இடைவிடாமல் 1981-ஆம் ஆண்டு முதல் படித்து வரும் பேராசிரியர் வி.என். பார்த்திபன், இதுவரை 140 பட்டங்களைப் பெற்றுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இவர், முதல் பட்டம் பெறும்போது நல்ல மதிப்பெண்களுடன் தேற முடியவில்லை.
'கல்வியைச் சேகரிக்க வேண்டும்' என்று முடிவெடுத்து அவர் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார். தற்போது அவரது முகவரி அட்டையில் பெயருக்குப் பின்னால் 140 பட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அவர் கூறியது:
''முதல் பட்டம் பெறும்போது உயர்ந்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. எனது தாயார் மனம் உடைந்தார். அதனால் வருத்தமுற்று நான் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தேன். 'விரைவில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெருமைப் படுத்துவேன்' என்று தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்தேன். ஒரு மகனின் வாக்குறுதியாகத் தொடங்கியது நாற்பது ஆண்டுகால தேர்வுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்று மாரத்தான் கல்வி ஓட்டமாக மாறியது.
தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கூட பார்க்க மாட்டேன். கல்வியைச் சுவாசித்து வந்த நான் பட்டங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் தேர்வுகளை எழுதிக் கொண்டிருப்பேன். ஒரே நேரத்தில் பல பட்டங்கள் படிக்க அனுமதிக்கும் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர்ந்தேன். அதனால்தான் அடுக்கடுக்காகப் பட்டங்களைப் பெற முடிந்தது.
சட்டம், வணிகம், பத்திரிகை, கணினிப் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் பட்டங்களைப் பெற்றேன். பொருளாதாரம், பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், சட்டம் ஆகியவற்றில் பல முதுகலைப் பட்டங்களுடன், நம்பமுடியாத அளவுக்கு 12 ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைப் பெற்றுள்ளேன். நான்காவது முனைவர் பட்டம் பெற முயன்று வருகிறேன்.
சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பாடங்களைக் கற்பித்து வருகிறேன். நான் ஆக்சுவேரியல் சயின்ஸில் தோல்வியடைந்தும் உள்ளேன்.
எனது வெற்றிக்குக் காரணம் என் மனைவி. 9 பட்டங்களைப் பெற்ற அவர், வங்கிப் பணியில் இருக்கிறார். எங்கள் இரண்டு குழந்தைகளைக் கவனித்துக் கொள்கிறார். எனது தினசரி கால அட்டவணையானது ரோபோவையும் சோர்வடையச் செய்யும். காலை 5 மணிக்கு எழுந்து இரவு 10 மணி வரை பல்வேறு கல்லூரிகளில் கற்பித்து, இதற்கிடையில் எனக்காகப் படிக்கவும் செய்கிறேன். படிப்பதும் படிப்பிப்பதுமே எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகள்.
கற்பதுடன், கற்பிப்பதுடன் நான் ஏழு புத்தகங்களையும் எழுதியிருக்கிறேன். ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளேன். நண்பர்களையும், அறிமுகமாகிறவர்களையும் மேலும் படிக்க ஊக்கப்படுத்துகிறேன்'' என்கிறார் பார்த்திபன்.
-பிஸ்மி பரிணாமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.