சிட்டுக்குருவிகளைக் காப்போம்!

'பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு முக்கியக் காரணமான சிட்டுக்குருவிகள், வயல்வெளிகளில் தானியங்களை உண்ணும்.
சிட்டுக்குருவிகளைக் காப்போம்!
Published on
Updated on
2 min read

சமாத்மிகா

'பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு முக்கியக் காரணமான சிட்டுக்குருவிகள், வயல்வெளிகளில் தானியங்களை உண்ணும். வெட்டுக்கிளி, கம்பளிப்பூச்சி உள்ளிட்ட பூச்சிகளைத் தின்று பயிர்களைப் பாதுகாக்கும். மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். இதனால் 'உழவர்களின் நண்பன்' என்பார்கள். 'உள்ளூர் குருவி', 'மனையுடை குருவி', 'உள்ளறை குருவி', 'அடைக்கலத்தான் குருவி' என்றெல்லாம் அழைக்கப்படும் இவை மனிதர்களை நம்பி வாழ்பவை.

'சிட்டுக்குருவி'களைப் புகழாதவர்கள் இல்லை. இவை வீட்டுக்குள் வந்தால் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும். அதன் இனிமையான சத்தம் வீட்டுக்குள் இருக்கும் எதிர்மறைச்சக்தியை குறைக்கும் என்பது சித்தர் வாக்கு. அதன் எச்சம் துர்நாற்றம் வீசுவதில்லை. மனிதர்களை நம்பி வாழும் சிட்டுக்குருவிகளைக் காப்பது நம் கடமை'' என்கிறார் சிட்டுக்குருவிகளின் நேசர் 'கிரிக்கெட்' மூர்த்தி.

திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி, புள்ளியியல் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2006 முதல் பொதுச் சேவையில் ஈடுபட்டு வருகிறார். கிரிக்கெட் போட்டிகளை நடத்தி, விழிப்புணர்வு கருத்துகளைச் சொல்லி வந்ததால், 'கிரிக்கெட் மூர்த்தி' என்றே அழைக்கப்படுகிறார்.

அவரிடம் பேசியபோது:

'கடந்த 40 வருடங்களில் 60 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். பள்ளி மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தைப் பேசுவதோடு, போட்டிகளை

நடத்திவருகிறேன். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுப் பதாகைகள் சுமார் ஆயிரம் எண்ணிக்கையில் சொந்தமாக எழுதி வைத்துள்ளேன் .

2023 ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில், தாமிரவருணி ஆற்றில் பக்தர்களால் போடப்பட்ட பரிகாரத் துணிகள் சுமார் 100 டன் அளவுக்கு அகற்றினோம். 2024, மே 5இல் தொடங்கி 21 நாள்கள் தாமிரவருணி ஆற்றில் தூய்மைப் பணி நடைபெற்றது.

கிணறுகளைச் சுற்றி தேங்கியுள்ள கழிவுகளை அகற்று

கிறேன். நீரை சுத்தம் செய்யும் தாவரங்களை பதியம் இட்டு வளர்த்து நதிக்கரையோரங்களில் நட்டு வைத்து வருகிறேன். கரையோர மரங்களின் வேர்ப்பகுதியில் படிந்துள்ள கசடுகள், குப்பைகளை அகற்றி ஏராளமான மரங்களைக் காப்பாற்றியுள்ளேன்.

சிட்டுக்குருவிகள்:

ஒருமுறை வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, சிட்டுக்குருவி ஒன்று வீட்டுக்குள் வந்துவிட்டது. அதைக் கவனித்த என் மனைவி ஒரு கூடு செய்து வீட்டில் வெளியே தாழ்வாரத்தில் தொங்கவிட்டாள். சில நாள்களில் குருவி அதில் தங்கிவிட்டது. இதனால் எங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு நிறைய கூடுகளைச் செய்து வைத்தோம். குருவி

களால் வீடு நிறைந்தது. இதைப் பார்த்தோர் கூடுகள் வாங்கி வளர்க்க ஆரம்பித்தனர். ஏழு ஆண்டுகளில் 8 ஆயிரம் கூடுகளை நானே தயாரித்து வழங்கியுள்ளேன்.

சிட்டுக்குருவிகள் குறைவதற்கு வாழ்விடங்கள் குறைந்ததும், உணவுப் பற்றாக்குறையுமே முக்கியக் காரணங்களாகும். எனவே, சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளை வீடுகளில் வைத்து, வளர்க்கலாம். கூட்டை மேற்கூரை உள்ள தாழ்வாரத்திலோ, நிழற்கூரையிலோ தொங்கவிடலாம். அடுக்குமாடிக் குடியிருப்பு எனில் பால்கனியில் வைக்கலாம். ஏழாவது மாடியில் வைத்தால் குருவிகள் பொதுவாக அவ்வளவு தூரம் பறப்பது இல்லை. தினை, கம்பு, ராகி, குருணை, சோறு போன்றவற்றை அவை விரும்பி உண்ணும்.

வீடுகளின் அருகேயுள்ள மரங்களில் கூடு வைக்க வேண்டாம். ஏனெனில், மழை பெய்தால் கூடுகள் நனைந்து விடும் என்பதால், குருவிகள் அதை விரும்புவதில்லை. மேலும் பாம்புகள் வரக்கூடும். பூனைகள் இருக்கும் இடத்தில் குருவிகள் வருவது கடினம். குருவிகள் கூடு இருக்கும் அருகில் துணிகள் காயப் போடலாம்.

மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 13 ஆண்டுகள் வாழும். மிக உயரமாகப் பறக்காது. வீட்டுக்குள் இருக்கும் சிறு பூச்சிகளைத் தின்று அழித்துவிடும். ஒரு நாளைக்கு 30 பூச்சிகள் வரை உண்ணும். எண்ணெய் சேமித்து வைத்த அட்டைப்பெட்டிகளை அவை விரும்புவதில்லை. பிஸ்கட் அட்டை பெட்டியில் செய்த கூண்டு என்றால் விரும்பித் தங்குகின்றன'' என்கிறார் 'கிரிக்கெட்' மூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com