வரலாற்று ஆவண மையம்

ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு, கலாசார நாகரிகத்தை மக்களின் வாழ்க்கை முறைகளில் அறியலாம். அந்த வகையில், மனித வளர்ச்சியில் போக்குவரத்துச் சாதனங்களுக்கு முக்கியப் பங்குண்டு.
வரலாற்று ஆவண மையம்
Updated on
3 min read

ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு, கலாசார நாகரிகத்தை மக்களின் வாழ்க்கை முறைகளில் அறியலாம். அந்த வகையில், மனித வளர்ச்சியில் போக்குவரத்துச் சாதனங்களுக்கு முக்கியப் பங்குண்டு. அதைத்தான் கவிஞர் கண்ணதாசனும் தனது திரைப்பாடலில், 'பறவையைக் கண்டான்... விமானம் படைத்தான்...' எனக் குறிப்பிடுகிறார்.

ரயில் பயணம் என்பது சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்துக்கு உரியவையாகப் பார்க்கப்பட்ட காலம் போய் தற்போது அனைவருமே ரயில் பயணத்தைத் தவிர்க்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.  ரயில் என்றால் புகைவிட்டபடி 'ஜிக்கு புக்கு' என தண்டவாளத்தில் செல்லும் என்ஜின் மற்றும் பெட்டிகளே நினைவுக்கு வரும்.

அந்த ரயில் எப்படிக் கண்டறியப்பட்டு படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று உயர்நிலையை அடைந்துள்ளது என்பதை ஒரே இடத்தில் பார்த்துப் பரவசப்படும் வகையில், 'சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலை (ஐ.சி.எஃப்.) வளாகத்தில் அமைந்துள்ள ரயில் அருங்காட்சியகம்' அமைந்துள்ளது.

2002- ஆம் ஆண்டில் 6.25 ஏக்கரில் அமைக்கப்பட்ட ரயில் அருங்காட்சியகத்தில் இந்திய ரயில்வே துறை, தெற்கு ரயில்வே துறையின் வரலாற்றை தற்கால- எதிர்காலத் தலைமுறையினர் அறியும் வகையில் அரிய பல சாதனங்கள் அணிவகுத்துள்ளன.

 ரயில்வே வரலாற்றை விளக்கும் பிரிவில் மர ரயில் மாதிரி, இரும்பாலான சென்னையின் முதல் ரயில் என்ஜின் உள்ளிட்டவை பார்ப்போரை வியப்படையச் செய்யும். கடலில் இருந்து படகை கரைக்கு இழுத்துச் செல்ல மனிதர்கள் பயன்படுத்திய மரத்தாலான தண்டவாள அமைப்பே பிற்

காலங்களில் இரும்புத் தண்டவாளத்தில் ரயில் என்ஜின் ஓடுவதற்கான அடித்தளமாகியிருந்ததையும் கண்முன் தத்ரூபமான மாதிரிகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கடுத்துள்ள டைமண்ட் ஜூப்ளி பிரிவு, ரயில்கள் காட்சிப் பிரிவில், 1800-களில் இருந்த ரயில்கள் முதல் தற்போதுள்ள மெட்ரோ வரை காணலாம். அதனுடன் ரயில் நிலைய தொலைபேசி, பயணச்சீட்டு அச்சிடும் இயந்திரம், ரயிலுக்கான கையால் காட்டப்படும் சிக்னல் விளக்கு, ரயில் வருவதை அறிய உதவும் தொலைநோக்கி, வானொலி எனப் பார்க்க பார்க்க வியப்பை ஏற்படுத்தும் விதவிதமான சாதனங்கள் கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்லும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் எத்தனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன என்பதை விளக்கும் சிறிய காட்சி அமைப்பும் அனைவரையும் கவர்வதாகவுள்ளது. அத்துடன் கொல்கத்தா மெட்ரோவுக்கு சென்னையில் தயாரான முதல் ரயில் பெட்டியும், வந்தே பாரத், அம்ரித், அதிநவீன ரயில் பெட்டிகளின் மாதிரிகளும் வியக்க வைக்கின்றன.

  வெறும் உலோகம் சம்பந்தமான, ரயில் சம்பந்தமானவற்றையே பார்த்து அலுத்துப் போகக் கூடாது என்பதற்காக தற்போது புதிதாக ரயில்வே சம்பந்தப்பட்ட ஓவியப் பிரிவு, உபயதாரர்கள் ஓவியப் பிரிவு, ரயில்வே வரலாறு, சிறப்புகளை விளக்கும்  திரையரங்கம் ஆகியவை  ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஓவியப் பிரிவில் அந்தக் கால ஆங்கிலேய ரயில்வே ஆர்வலர்கள், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் வரைந்த ரயில் ஓவியங்கள் காண்போரைக் களிப்படையச் செய்கின்றன.

