வல்லிக்கண்ணன், கா.ஸ்ரீ.ஸ்ரீ ஆகியோர் எழுதியிருக்கின்றனர். தி.ஜானகிராமன் எழுதிய 'குளிர்' கதையும் 'காதல்' இதழில் வெளிவந்துள்ளது.
திருச்சியில் இருந்து வெளிவந்த 'காதல்' பத்திரிகை, 1949 முதல் சென்னையிலிருந்து வெளியாகத் தொடங்கியது. அதே ஆண்டில் 'கலைமணி' என்ற சினிமா பத்திரிகையையும், 'மர்மக் கதை' என்ற பத்திரிகையையும் துவக்கினார். 'மர்மக்கதை'யில் சிரஞ்சீவி, மேதாவி, பி.டி.சாமி போன்ற மர்மக் கதை எழுத்தாளர்கள் எழுதினர். 1952-இல் பிரேமா பிரசுரம் என்ற பதிப்பகத்தைத் தோற்றுவித்து, நூல்களை குறைந்த விலையில் பதிப்பித்தார்.
அதில் 'சிந்தனையாளர் வரிசை' சிறந்த வரவேற்பைப் பெற்றது. ராஜராஜ சோழன், அசோகன் காதலி, வீரபாண்டியன் மனைவி, குண்டு மல்லிகை, சுந்தரரின் பக்தியும் காதலும், வெற்றிவேல் வீரத்தேவன், பழையனூர் நீலி, நாயனம் செளந்தரவடிவு உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். பிளேட்டோ, பெஞ்சமின் பிராங்க்ளின் உள்ளிட்டோரின் நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
ஸ்ரீ விநாயக புராணம், ஸ்ரீ தேவி பாகவதம், ஸ்ரீ சிவ மகா புராணம், போன்ற பல புராண நூல்கள், விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராஜன் கதைகள், வீரபாண்டிய கட்டபொம்மன் , ராணி மங்கம்மாள் போன்ற வரலாற்று நூல்களை எழுதினார். தமிழ், ஆங்கில இலக்கியம், வரலாறு, தத்துவம், உளவியல் போன்ற துறைகளை அவர் முறையாகக் கல்லூரியில் படித்ததில்லை என்றாலும் சுயவாசிப்பின் மூலம் அவற்றில் வியக்கத்தக்க ஞானத்தைப் பெற்றிருந்தார்.
1945-இல் பரிசு பெற்ற 'ராஜராஜ சோழன்' நாடகம், 1955-இல் திருநெல்வேலியில் அரங்கேற்றப்பட்டதுடன், நூலாகவும் பதிப்பிக்கப்பட்டது. இந்த நாடகம் சிவாஜி கணேசன் நடிக்க 'ராஜராஜ சோழன்' என்ற பெயரிலேயே தமிழின் முதல் அகன்ற திரைப்படமாகவும் வெளியானது. இதற்கு அரு. ராமநாதனே கதை வசனமும் எழுதினார்.
1967-இல் அன்றைய முதல்வர் அண்ணாவிடம் 'கலைமாமணி' விருதை பெற்றார்.
தீர்க்கமாக தனது கருத்துகளை வன்மையாக வெளிப்படுத்தும் எழுத்தாளராகவும், முழுமையான பத்திரிகை ஆசிரியராகவும், சிறந்த பதிப்பாளராகவும் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட அரு. ராமநாதன், திரைத் துறையில் ஒரு சிறந்த வசனகர்த்தாவாகவும் விளங்கினார்.
பூலோக ரம்பை, அமுதவல்லி, கற்புக்கரசி, கல்யாணிக்கு கல்யாணம், ஆரவல்லி சூரவல்லி, தங்கப் பதுமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கதை- வசனம் எழுதியுள்ளார்.
1974 அக்டோபர் 18-இல் அரு.ராமநாதன் மறைவுற்றார். உயரிய நோக்கத்துடன் அரு. ராமநாதனால் துவங்கப்பட்ட பிரேமா பிரசுரம், அவரது சந்ததியினரால் இன்றும் செயல்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
