ஏழையின் நடனத்தில் இறைவனைக் காணலாம்!

குழந்தைகளால் நான் பெற்ற மகிழ்ச்சி ஏராளம் என்கிறார் பார்வதி ரவி கண்டசாலா.
ஏழையின் நடனத்தில் இறைவனைக் காணலாம்!
Published on
Updated on
2 min read

''ஆரம்பத்தில் தயங்கித் தயங்கி என்னிடம் சேர்ந்த ஏழைப் பிள்ளைகள் நடனத்தில் சிறந்து விளங்கி மேடையில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். இப்படி என்னை அழ வைத்த பிள்ளைகள் ஏராளம். 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்' என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட கலையை அவர்கள் வெளிப்படுத்தும் போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதற்குத் தான் இந்தப் பிறவி எடுத்தோம் என்று தோன்றும்'' என்கிறார் பார்வதி ரவி கண்டசாலா.

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் கண்டசாலாவின் மருமகளான இவர், சென்னை தேனாம்பேட்டை போயஸ் சாலைப் பகுதியில், 'கலா பிரதர்ஷினி' என்கிற நடனப்பள்ளியை நடத்தி வருகிறார்.

'கலைமாமணி', 'நாட்டிய கலாரத்னா', 'நாட்டிய செல்வம்', 'நாட்டிய பத்மம்', 'சங்கீத நாடக அகாதெமி விருது' உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற இவர், இவர் தனது நடனப் பள்ளியில் பணம் கட்ட இயலாத ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாக நடனம் கற்றுத் தருகிறார்.

அந்த அனுபவம் குறித்து அவர் கூறியது:

''நானே நடனம் கற்றுக் கொள்ளத் தயங்குகிற குடும்பத்தில் இருந்து வந்தவள்தான். எங்கள் குடும்பத்தின் அனுமதியின்பேரில், 1978-ஆம் ஆண்டு முதல் ஆடத் தொடங்கினேன். பின்னர், பிறருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நடனப் பள்ளியைத் தொடங்கினேன். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

நடனப்பள்ளி ஆரம்பித்த சமயத்தில், நாங்கள் நடனம் கற்றுக் கொடுப்பதை பூ விற்கும் ஒரு அம்மா ஏக்கத்தோடு பார்த்தார். 'பார்க்க உள்ளே விடுவீர்களா?' என்று கேட்டவர், 'இப்படி எங்கள் பிள்ளைகளும் கற்றுக் கொள்ளமுடியுமா?' என்று அவர் தன் ஆசையை வெளிப்படுத்தினார். 'உங்கள் பிள்ளைக்கு உண்மையில் ஆர்வம் இருந்தால் நான் கற்றுக் கொடுக்கிறேன்' என்றேன். 'எங்களுக்குப் பணம் கட்ட முடியாதே!' என்றார். 'அதைப் பற்றிக் கவலை இல்லை. பக்தி, ஒழுக்கம், கட்டுப்பாடு இவைதான் எனக்குத் தேவை. பணம் நீங்கள் கொடுக்க வேண்டாம். சொல்கிறபடி கற்றுக் கொள்ள ஆரம்பித்தால் போதும், வரச் சொல்லுங்கள்' என்றேன்.

அப்படிச் சொல்லிக் கொடுத்தபோது அந்தப் பெண்ணின் குழந்தை கற்பூரம் போல் பற்றி கற்றுக் கொண்டாள். எனக்கு மகிழ்ச்சி. அதற்குப் பிறகு இப்படிப்பட்ட குழந்தைகள் வர ஆரம்பித்தார்கள். அவர்களது பெற்றோர் தயங்கித் தயங்கிக் கேட்கும்போது, நான் அவர்களுக்குத் தைரியம் கொடுத்து, அவர்கள் பிள்ளைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்தேன்.

நான் நடனப் பள்ளியில் வாங்குவதே மிகவும் குறைந்த கட்டணம் தான். முதலில் நான் வாங்கிய கட்டணம் 15 ரூபாய். வசதி இல்லாத பிள்ளைகளுக்கு நான் கட்டணம் வாங்குவதில்லை. அவர்களது ஆர்வத்தைத்தான் எனக்குக் கட்டணமாக நான் நினைப்பேன். அப்படிக் கற்றுக் கொண்டவர்கள் ஏராளம்.

ஆட்டோ டிரைவர், பேப்பர் போடுபவர், கூலித் தொழிலாளி , பூ விற்பவர், துப்புரவுத் தொழிலாளி என்று ஏக்கத்தோடு பார்ப்பவர்களை நான் மதித்து, அவர்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்துள்ளேன். அதுமட்டுமல்லாமல், அவர்களால் தங்கள் பிள்ளைகளின் நடன அரங்கேற்றத்துக்கு உடைகள்கூட வாங்க முடியாது. அதற்கும் நானே ஏற்பாடு செய்து, அவர்களை அரங்கேற்றம் வரை செய்து வைத்திருக்கிறேன். அது மட்டுமல்லாமல், என்னிடம் கட்டணம் கட்டிக் கற்கும் பிற வசதியான வீட்டுக் குழந்தைகளோடு அவர்களையும் நடுவில் சேர்த்து ஒன்றாக ஆட வைப்பேன். இதன் மூலம் அவர்களிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையைப் போக்கிவிடுவேன். என்னைப் பொறுத்தவரை என்னிடம் கற்றுக் கொள்ளும் குழந்தைகள் அனைவரும் ஒன்றே. இந்தச் சமத்துவத்தை நினைத்து ஏழைப்பெற்றோர் கண்கலங்குவார்கள். அப்படி அவர்களது குழந்தைகள் நடனம் கற்று சிறப்பாக ஆடி இருக்கிறார்கள். சிலர் கற்றுக் கொண்டு வெளியே சென்று நடனப்பள்ளியை நடத்துகிறார்கள்.

ஏழைப்பிள்ளைகளுக்கு உதவும் எனது இந்த விருப்பத்தில், அவர்களுக்கு உடைகள் தைத்துக் கொடுக்கும் தையல்கலைஞர், ஒப்பனைக்கலைஞர் அனைவருமே என்னிடம் குறைவாகவே பணம் பெற்றுக் கொள்வார்கள். இப்படி எனக்கு ஆதரவாக இருந்து உதவி செய்வார்கள். இந்தப் பணியில் அவர்களது பங்கும் இருக்கும். 'நீங்கள் எவ்வளவோ செய்கிறீர்கள்... இது எங்கள் பங்காக இருக்கட்டும்' என்று அவர்கள் குறைந்த அளவே ஊதியம் வாங்கிக் கொள்வார்கள். இப்படிப் பலரும் உதவி செய்வதால் தான் என்னால் இதைச் செய்ய முடிகிறது.

அந்தக் குழந்தைகளில் 500 பேரைக் கொண்டு, திருவையாறில் தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளுக்கு கின்னஸ் சாதனை படைக்கும் நடன நிகழ்ச்சியை நடத்தினோம். வாராணசியில் 'சிவதாண்டவம்' என்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை நடத்தினோம். பத்தாயிரம் பேர் ஆடிய அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் குழந்தைகள். இப்படிக் குழந்தைகளால் நான் பெற்ற மகிழ்ச்சி ஏராளம்'' என்கிறார் பார்வதி ரவி கண்டசாலா.

-அருள்செல்வன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com