

தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி பாணி இசையை உருவாக்கி விட்ட அனிருத், இப்போது பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். ஷாருக்கானின் 'ஜவான்' வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவரின் 'கிங்' படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
தமிழிலும் ரஜினியின் 'ஜெயிலர் 2', விஜய்யின் 'ஜனநாயகன்', சிலம்பரசனின் 'அரசன்' என டாப் ஹீரோக்களின் படங்களில் பிஸியாக உள்ளார். அனிருத்தின் இசைப் பயணத்தில் இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல். ரஜினியின் 'கூலி', அஜித்தின் 'விடாமுயற்சி', சிவகார்த்திகேயனின் 'மதராஸி', விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' எனக் கலக்கியிருக்கிறார். அடுத்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கு இசையமைக்கிறார்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷனை கதாநாயகனாக வைத்து அவர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு 95 சதவிகிதம் முடிந்துவிட்டதாம். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். படத்துக்கு 'சிக்மா' எனத் தலைப்பிட்டுள்ளனர்.
இத்திரைப்படம் குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய், 'சமூகத்தால் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாத ஒருவன் தன் இலக்குகளை நோக்கி நகரும் விஷயங்களை இந்தப் படம் பேசும். ஆக்ஷன், த்ரில்லர், காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும்.
தமனின் துடிப்பான இசையும் சந்தீப் கிஷனின் திறமையான நடிப்பும் லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு இது மறக்க முடியாத படமாக இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படத்தின் முன்னோட்ட வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து, அதன் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருந்தது. சமீபத்தில் நடந்த 'மாஸ்க்' பட விழாவில், ''வரும் 24ஆம் தேதி 'அரசன்' படப்பிடிப்பு தொடங்குகிறது' என இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துவிட்டதில் சிம்புவின் வட்டாரம் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
கடந்த அக்டோபரில் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக 'அரசன்' படத்தின் புரொமோ வீடியோ வெளியானது. அதில் இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு வித கெட்டப்களில் இருந்த சிலம்பரசனின் தோற்றம் வரவேற்பை அள்ளியது.
சேரன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆட்டோகிராஃப்'. 21 வருடங்களுக்குப் பிறகு அத்திரைப்படம் ரீரிலீஸாகியுள்ளது. பெரியளவில் கவனம் ஈர்த்த இத்திரைப்படம், காதல் திரைப்படங்களுக்கு இன்று வரை ஒரு 'பெஞ்ச்மார்க்' என்றே சொல்லலாம்.
நடிகை கோபிகா பேசுகையில், ''ஆட்டோகிராஃப்தான் என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். எப்போதுமே, அப்படத்தின் லத்திகா கதாபாத்திரம் என்னுடைய ஃபேவரைட். நான் சேரனுக்கு எப்போதுமே நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து லத்திகா கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த குழுவுக்கும் நன்றி. இப்படியான பெரிய திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததை எண்ணி எப்போதும் பெருமைகொள்வேன்' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.