

நெற்றி நிறைய திருநீர், கழுத்தில் ருத்திராட்ச மாலை, வெள்ளைச் சட்டை, காவி வேட்டி, தலையில் பச்சைத் துண்டு, தலைப் பாகை, கையில் விசிறியுடன் சைக்கிளில் வலம் வருகிறார் 'விசிறி சாமியார்' என்கிற முருகன்.
தஞ்சாவூர் சக்காநாயக்கன் தெருவைச் சேர்ந்த இவருக்கு எழுபத்து மூன்று வயதாகிறது. ஆனாலும், கோயில் விழாக்கள், ஆன்மிகக் கூட்டங்கள், அரசியல் கட்சிக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டக் களத்திலும் முதல் ஆளாய் நிற்பார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு மலர் தூவி, பச்சைத் துண்டை அணிவித்து, பிரார்த்தனை செய்து, தனது கையிலுள்ள விசிறியால் சில நிமிடங்களுக்கு விசிறியும் விடுவார். சுற்றியுள்ளவர்களுக்கு தானிய மிட்டாய்களை வழங்கி, இறுதி வரை பங்கேற்பார்.
இருபத்து ஐந்து ஆண்டுகளாகச் செய்து வரும் இந்தத் தொண்டு குறித்து விசிறி சாமியார் என்கிற முருகன் கூறியது:
'தஞ்சாவூர் கலைத்தட்டு செய்யும் தொழில், நகைகள் வாங்கி விற்றல் உள்பட சிறு, சிறு தொழில்களைச் செய்து வந்த எனக்கு, 1993-இல் கடன் அதிகமாகிவிட்டது. அப்போது, திருவண்ணாமலையில் விசிறி சாமியார் என்கிற யோகி ராம்சுரத்குமாரை சந்தித்தபோது, அவர் அருளாசி வழங்கினார். தொடர்ந்து அவர் கனவிலும் வந்து ஊக்கப்படுத்தினார்.
எனக்கு அருள்தன்மை கிடைத்ததை உணர்ந்து, 2001-இல் சாமியாராக மாறினேன். அடுத்த சில ஆண்டுகளில் விசிறியும் கிடைத்தது. அது எப்படி, யார் மூலமாக வந்தது எனத் தெரியவில்லை.
அரசியல் கட்சித் தலைவர்கள் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, பொதுமக்கள் சேவைக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்கள் என்பதால், அவர்கள் மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் அதிகம். இதனால், அவர்களுக்குக் கூட்டங்களில் மேடை மீது ஏறி மலர் தூவி, பச்சைத் துண்டு அணிவித்து, விசிறிவிட்டு, பிரார்த்தனையும் செய்வேன். இதை மற்றவர்கள் வாழ்த்துவதாக நினைக்கின்றனர். சேவை செய்யும் அவர்களை ஊக்கப்படுத்தி வணங்குகிறேன் என்பதுதான் உண்மை.
ஒருமுறை சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியார் ஈ.வெ.ரா. பிறந்த நாள் விழாவுக்குச் சென்றேன். நெற்றியில் விபூதி, காவி உடை, ருத்ராட்ச மாலையுடன் வந்த என்னை அங்கிருந்தவர்கள் சந்தேகத்துடன் பார்த்துக் கேட்டனர்.
அவர்களிடம் எனக்கு சிறு வயது முதல் பெரியாரைப் பிடிக்கும் எனக் கூறினேன். அவர்கள் அனுமதித்தவுடன் மேடை ஏறி திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு மலர் தூவி பச்சைத் துண்டு அணிவித்து, பிரார்த்தனை செய்து விசிறிவிட்டேன். தொடர்ந்து, வீரமணி தஞ்சாவூருக்கு வரும்போதெல்லாம் அவருக்கு மலர் தூவி, விசிறிவிடுவதை வழக்கமாகச் செய்து வருகிறேன். அவரும் மறுக்காமல் ஏற்றுக் கொள்வார்.
தொடக்கக் காலத்தில் கம்யூனிஸ்ட் கூட்டத்துக்குச் சென்றபோது, அவர்களும் அனுமதிப்பதற்குத் தயங்கினர். இப்போது அவர்களும் அவர்களது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் என்னை அனுமதித்து வருகின்றனர்.
எந்தக் கட்சியாக இருந்தாலும், சிறு அமைப்புகளாக இருந்தாலும் பாகுபாடு இல்லாமல் கூட்டங்கள், விழாக்கள், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களுக்குச் சென்று, மலர் தூவி, பச்சைத் துண்டு அணிவித்து, விசிறி விடுவதை வழக்கமாக வைத்துள்ளேன். வேறுபாடு இல்லாமல் செய்யும் என்னை எந்தக் கூட்டத்துக்குச் சென்றாலும், மறுப்பு சொல்லாமல், முழு மனதுடன் ஏற்றுக் கொள்கின்றனர்.
இதற்காக ஒரு நாளைக்கு நாற்பது ரூபாய்க்கு மிட்டாய்களும், இருபது ரூபாய்க்கு உதிரிப் பூக்களும் வாங்கிக் கொள்வேன். துளசி, தூதுவளை, வல்லாரை, சுக்கு போன்ற தானிய மிட்டாய்களையும், இருமல் மிட்டாய்களையும் வாங்கிக் கொண்டு வழங்குவேன். முக்கியத் தலைவர்கள் வரும்போது, ரூ. 120
மதிப்புள்ள ஒரு பச்சைத் துண்டு வாங்கிக் கொள்வேன். இந்தத் தொண்டு எனக்கு மன நிறைவாகவும், பேரானந்தமாகவும் இருக்கிறது. அதேசமயம் அருள்வாக்கு, குறி சொல்வதில் எனக்கு விருப்பம் கிடையாது' என்கிறார் விசிறி சாமியார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.