உலகின் தென் பகுதியில் 60 டிகிரி அட்ச ரேகைக்குக் கீழே அமைந்துள்ள நீர்ப் பகுதியே 'தென்முனைப் பெருங்கடல்' அல்லது 'அண்டார்டிக் பெருங்கடல்' ஆகும். பசிஃபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல்களைவிட சிறியது. ஆனால், ஆர்க்டிக் கடலைவிடப் பெரியது.
முதலில் இது மற்ற மூன்று கடல்களின் பகுதியாகக் கருதப்பட்டது. 1770-இல் ஜேம்ஸ் குக்கின் கடல் பயணத்துக்குப் பிறகு அண்டார்டிக் பெருங்கடல் தனிப் பெயர் பெற்றது. இது அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றி அகழி போல் அமைந்துள்ளது.
வடபுறம் மூன்று கடல்களிலிருந்து வரும் வெப்ப நீரும் தென்புறத்தில் அண்டார்டிகா கண்டப் பகுதியிலிருந்து வரும் குளிர் நீரும் கலக்கும் இந்தப் பகுதியை 'அண்டார்டிகா ஒருங்கிணைப்புப் பகுதி' அல்லது 'குவிமையம்' என்பர். இந்தப் பகுதி ஒரே ரேகையில் இல்லாமல் சுமார் 30-இல் இருந்து 50 கி.மீ. வரை ஒரு இடுப்புப்பட்டை போன்ற பரப்பளவாகும். பருவகாலத்துக்குத் தகுந்தபடி குறைந்தோ அல்லது அகலமாகவோ காணப்படும்.
10 ஆயிரம் உயிரினங்களுக்கு அடைக்கலம்:
இந்தப் பகுதியின் வடபுறத்தில் நீரின் வெப்ப அளவு சுமார் 6 டிகிரியும், தென்புறத்தில் நீர் வெப்ப அளவு சுமார் 2 டிகிரி வரையும் இருக்கலாம். தென்புறத்தில் அதிக அளவு நீரோட்டம் உண்டு. அதிவேகமான ஊதல் காற்று கடலில் சலனத்தை உண்டு செய்து, நீருக்கு அடியில் உள்ள உயிரினங்களையும் வாழச் செய்வதோடு, பல ஊட்டச் சத்துகளையும் உருவாக்குகிறது. இதனால், கடற்பாசி, நுண்ணுயிர்கள், சிறு மீன்கள், 'கிரில்' எனப்படும் பிரான் போன்றவை செழித்து வளர்கின்றன. இவை அனைத்தும் பெங்குவின்கள், சீல்கள் போன்றவைகளுக்கும், பெட்ரல், ஆல்பெட்ராஸ் போன்ற பறவைகளுக்கும் உணவாகின்றன. இவ்வாறாக அண்டார்டிக் பெருங்கடல் சுமார் 10 ஆயிரம் துருவப் பகுதி உயிரினங்களுக்கு அடைக்கலம் தருகிறது. இந்தப் பகுதி வளிமண்டலத்திலிருந்து வெப்பத்தையும் கரியமில வாயுவையும் கூடிய அளவு கிரகித்துக் கொள்கிறது. அதன் நீரோட்டமும் பருவகாலப் பனியும் மேலும் புவியின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் சக்தியாகவும் உள்ளன.
புவிவெப்பமயமாகு தலால் ஏற்படும் விளைவுகள்:
புவி வெப்பமயமாகும்போது முப்பெருங்கடல்களின் நீரின் வெப்பநிலை உயருகிறது. அந்த நீர் அண்டார்டிகா பெருங்கடலின் வெப்பநிலையையும் பாதிக்கிறது. எனவே கண்டத்தைச் சுற்றியுள்ள பனி உருகுகிறது. மிதக்கும் பனிப்பாறைகளும் உருகி கடல் நீருடன் கலக்கிறது. கண்டத்தின் விளிம்பில் சுவர் போன்று அமைந்துள்ள பனிச்சுவர்களின் சில பகுதிகளும் உருகிப் பெயர்ந்து கண்டத்தைவிட்டு விலகுகின்றன. புவியிலிருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு அளவு ஆண்டுதோறும் துரதிஷ்டவசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புவி நிலப்பகுதிகளின் இத்தகைய சூழ்நிலை பாதிப்பால் கடல் நீர் சற்றே அமிலத் தன்மையையும் எய்துகிறது. இந்த அமில நீரும் தென்முனைப் பெருங்கடல் நீருடன் கலக்கிறது. எனவே அங்குள்ள கடல் வாழ் உயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
பெங்குவின்களுக்கு ஆபத்து:
இங்கு 18 வகை பெங்குவின்கள் உள்ளன. இவற்றில் 11 வகை இனங்கள் குறைந்து வருகிறது. அடிலே, சிண்டிராப், கிங், எம்பரர் போன்ற வகை பெங்குவின்கள் கண்டத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.
பொதுவாக, அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றியுள்ள கடற்பகுதி குளிர்காலத்தில் உறையத் தொடங்கி, கண்டத்தின் பரப்பளவை அதிகரிக்கிறது. அந்தப் பகுதி சற்றே மெல்லிய தகடு போல் நீண்ட தூரம் கடல்நீரை மூடியிருக்கும். அது கீழே நீர்ப் பகுதியில் உள்ள கடற்பாசி, நுண்ணுயிர்கள், கிரில் போன்றவற்றுக்குப் பாதுகாப்பையும் அளிக்கிறது. அதன் மேற்புறத்தை தரையாய் எம்பரர் பெங்குவின்கள் இனப்பெருக்கத்துக்கும் பிறந்த குஞ்சுகளை சில மாதங்கள் வளர்க்கவும் பயன்படுத்துகிறது.
புவி வெப்பமாகும்போது இந்தச் சூழ்நிலை மாறுகிறது. பெங்குவின்களின் இனப்பெருக்கத்துக்குத் தடங்கல்கள் ஏற்படுகின்றன. நீருக்கு அடியில் பெருகும் நுண்ணுயிர்கள் வளர்ச்சிக்கும் சிக்கல்கள் உண்டாகின்றன.
அண்டார்டிகா கண்டத்தையும் உலகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிளாஸ்டிக், எண்ணெய் போன்றவை கடலில் கொட்டுவதும் தடுக்கப்படுகின்றன. தாதுக்களுக்காக வெட்டுதல், தோண்டுதல் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன.
-முனைவர் ஜி.குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.