செயல்திறனுக்கு அங்கீகாரம்!

சென்னையில் அண்மையில் நடைபெற்ற 'நான் முதல்வன் நிரல் திருவிழா 2.0 செயல்திறன் போட்டி'யில் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தினர்.
செயல்திறனுக்கு அங்கீகாரம்!
Published on
Updated on
1 min read

பொ.ஜெயச்சந்திரன்

சென்னையில் அண்மையில் நடைபெற்ற 'நான் முதல்வன் நிரல் திருவிழா 2.0 செயல்திறன் போட்டி'யில் கலந்துகொண்டு, புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரி மாணவியரான ஜி.அகிலா, ஏ.பிரியதர்ஷினி, ஜி.கலையரசி, ஆர்.ஜெயபாரதி ஆகியோர் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியது:

'பல்வேறு ஆய்வு சார்ந்த கருத்தரங்கங்களில், படைப்புகளை உருவாக்கிப் பரிசுகளைப் பெற்றுள்ளோம். 'நான் முதல்வன் திட்டத்தில் நிரல் திருவிழா 2.0' போட்டியில் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என்ற தகவல் கிடைத்தவுடன், கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன், முதல்வர் சரவண.திலகவதி ஆகியோரிடம் இதுகுறித்து தெரிவிக்க, அவர்கள் எங்களை ஊக்குவித்தனர்.

சுற்றுச்சூழலுக்குத் தோழனாக தொழில்நுட்பத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை நோக்கமாக வைத்திருந்தோம். நிறமிகள் எவ்வாறு உருவாகின்றன. இது உருவாக என்னென்ன பொருள்கள் தேவைப்படும் என்பதை முதல் சுற்றில் ஆராய்ந்தோம். ஆய்வுக்குத் தேவையான மூலப்பொருள், அதனுடைய பயன்களைத் தொகுத்தோம்.

குறிப்பாக, பசுமை வழியாக வர்ணம் தயாரிக்கும் முறையை எடுத்துக்கொண்டு பரிசோதனை மூலமாக அதன் நீடித்தத் தன்மை, ஒட்டும் திறன், சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைய தன்மையைச் சோதித்தோம். எளிதான தயாரிப்பு, குறைந்த செலவு, பசுமை மாற்று ரசாயனங்கள் என்பதே இதன் சிறப்புகள்.

பின்னர் தேவையான பொருள்களை கால அளவுகளின்படி, எல்லாவற்றிலும், சம அளவு எடுத்து நிறமிகள் செய்ய ஆரம்பித்தபோது, எண்ணியபடியே கிடைத்தன. ஆயிரம் குழுக்கள் கலந்துகொண்ட பட்டியலில் முதல் 150 இடங்களைத் தேர்வு செய்தனர். அதில் எங்களுக்கும் இடம் கிடைத்தது.

அடுத்ததாக, தொழிற்சாலைக் கழிவுகளைக் குறைப்பதும், அதனை மறுசுழற்சி செய்து மேம்படுத்தவும் என்ற கூற்றை தேர்வு செய்தோம். அதற்குத் தீர்வு காணும் வகையில், கழிவுப் பொருள்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க முடிவு செய்தோம். மாட்டுச்சாணம், சாம்பல்,

இ பிளாஸ்டிக் வேஸ்ட்டை மூலப்பொருள்களாகக் கொண்டு, கட்டுமானப் பணிகளில், முதன்மை வேலையாக விளங்கும் வர்ணப் பூச்சைத் தயாரித்துள்ளோம். வீணாகும் பொருள்களை பெருமளவில் மறுசுழற்சி செய்வதன் மூலம் கழிவுகளை அதிக அளவில் சேராமல் குறைக்க முடியும். இதனால் புது பொருளைத் தயாரித்து, மக்களுக்குத் தரமுடியும். ரசாயனம் இல்லாத வர்ணப்பூச்சை சுற்றுச் சூழலுக்குத் தீங்கு இல்லாதவாறு வழங்க முடியும்.

திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இடைச்சுற்றில் 150 குழுக்களில் முதல் 15 இடங்களுக்குள் வந்தோம்.

சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற இறுதிச் சுற்றில், 15 குழுக்களையும் தேர்வு செய்து, செயல்திறன் படைப்பு சார்ந்த அரங்குகள் நடைபெற்றது. இந்த அரங்கை முதல்வர்

மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பார்வையிட்டனர். அப்போது அதுசார்ந்த விளக்கங்களைக் கூறினோம்.

வரும் காலங்களில் மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இது ஓர் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com