திரைக் கதிர்

காலத்தை வென்ற காவியப் படைப்புகளைத் தந்த கலை ஆளுமையைக் கொண்டாடும் வகையில் இயக்குநர் வெற்றிமாறனின் ஐ.ஐ.எஃப்.சி., சில மாதங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவாளர், இயக்குநர் பாலு மகேந்திராவின் படைப்புகளைக் கொண்டாடியது.
திரைக் கதிர்
Published on
Updated on
2 min read

காலத்தை வென்ற காவியப் படைப்புகளைத் தந்த கலை ஆளுமையைக் கொண்டாடும் வகையில் இயக்குநர் வெற்றிமாறனின் ஐ.ஐ.எஃப்.சி., சில மாதங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவாளர், இயக்குநர் பாலு மகேந்திராவின் படைப்புகளைக் கொண்டாடியது. அதனை தொடர்ந்து இப்போது இயக்குநர் பாரதிராஜாவுக்கான நிகழ்வைக் கொண்டாடவிருக்கிறது. இந்த நிகழ்வு நாளை வரை நடக்கிறது.

இயக்குநர் பாரதிராஜாவின் '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', 'புதிய வார்ப்புகள்', 'நிழல்கள்', 'அலைகள் ஓய்வதில்லை', 'மண் வாசனை', 'ஒரு கைதியின் டைரி', 'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்', 'கிழக்கு சீமையிலே' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. மேற்கண்ட படங்களின் திரையிடலைத் தொடர்ந்து அதில் இடம்பெற்ற திரைக் கலைஞர்கள் பங்கேற்று, பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியை கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்தினர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ' 'இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக இந்திய மகளிர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ஏழு ஆண்டுகளுக்கு முன் அருண்ராஜா காமராஜ் 'கனா' படத்தின் மூலம் பெண்களின் கிரிக்கெட் உலகம் குறித்துப் பேசியிருந்தார். எங்கள் எஸ். கே. புரொடக்ஷன் நிறுவனத்தின் முதல் திரைப்படமாகவும் இருந்தது.' எனத் தெரிவித்துள்ளார்.

'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' மற்றும் 'என் ஆளோட செருப்ப காணோம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன், உண்மைச்சம்பவத்தைத் தழுவி எழுதி இயக்கும் திரைப்படம் 'ரோஜா மல்லி கனகாம்பரம்'. இப்படத்தில் கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

தேசிய விருது பெற்ற எம். எஸ் .பாஸ்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். 'ரோஜா மல்லி கனகாம்பரம்' படத்தில் மூன்று கதைகள் நேர்க்கோட்டில் பயணிப்பது தான் திரைக்கதையின் சுவாரஸ்யம். ஒவ்வொரு கதைக் களத்துக்கும், ஒரு பாடல் என்ற விதத்தில் மூன்று பாடல்களும், மூன்று கதைகளையும் இணைக்கும் இடத்தில் நான்காவதாக ஒரு பாடலும் இடம் பெறுகிறது. பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் நிறைந்த படமாக இது இருக்கும்' என்றார் இயக்குநர்.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் 'கும்கி'. 13 வருடங்களைக் கடந்தும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அப்படத்தின் மையத்தை வைத்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகிறார். ஓர் இளைஞன் மற்றும் ஒரு யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றியும், அன்பைப் பற்றியும் இப்படம் பேசவுள்ளது.

இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா மென்மையான மெலடி மற்றும் மயக்கும் குரலில், பாடலாசிரியர் மோகன் ராஜின் அற்புத வரிகளில், வெளியாகியுள்ள 'பொத்தி பொத்தி உன்ன வச்சு' பாடல், ஒரு சிறுவனுக்கும் யானைக்குமான உறவை, அன்பை, அழகாக வெளிப்படுத்துகிறது. ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் அவர்களின் கண்களை குளுமையாக்கும் காட்சிகளும், நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, யானையோடு விளையாடும் சிறுவனின் கள்ளம் கபடமற்ற அன்பு, இயற்கை எழில் கொஞ்சும் காடு என, இப்பாடல் மனதைக் கொள்ளை கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com