'பிச்சை எடுக்கும் யானையின் கண்களில் அசைகிறது பிறந்த பெருவனம்....'' என்ற மலையாளக் கவிஞர் அய்யப்பனின் கவிதைதான் இந்தக் கதைக்கான முதல் உத்வேகம். கதைக்காக கவிதையை மேற்கொள் காட்டி பேசத் தொடங்குகிறார் பிரகபல். 'ஜாக்கி' படத்தின் இயக்குநர். ஏற்கெனவே 'மட்டி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.
ஆடு, அதைச் சுற்றிய மாந்தர்கள் பின்னணியில் ஒரு கதை... எப்படித் தொடங்கியது?
சாப்பாடு, சம்பளம், துயரம், சந்தோஷம் எனக் கிடைக்கும் வாழ்வு, எல்லோருக்கும் அமைவது இல்லை. கனவு, லட்சியம், வேட்கை எனத் துரத்தும் வாழ்வில் எங்கேயோ போய் நிற்கிறோம். எல்லாம் இருந்தும் மனசு, அன்புக்கு ஏங்குகிறது. வன்மம் இல்லாத உலகுக்குத் தவிக்கிறது. எப்போதும் பரிசுத்தமான காதலுக்குக் தவிக்கிறது. இப்படியான ஒரு பயணத்தில், மதுரைப்
பக்கம் கிராமப்புறங்களில் சுற்றிக் கொண்டிருந்தேன். ஐந்து மாதங்கள் வரையான தனிமை பயணம் அது. சாப்பாடு, தண்ணீர் என எதுவும் பிடிக்காது. கிடைத்ததைச் சாப்பிட்டு வாழ்கிற அளவுக்கு ஏக்கம் சுற்றும். அப்போதுதான் ஒரு கிடா ஆட்டின் பின்னால் ஒரு லைன் பிடித்தேன். கிடாச் சண்டையைச் சுற்றி இருக்கும் அரசியல், அதன் மாந்தர்கள் இப்படி லைன் பிடித்துச் சுற்றினேன். பந்தயம் நடக்கும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று எல்லாவற்றையும் பார்ப்பேன்.
அதனுள் இருக்கும் அரசியல், துரோகம், காதல் எல்லாவற்றையும் பிடித்து ஒரு கதை எழுதினேன். அதற்காகவே ஒரு கிடாவை வாங்கி வளர்த்து, பயிற்சிகள் அளித்து.... இப்படித்தான் இந்தக் கதை உருவானது. அந்த கிடாவின் மன நிலைப்பாட்டை சாமானிய வாழ்க்கையில் ஒருங்கிணைத்துப் பார்த்தேன்.
ஒரு கிடா நம் கிராமத்து மனிதர்களோடு வாழ்ந்தால் எப்படியிருக்கும்... அங்கேயிருந்துதான் இந்தக் கதைக்கான புள்ளி தொடங்கியது. கிடா, ஹீரோ, வில்லன், காதல் என இந்தக் கதை சுற்றி வரும். தன் ஊரைத் தாண்டாத ஒருவனுக்கு ஒரு கிடாவின் அன்பு கிடைத்தால்.... இதுதான் இதன் புள்ளி.
அடுத்த கட்ட நகர்வாக என்ன நிகழும்...
கிடா சண்டை என்பது தென்னிந்தியாவின் கலாசார விளையாட்டாக இருந்தாலும், தமிழ்நாட்டில் முக்கியமாக மதுரையில் மிகவும் வேரூன்றிப்போய் இருந்தது. அதுபோல் மதுரை மக்களின் வாழ்வியல், அவர்களின் பேச்சுவழக்கு, அவர்களுடைய குணாதிசயங்கள் என எல்லாமே மற்ற நகரங்களில் இருந்து மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது.
இந்த நுணுக்கங்களை எல்லாம் எதார்த்தம் குறையாமல் படத்திற்குள் கொண்டுவர கதாநாயகனையும், வில்லனையும் மதுரை நகரத்துக்குள் அனைத்து இடங்களுக்குள்ளும் நடமாடவிட்டு, பல்வேறு ஆட்களுடன் பேசவிட்டு, கொஞ்சம், கொஞ்சமாக மதுரை மக்களோடு, மக்களாக மாற்றினேன். இப்படியாக ஒரு பக்கம் கிடாவுடனும், மறுபக்கம் மதுரை மக்களுடனும் பழக வைத்து, அவர்களை மதுரை தன்மைக்குள் கொண்டுவர எனக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது.