  அதற்கடுத்துள்ள பகுதியில் பழைய ரயில் நிலைய மாதிரியும், சிறுவர்களுக்கான தண்டவாளத்தில் இயக்கப்படும் ரயிலும் ஒரு சுற்று வந்தாலும் குதூகல அனுபவத்தை ஏற்படுத்தும். அத்துடன், உழவுக்குப் பயன்படுத்தப்பட்ட ரயில் என்ஜின் முதல் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட என்ஜின் வரை நேரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உதகை ரயில் செயல்படும் மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.

 1856- ஆம் ஆண்டில் சென்னையில் இயக்கப்பட்ட ரயில் என்ஜின், அதன் ரயில் தண்டவாள மாதிரி அமைப்பு ஆகியவற்றை அருங்காட்சியகத்துக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரயில் ஆர்வலர் அண்மையில் அனுப்பி வைத்துள்ளார். சுமார் 30 அடி பரப்பில் அமைக்கப்பட்ட அந்த மாதிரி ரயில் தண்டவாளத்தில் ரயில் நிலையம், சிக்னல் எனப் பழைய சென்னையின் அனைத்து அம்சங்களும் அப்படியே இடம் பெற்றிருப்பது தனித்துவமாகும்.

1964 முதல் 1969 வரையில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஆஸ்திரேலியப் பேராசிரியர் அயன்மென்னிங் என்பவர் அனுப்பிவைத்த ரயில் பயணச்சீட்டு முதல் அவற்றின் பல அரிய புகைப்படங்களும் சென்னையின் அதிசய வரலாற்றை  விளக்கும் வகையில் உள்ளது.

 மாதிரி ரயில் தண்டவாளத்தில் சிறிய என்ஜின் இயங்குவது பார்வையாளர்களைக் கவர்கிறது.

1900-ஆம் ஆண்டில் சென்னை ரயில்வேயில் பணிபுரிந்த ஆங்கிலேய அதிகாரி பயன்படுத்திய விடியோ காமிரா, அதில் எடுக்கப்பட்ட காட்சிகள் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரியவகை விடியோ காமிராவும், அதனுடன் உள்ள புகைப்படக் கருவியும் ஆயிரம் கதை கூறும் வகையில் பல ஆவணப் படங்களை உள்ளடக்கியுள்ளன.

 ரயில் சார்ந்த பழைய தொழில்நுட்பம் முதல் தற்கால நவீன தொழில் நுட்பம் வரையில் தொழில்நுட்ப மாணவர்களுக்கான அம்சங்களும் புதிதாக இடம்பெற்றுள்ளன. அதன்படி ரயில் என்ஜின் தொழில்நுட்பம், ரயில் பெட்டிகளில் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பம், விமான நிலைய உள்கட்டமைப்பு, ரயில் பெட்டிகளில் பயன்பாடு எனப் பல கற்பித்தலுக்கானவையும் விளக்கமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதனால், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டு, தொழில்நுட்பத்தை அறிந்து செல்கின்றனர்.

 இயங்கும் பழைய ரயில் என்ஜின் உள்ளிட்ட 30 சாதனங்களும், உள்ளரங்குகளில் ரயில் சம்பந்தப்பட்ட சாதனங்கள் 35 மற்றும் 125 அரிய ஓவியங்கள், 55 பழைய ரயில்வே பொருள்களால் வடிவமைக்கப்பட்ட நவகிரகங்கள், பறவை, காளை போன்றவையும் உள்ளன.

இந்த அருங்காட்சியகம் குறித்து அதன் கண்காணிப்பாளர் ஹன்சல் ஆபெர் கூறுகையில், 'உலக அளவில் சென்னை ரயில் அருங்காட்சியகம் புகழ் பெற்றதாக உள்ளது. ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள், தாங்கள் சென்னைக்கு முன்பு வந்தபோது ரயில் சார்ந்து எடுத்த புகைப்படங்கள், ரயில் சார்ந்த தகவல்களை அளித்து பாதுகாக்குமாறு கூறிவருகின்றனர்.

தற்போது ரயில் வரலாற்றை விளக்கும் குறும்படங்கள் திரையிடப்பட்டு பார்வையாளர்களுக்கு விளக்கப்படுகிறது. மாணவர்கள், 12 வயதுக்கு உள்பட்டோருக்கு ரூ.15 கட்டணமும், பொதுமக்களுக்கு ரூ.40-ம் வசூலிக்கப்படுகிறது. 3 வயதுக்கு உள்பட்டோருக்குக் கட்டணம் கிடையாது.

சிறிய மாதிரி ரயில்கள், கீசெயின் உள்ளிட்டவை ஸ்டாலில் விற்கப்படுகின்றன. இவற்றின் விலை ரூ.60 முதல் ரூ.60 ஆயிரம் வரையில் உள்ளது'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com