'சென்னை நேரு விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற 23-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் வெள்ளி, தங்கப் பதக்கம் என மொத்தம் 3 பதக்கங்களை வென்றேன். 3,000 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் சாதித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
இதனால் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தென்கொரியத் தலை நகர் சியோலில் நடைபெற உள்ள மூத்தோருக்கான உலகத் தடகளப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளேன். உலகப் போட்டியில் பதக்கம் வெல்வேன்'' என்கிறார் விஜயலட்சுமி.
ஈரோடு மாவட்டம், புஞ்சைப் புளியம்பட்டி அருகே நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரான அவரிடம் பேசியபோது:
'பவானி அருகே ஆப்பக் கூடலில் 4 சகோதரிகள், ஒரு சகோதரர் எனப் பெரிய குடும்பத்தில் பிறந்த எனக்கு, விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற தணியாத ஆசை.
பள்ளிப் பருவத்திலேயே தடை தாண்டி ஓட்டம், குண்டு எறிதல், தட்டு எறிதல், சங்கிலிக் குண்டெறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தேசிய அளவில் பங்கேற்றுப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறேன்.
திருமணத்துக்குப் பின்னரும், வழக்குரைஞரான என் கணவர் ராஜகோபால் அளித்த ஊக்கத்தால், மூத்தோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்றேன். 35 வயதுடைய மூத்தோர் தடகளப் போட்டியில் தேசிய அளவில் குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றேன். மலேசியாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் கம்பு ஊன்றித் தாண்டுதலில் தங்கம், சங்கிலிக் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றேன்.
அதன்பின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால் வெளிநாடுகளுக்குச் செல்லாமல், இந்தியாவுக்குள் நடைபெறும் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தேன். தினமும் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகிறேன். சியோலில் நடைபெறும் உலகத் தடகளப் போட்டியில் சாதித்து நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன்' என்கிறார் விஜயலட்சுமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.