நெஞ்சினிலே... நெஞ்சினிலே...

சென்னை வடபழனியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்தது ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம்.
நெஞ்சினிலே... நெஞ்சினிலே...
Published on
Updated on
3 min read

சென்னை வடபழனியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்தது ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம். இங்கு 2020-ஆம் ஆண்டில் திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்ட நிலையில், அந்தத் திரையரங்க வளாகம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமானங்களுக்குத் தயாராகி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் குறித்த நினைவலைகளை ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் நிறுவனத் தலைவர் ஏவி.எம்.குமரன் பகிர்ந்துகொள்கிறார்:

''ஏவி.எம் நிறுவனரும், தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவருமான எங்கள் தந்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் சென்னைக்கு வருவதற்கு முன்பாக காரைக்குடியில் 'சரஸ்வதி டாக்கீஸ்' என்ற திரையரங்கை நடத்தியிருக்கிறார். ஏவி.எம் ஸ்டூடியோஸ், ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றை அவர் தொடங்கியவுடன், சென்னையில் திரையரங்கம் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில், 1970-களின் பிற்பகுதியில் ஏவி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கப் பணிகளைத் தொடங்கினார்.

ஸ்டூடியோ வளாகத்தில் இருந்த வடபழனி அச்சகத்தின் வியாபாரம் குறைந்து போகவே, அதனை சிறியதாக்கி வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, அச்சகத்தின் பைண்டிங் பிரிவு இருந்த இடத்தில் திரையரங்கம் கட்டுவதற்கு முடிவு செய்தார். அவர் திரையரங்கம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்த இடம் அப்போது சென்னை மாநகர எல்லைக்குள் இல்லை. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்டிருந்தது.

திரையரங்கின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது, அவர் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் அசாத்தியமானது. தினமும் கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிடுவார். அங்கேயே தனக்குரிய மேஜையில் அமர்ந்து கொண்டு அனுபவ அறிவின் அடிப்படையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார். கட்டுமானப் பகுதியில் நிலவிய தூசால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. திரையரங்கைக் கட்டி முடிப்பதற்கு முன்னரே நிமோனியா நோய் காரணமாக அவர் மறைந்துவிட்டார்.

1979-இல் கடைசியில் அவர் இயக்கிய படமான 'ஸ்ரீ வள்ளி'யைத் திரையிட்டு ஏவி.எம் ராஜேஸ்வரி திரையரங்கைத் தொடங்கினோம். அந்தப் படத்தில் விநாயகருக்கு எங்கள் தந்தை குரல் கொடுத்திருந்தார். அவர் மறைந்துவிட்ட சூழ்நிலையிலும், குரல் ஒலிக்க முதல் படம் திரையிடப்பட்டது எங்களுக்கு நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

அடுத்து முதல் படமாக, 'ஸ்கார்ச்சி' என்ற அமெரிக்க கிரைம் திரில்லர் படத்தைத் திரையிட்டோம். அந்தப் படம் சுமாரானது என்றாலும், 25 வாரங்கள் ஓடி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 'முரட்டுக்காளை, 'சகலகலா வல்லவன்', 'போக்கிரி ராஜா', 'பாயும் புலி', 'பாட்டி சொல்லை தட்டாதே', 'சம்சாரம் அது மின்சாரம்', 'முந்தானை முடிச்சு' உள்ளிட்ட பல்வேறு படங்கள் ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கில் வெள்ளிவிழா கண்டன.

முன்பதிவுக்கும், திரைப்படங்களைக் காணவும் மக்கள் கூட்டமாக ஆர்வத்தோடு காத்திருப்பார்கள். தொடக்கம் முதலே குறைந்த கட்டணத்தில், நிறைவான வசதிகளோடு ரசிகர்கள் படம் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியமாக இருந்தது. எங்களுக்கு வந்த புகார் ஒன்று உண்டு என்றால் அது, திரையரங்கில் ஏ.சி. குளிர்ச்சி ரொம்ப அதிகமாக இருக்கிறது; கொஞ்சம் குறைக்கக் கூடாதா? என்பதுதான்'' என்று நினைவுகூர்கிறார் ஏவி.எம். குமரன்.

ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் நிர்வாக இயக்குநருமான ஏவி.எம். கே. சண்முகம்:

''1987-இல் ஹிந்தி படமான 'மிஸ்டர் இந்தியா' படத்தைத் திரையிட்டோம். அது 100 நாள்கள் ஓடியது.

