டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'யாரு போட்ட கோடு'. பிரபாகரன், மீனாட்சி மெகாலி, துகின் சே குவேரா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், லெனின் வடமலை. படம் குறித்து இயக்குநர் பேசும்போது, ''நாம் பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால், முதல் முத்திரை அழுத்தமாகப் பதிய வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக விறுவிறுப்பான திரைக்கதை ஒன்றை அமைத்தேன்.
எல்லோரும் எதாவது ஒரு நேரத்தில் சந்திக்கிற பிரச்னை இந்தக் கதையில் இருக்கும். பணக்காரனையோ, கோடீஸ்வரனையோ, பலம் பொருந்திய தாதாவையோ எங்கேயாவது சந்திப்போம். அவர்கள் நமக்கு உதவுவார்கள். இல்லையெனில், நமக்கே எதிராகத் திரும்புவார்கள். அப்படி ஒரு சூழல்தான் கதை.
இது வாழ்க்கையின் அசல் முகமாக இருக்கும். என் முதல் படத்தில் குறைகளோ, பிழைகளோ இருக்கலாம். எதைப் பற்றியும் விமர்சனம் செய்யவோ, குறைகளைச் சுட்டிக்காட்டவோ, நான் படம் எடுக்கவில்லை. எனக்குள் இருக்கும் நல்ல சினிமா கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஓர் அடித்தளம். அவ்வளவுதான். சமூகத்தில் காலங்காலமாகப் புரையோடிக் கிடக்கின்ற சமூக அவலங்களை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
சமூக சீர்கேட்டிற்கும், மக்களின் பிரிவினைக்கும் துணை நிற்கின்ற அனைத்தையும் அடியோடு அகற்றவேண்டும் என்பதை திரைக்கதையின் சுவாரஸ்ய பகுதியாகச் சேர்த்திருக்கிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.