அதற்குப் பிறகுதான் கிடாக்களும், இவர்களின் குரலை கேட்டவுடனே ஓடி வருவது, தாவி குதிப்பது எனச் சொல்வதை எல்லாம் கேட்கத் துவங்கியது. மதுரை மக்கள், கிடா சண்டை, மதுரையின் களம் என எல்லாவற்றுடனும் நான் ஒன்றிப்போயிருந்தேன். அதன் காரணமாக அந்த கலாசாரத்தை, மதுரை மக்களின் மற்றும் கிடா கட்டாரிகளின் உதவியோடு, மிகவும் நேர்த்தியோடும், உண்மைக்கு நெருக்கமாகவும் என்னால் படமாக்க முடிந்தது.
கதையின் உள்ளடக்கமாக என்ன இருக்கும்...
வாலை ஆட்டும் ஒரு நாய்க்குள், பெயர் சிணுங்கும் கிளிக்குள் கூட உறங்கும் முயலுக்குள்... ஒரு காதலை, பிரிவை மீட்டெடுக்கிறான் மனிதன். காலம் முழுக்க ஜல்லிக்கட்டு காளைகளைத் தயார் செய்வதிலேயே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பறவைகளுக்கான ஆராய்ச்சிக்காவே தன்னை அர்ப்பணித்தவர்கள், பாம்புகளின் புதிர்களைத் தெரிந்து கொள்வதையே பயணமாக்கி கொண்டவர்கள்...
இப்படி ஏக மனிதர்கள் ஒரு அதிசயம் போல் நம்மைக் கடந்து கொண்டே இருக்கிறார்கள். எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மனிதர்களின் பெரும் பிரச்னை. நம்பிக்கை, அன்பு எல்லாம் பொய்யாகும் போதுதான், எல்லாம் கசந்து போகிறது. விலங்குகளிடம் அது எதுவும் இல்லை. அதன் அன்பில் அப்பழுக்கு இல்லை. இந்த மன நிலையை விலங்குகளோடு வாழும் பலரிடம் நான் பார்த்திருக்கிறேன்.
நம்பிக்கை இன்மை நிறைந்த மனித உறவுகளை மனதளவில் துரத்தியவர்கள், பிராணிகளின் பேசா அன்பை நிழலாக்கிக் கொள்கிறார்கள். இங்கே நிகழ்வதும் அப்படித்தான். இந்த பூமியோடும், மனித வாழ்க்கையோடும் பிற உயிர்களுக்கு இருக்கும் தொடர்பு என்பது மிக முக்கியமானது.
நமக்கு தெரிந்ததெல்லாம் நேரடியாக, அதுவும் உயிரினங்களை அழித்து அடையும் நன்மைகள்தான். ஆனால் மறைமுகமாக நாம் உயிர் வாழவே இந்த உயிரினங்கள் மிகவும் அவசியமாக இருப்பதை நாம் அறிந்திருக்கிறோமா? எறும்பிலிருந்து யானை வரை நாம் வாழும் இந்தப் பூமியின் சுற்றுச்சூழலுக்கும், நம் உயிருக்கும் பல வகையில் அதன் வழக்கமான நடவடிக்கைகள் மூலம் உதவுகின்றன.
ஆடு வளர்ப்பு தொடங்கி படப்பிடிப்பு வரைக்குமான பயணம் சவாலாக இருந்திருக்குமே....
ஆட்டை நடிக்க வைப்பதில் எந்தச் சிரமமும் இல்லை. அதைப் பழக்குவதில்தான் அதிக நேரம் போனது. கதை முடிவானதுமே ஓர் ஆட்டை வாங்கி வளர்க்கத் தொடங்கி விட்டோம். அதற்கு பெயர் வைத்து அதைச் சொல்லி அழைத்தால் அது திரும்பிப் பார்ப்பது வரை பழக்கி விட்டோம்.
அதோடு அதை புரிந்து கொண்டு நடிக்கிற நடிகர்கள் தேவை. உண்மையான கிடா சண்டை பந்தயத்தில் கதாநாயகன் யுவன் கிருஷ்ணாவையும், அவருடைய கிடாவையும் போட்டியிட வைத்தேன். அந்த பந்தயத்தில் அவர்கள் இருவரும் முதல் பரிசுக்கான பதக்கத்தை வென்று வந்தார்கள். அந்த
பந்தயத்தின் போது தான் கதாநாயகனுக்கும், அந்த கிடாவுக்குமான உறவையும், பிணைப்பையும் உணர்ந்தேன். கிடா கட்டாரிகளோடு பேசி, அவர்களுடைய கதைகளை கேட்டு, அவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை எல்லாம் எடுத்து நிறைய உண்மைக்கு நெருக்கமாகவே, இந்தக் கதையை எழுதியுள்ளேன். எல்லாமே இப்போது மன நிறைவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.