வாரணாசியில் 1860-களில் தமிழர்களின் குடியேற்றம் ஏற்பட்டது. அங்கு எட்டையபுரம் புரோகிதர்கள் சென்றதால், தமிழர்கள் மொழி பிரச்னை ஏதுமின்றி புண்ணியக் காரியங்களைச் சிறப்பாகச் செய்தனர்.
அந்தச் சேவை இன்றும் தடையின்றி நடைபெறுகிறது. 5 குடும்பத்தாருடன் தொடங்கப்பட்ட சமய, சமூகச் சேவையில் முன்னின்ற எட்டையபுரம் மன்னர், காரைக்குடி நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆகியோரின் சேவைகள் இன்றும் போற்றப்படுகின்றன.
வியாபார ரீதியாத எண்ணிலடங்காமல் செல்வங்களைத் தேடியபோதும் மூதாதையர்கள், பெற்றோருக்குச் செய்யக் கூடிய புண்ணியக் காரியங்களைத் தவறாமல் காரைக்குடியில் வசிக்கும் நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்து வருகின்றனர்.
இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாரணாசிக்குச் செல்லும்போது, தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளுக்காக நகரத்தார் ஒன்றுகூடி ஆலோசித்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். 1863-இல் வாரணாசியில் தங்கும் இடத்தை அமைத்தனர். அன்று நகரத்தார் ஊன்றிய விதை ஆலவிருட்சமாகி வளர்ந்து நிழல் தரும் காசி நகரத்தார் சங்கமாக உருவெடுத்தது.
சமய காரியங்கள் நடக்கும் நிலையில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வாரணாசிக்குச் செல்லும் தமிழர்கள் தங்கள் முன்னோர்களுக்கு புண்ணியக் காரியம் செய்ய அவர்களது ரத்த உறவுகளின் பெயர்களையும், விவரங்களையும் ஹிந்தி மொழியில் பண்டிட்டுகளிடம் கூற முடியாமல் தவித்தனர்.
1866-ஆம் ஆண்டில் மறைந்த எட்டையபுரம் மன்னரின் புண்ணிய காரியம் செய்ய வாரணாசிக்குச் சென்ற எட்டையபுரத்தைச் சேர்ந்த தீட்சிதர் சிரமப்பட்டார். அவர் ஊர் திரும்பியதும் மன்னரைச் சந்தித்து, தமிழர்கள் வாரணாசியில் படும் சிரமங்களை எடுத்துரைத்தார்.
இதுகுறித்து மன்னர் ஆலோசித்தார். பின்னர், 1867-இல் எட்டையபுரத்தில் உள்ள நூற்றுக்கும் அதிகமான புரோகிதர்களை அழைத்து ஆலோசித்தார். அவர்களில் ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெற்ற ஐந்து பேரை உடனடியாகப் புறப்பட்டு, வாரணாசிக்குச் செல்ல உத்தரவிட்டார்.
வாரணாசிக்குச் சென்றவர்களில் பாரதியாரின் மாமாவும் இருந்தார். 1898-இல் பாரதியாரும் வாரணாசிக்குச் சென்று, தனது மாமாவின் வீட்டில் தங்கினார். வாரணாசி அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சேர முயற்சித்து, நுழைவுத் தேர்வில் முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்தார். பின்னர், அவர் சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளைப் படித்தார்.
1901-இல் தில்லிக்கு விஜயம் செய்த எட்டயபுரம் மகாராஜா திரும்பும் வழியில், வாரணாசிக்குப் பயணமானார். அவர் திரும்பும் வழியில் தான் அனுப்பி வைத்த எட்டையபுரம் புரோகிதர்களைச் சந்தித்து, நலம் விசாரித்தார். அவர் அங்கிருந்த பாரதியாரை தன்னுடன் அழைத்து வந்தார்.
உ.காஜா மைதீன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.