ஒருநாள் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தபோது, தான் டால்ஃபி சவுண்டு தொழில்நுட்பத்தில் 'குருதிப் புனல்' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகவும், ஊரில் நிறைய திரையரங்கில் 'டால்பி சவுண்டு' அமைப்பு வசதி இல்லை என்றும் கூறினார். உடனே டால்பி பொறியாளர்களை வரவழைத்து, எங்கள் திரையரங்கில் அந்தத் தொழில்நுட்பத்தை ஏற்படுத்தி, 'குருதிப் புனல்' படத்தையும் திரையிட்டோம்.

'சிகப்பு ரோஜாக்கள்' படம் வந்தபோது டி.டி.எஸ்.க்கு ஏவி.எம். ராஜேஸ்வரி மாறியது. பின்னர், 'பேரழகன்' படத்தின் மூலம் டிஜிட்டல் திரையிடல் தொடங்கியது.

ஹாலிவுட் நிறுவனங்களான 'ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்', 'வார்னர் பிரதர்ஸ்' ஆகியவற்றுடனான எங்களுக்கு நல்லுறவு இருந்தது. 1996-இல் 'டிவென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்' நிறுவனத்தில் இருந்த ரங்கநாதன், ஏற்கெனவே சென்னையில் வெளியாகி சுமாராக ஓடிக்கொண்டிருந்த 'பிரேவ் ஹார்ட்' படத்தை எங்கள் திரையரங்கில் திரையிடுமாறு கேட்க, நாங்களும் திரையிட்டோம். அந்தப் படம் அந்த வருட ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும், அது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்தப் படத்தைக் காண ஏவி.எம். ராஜேஸ்வரிக்கு ரசிகர்கள் வருகை தந்து பெரும் வெற்றியை அளித்தார்கள். ஒரு மாதத்துக்கு 'ஹவுஸ் ஃபுல்' ஆக ஓடியது.

1997 தீபாவளியின்போது மீண்டும் ரங்கநாதன் எங்களிடம் வந்து, 'தென்னிந்தியாவின் அனைத்து விநியோகஸ்தர்களுக்காகவும்

ஏவி.எம். ராஜேஸ்வரியில் ஒரு ஹாலிவுட் படம் திரையிட விரும்புகிறோம்'' என்றார். மகிழ்ச்சியோடு சம்மதித்தோம். ஒருநாள் காலைக் காட்சியாகத் திரையிடப்பட்ட அந்தப் படம் பின்னர் ரிலீஸôகி, ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கில் ஒன்பது மாதங்கள் ஓடி, வசூலிலும் சரித்திரம் படைத்தது. அந்தப் படம்தான் டைட்டானிக்.

நாங்கள் ஏற்பாடு செய்த வெற்றி விழாவில் ஹாங்காங்கிலிருந்து 'ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்' நிறுவன அலுவலர்கள் சென்னைக்கு வந்து பங்கேற்றார்கள். அன்று உச்சத்தில் இருந்த பிரஷாந்த், சிம்ரன் ஆகியோர் அதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதே போல, 'ஸ்டார் வார்ஸ்' படமும் நீண்ட காலம் ஓடியது.

சிவசக்தி பாண்டியன் தயாரித்த 'காதல் கோட்டை', 'காலமெல்லாம் காதல் வாழ்க' ஆகிய இரண்டு படங்களும் தலா ஒரு வருடம் ஓடி, ஒரே தயாரிப்பாளரின் படங்கள் தொடர்ந்து இரண்டு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியதற்கான சாதனையையும் ஏவி.எம். ராஜேஸ்வரி புரிந்துள்ளது.

2006-இல் ஆண்டில் தமிழில் பெயரிடப்படும் படங்களுக்கு வரிவிலக்கை அறிவித்தது திரையுலகத்துக்குப் பேருதவியாக இருந்தது. அதற்குப் பிறகு மாற்றம் அடைந்த திரைப்பட திரையிடல் முறைகள், உயர்ந்துவிட்ட செலவுகள், வரிவிதிப்பு முறைகள், மக்களை திரையரங்குக்கு ஈர்க்கக் கூடிய வகையிலான திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்தது எனப் பல்வேறு காரணங்களால் ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டாலும், அதன் நினைவுகள் எங்கள் குடும்பத்தினரின் மனங்களில் மட்டுமல்லாது அனைத்து திரையுலகத்தினர், ரசிகர்களின் நெஞ்சங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்'' என்கிறார் ஏவி.எம். கே.சண்முகம்.

-எஸ். சந்திரமெளலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com